பிரதம செயலாளர் செயலக கொத்தணியின் 2024 ஆம் ஆண்டின் கடமை செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நிகழ்வு

2024 ஆம் ஆண்டின் கடமைச் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நிகழ்வானது வடக்கு மாகாண பிரதம செயலாளர் திரு.எஸ்.எம்.சமன் பந்துலசேன அவர்களின் தலைமையில் 01.01.2024 அன்று திங்கட்கிழமை காலை 8.30 மணிக்கு வடக்கு மாகாண சபை வளாகத்தில் நடைபெற்றது.

இவ் வைபவத்தில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், வடமாகாண பேரவைச் செயலாளர், பிரதிப்பிரதம செயலாளர்கள், ஆணையாளர் – மோட்டார் போக்குவரத்து திணைக்களம், மாகாண இறைவரி திணைக்களம், ஏனைய பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் வடக்கு மாகாண சபை வளாகத்திலுள்ள அலுவலகங்களின் உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

வடக்கு மாகாண பிரதம செயலாளர் அவர்களால் தேசியக்கொடி ஏற்றப்பட்டதுடன் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரால் மாகாணக்கொடியும் ஏற்றி வைக்கப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது. தொடர்ந்து பங்கேற்பாளர்களது இரண்டு நிமிட மௌன அஞ்சலிக்குப் பின் 2024 ஆம் ஆண்டிற்கான அரச சேவைக்கான சத்தியப்பிரமாணம் பிரதிப்பிரதம செயலாளர் ஆளணியும் பயிற்சியும் அவர்களின் நெறிப்படுத்தலில் அனைத்து உத்தியோகத்தர்களாலும் சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வும் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் ‘வலுவான எதிர்காலத்திற்கான தொடக்கவுரை’ எனும் தொனிப்பொருளில் உரையாற்றிய பிரதம செயலாளர் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் ‘முதலில் கடந்த வருடம் பொருளாதார வளர்ச்சியானது மறைப் பெறுமதி வீதமாக இருந்த நிலையிலிருந்து இந்த வருடம் நேர் பெறுமதி வீதமாக உயர்வடைந்திருக்கிறது இதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அனைத்து அரச உத்தியோகத்தர்களுக்கும் நன்றியை தெரிவித்ததுடன் தொடர்ந்து வடக்கு மாகாண சபை பிரதேச ரீதியாக குடும்பங்களின் வறுமை ஒழித்தலுக்கு மாகாணத்தில் மேற்கொள்ளவுள்ள விடயங்களையும் குறிப்பிட்டார்.

மேலும் கடந்த வருடம் வடக்கு மாகாணம் வௌ;வேறு செயற்பாடுகளுக்காக பல விருதுகளை பெற்றுள்ளது என கூறியதுடன் தொடர்ந்தும் அவ்விருதுகளின் நிலையை தக்கவைத்துக்கொள்ள நாம் செயற்பட வேண்டும் என குறிப்பிட்டார். மேலும் மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பாகவும் குறிப்பிட்டார். இவ்வாறாக ‘ வறுமையை ஒழித்தல், வேலையின்மையை குறைத்தல், உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்தல், மாகாண இறைவரி வருமானத்தை அதிகரித்தல்’போன்ற அரசாங்கத்தின் கொள்கைப்பிரகடனத்திற்கு அமைவாக செயற்பாடுகளில் கவனம் செலுத்த வேண்டும் என குறிப்பிட்டதுடன் 2025ஆம் ஆண்டு கண்ணிவெடி அற்ற மாகாணமாக வடக்கு மாகாணமாக மாற்றியமைக்கப்படவுள்ளது இருப்பினும் அந்த சமயத்தில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்ட 1500 பெண்களின் எதிர்கால தொழில் வாய்ப்பினை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர்களின் குடும்ப வருமானங்களை அதிகரிக்கவும் அதேசமயம் மாற்றுவலுவுள்ளோரின் கல்வி, தொழில் வாய்ப்பு போன்றவற்றை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டதுடன் அனைவருக்கும் புதிய ஆண்டிற்கான வாழ்த்து செய்தியினையும் தெரிவித்துக் கொண்டார்.

இந் நிகழ்வில் உரையாற்றிய உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் அவர்கள் கருத்து தெரிவிக்கையில், நாம் ஒவ்வொருவரும் கடமைகளை பொறுப்புடனும் அர்ப்பணிப்புடனும் செயற்பட்டு மற்றவர்களை உயர்த்தும்வகையில் எமது பணி செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டு தனது புது வருட வாழ்த்துச் செய்தியுடன் 9.30 மணிக்கு இவ் ஆரம்ப நிகழ்வு நிறைவு பெற்றது.