பனை எங்கள் சூ ழல், பனை எங்கள் பண்பாடு, பனை எங்கள் பொருளாதாரம் என்ற தொனிப் பொருளில் பனை மான்மிய நிகழ்வு மிகவும் விமர்சையாக நல்லூர் சங்கிலியன் பூங்காவில் 22.07.2019ம் திகதி தொடக்கம் 28.07.2019ம் திகதி வரை காலை 9.00 மணி தொடக்கம் இரவு 9.30 மணிவரை நடைபெற்றது.
முதலாம் நாள் (22.07.2019) ஆரம்ப நிகழ்வுகள் கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளர் திரு பொ.வாகீசன் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது. இன் நிகழ்வில் பிரதம விருந்தினராக கூட்டுறவு அமைச்சின் செயலாளர் திரு.இரா.வரதீஸ்வரன் அவர்கள் கலந்து கொண்டு கண்காட்சிக்கூடங்களை திறந்து வைத்து பார்வையிட்டார்.
அத்துடன் யாழ்ப்பாண மாநகரசபை மேயர் இ.ஆனோல்ட் மற்றும் பனை அபிவிருத்திச் சபையின் தவிசாளர் என்.இராசேந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக வருகைதந்திருந்தனர். அன்றைய தினம் ‘தாலம்’ சஞ்சிகையும் பனை மான்மிய பாடல் இறுவெட்டும் வெளியிடப்பட்டன. மதியம் ‘விபரண பனங்கூடல்’ பனை நடுகை சாவகச்சேரி பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கத்தினால் பனை விதைகள் நாட்டப்பட்டன.
தொடர்ந்து ஒவ்வொரு நாளும் காலையிலிருந்து மாலைவரை கண்காட்சிக் கூடங்கள் மக்கள் பார்வைக்கு திறந்திருந்தன. மாலையில் 6.30 மணி தொடக்கம் 9.30 மணிவரை கலைநிகழ்வுகள் இடம் பெற்றன.
இறுதி நாள் நிகழ்வாக 28.07.2019ம் திகதி மாலை 4.30 மணிக்கு ஆரம்பமாகியது. அன்றைய தினம் அங்கத்தவர்கள் கௌரவித்தல் சிறப்புரை, பரிசில் வழங்கல் நிகழ்வுகள் இடம் பெற்றன. அந்நிகழ்வு கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளர் திரு பொ.வாகீசன் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது. இறுதி நாள் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் அவர்களின் செயலாளர் திரு.சி.சத்தியசீலன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள். பனை அபிவிருத்தி கூட்டுறவு அமைப்புக்களின் தலைமைகள் 8 விடயங்கள் அடங்கலான பிரகடனமொன்றை பனையைப் பாதுகாக்கவும் தமது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் எனச் செய்தனர்.
தொடர்ந்து கலை நிகழ்வுகளாக நடனம் நாடகம், பட்டிமன்றம் இடம் பெற்றதுடன் பனை எழுச்சி வார நிகழ்வுகள் நிறைவுக்கு வந்தது.