அண்மைக் காலத்தில் நிலவிய அதிக வெப்பநிலை காரணமாக நாடு முழுவதும் தென்னைச் செய்கையில் வெண் ஈக்களின் (Aleurodicus disperse) தாக்கம் பாரிய அளவில் அவதானிக்கப்பட்டிருந்தது. இவ் வெண் ஈக்களின் தாக்கத்தை முகாமைத்துவம் செய்யும் முகமாக வெண் ஈக்களைத் தாக்கும் ஒட்டுண்ணி (Encarsia gaudulapae) விவசாயத் திணைக்களத்தினால் வடமாகாண தென்னம் தோட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றது.
இதன் தொடர்ச்சியாக 15.04.2024 ஆம் திகதியன்று வவுனியா மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் பொ.அற்புதச்சந்திரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலின் கீழ் சமனன்குளம் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் திரு. மகாலிங்கம் என்பவரது தோட்டத்திலும், முருகனூர் மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்திலும் குறித்த ஒட்டுண்ணியானது விடுவிக்கப்பட்டிருந்தது.
சமிந்த பிரேமரத்ன அவர்கள் கன்னொருவை மத்திய விவசாயத் திணைக்களத்தின் பயிர்ப் பாதுகாப்புச் சேவையின் மேலதிக பணிப்பாளர் பிரதிநிதியாக குறித்த விடுவித்தலில் பங்குபற்றியிருந்ததுடன் தென்னை அபிவிருத்திச் சபை உத்தியோகத்தர் மற்றும் விவசாயத் திணைக்கள தொழில்நுட்ப உத்தியோகத்தர்களும் பங்குபற்றியிருந்தனர்.