சேதனச் செய்கை தொடர்பான வயல்விழா

சேதன விவசாயச் செய்கை தொடர்பான வயல் விழாவானது உருத்திரபுரம் விவசாயப் போதனாசிரியர் திரு.ம.மகிழன் அவர்களின் தலைமையில் உருத்திரபுரம் வடக்கைச் சேர்ந்த திருமதி.தே.இரஞ்சிதராணி அவர்களின் வயலில் 22 மார்ச் 2019 அன்று நடாத்தப்பட்டது.

இந் நிகழ்வில் வடமாகாண விவசாயப் பணிப்பாளர் திரு.சி.சிவகுமார் அவர்கள் பிரதம விருந்தினராகவும், வட பிராந்திய விவசாய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்தின் மேலதிக பணிப்பாளர் (ஆராய்ச்சி) கலாநிதி.செ.ஜே.அரசகேசரி, கிளிநொச்சி மாவட்ட விவசாயப் பணிப்பாளர் திரு.அ.செல்வராஜா, சென்றூப் நிறுவனத்தின் பணிப்பாளர் திரு.ச.சண்முகசுந்தரம், கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் திரு.பொ.அற்புதச்சந்திரன் முதலானோர்கள்  சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து சிறப்பித்திருந்தார்கள். உருத்திரபுரம் கிராமசேவையாளர் திரு.ம.மோஹனப்பிரியன், பிரம்ம குமாரிகள் யோகா தியான நிலையத்தின் கிளிநொச்சி மாவட்டத்திற்கான இணைப்பாளர் திரு.ச.பவன், பாடவிதான உத்தியோகத்தர் பூங்கனியியல் திருமதி.லதா ஜனகன் மற்றும் விவசாயப் போதனாசிரியர்கள் வயல் விழாவிற்கு வருகை தந்து வயல் வழா சிறப்பாக நடைபெறத் தமது பங்களிப்பினை நல்கினர். உருத்திரபுரம் விவசாயப் போதனாசிரியர் பிரிவைச் சேர்ந்த கமக்கார அமைப்பு, இளம் விவசாயிகள் கழகம் மற்றும் விவசாயப் பெண்கள் அமைப்பு ஆகியவற்றின் தலைவர்கள் மற்றும் விவசாயிகள் மிக்க ஆர்வத்துடன் இவ் வயல்விழாவில் பங்குபற்றினர். இவர்கள் சேதனப் பசளை மற்றும் சேதன பீடைநாசினிகளின் தயாரிப்பு, பாவனை செய்யும் முறை பற்றிய அறிவினைப் பெற்றுக் கொண்டனர்.

சேதன பீடைநாசிகளான 3G கரைசல், உள்ளிக் கரைசல், வேப்பிலைக் கரைசல், வேப்பம் விதை மற்றும் வேப்பிலைக் கரைசல் போன்றனவும் ஜீவாமிர்தம், பீஜாமிர்தம், மண்புழுத் திரவம், மண்புழு உரம் ஆகிய சேதனப் பசளைகளும் மண் வளத்தை அதிகரிப்பதில் பங்களிப்பு செய்யும் பாதி கருக்கிய உமி, உயிர்க் கரி ஆகியனவும் விவசாயியால் தொடர்ச்சியாக உற்பத்தி செய்யப்பட்டு பயிர்ச் செய்கைக்காக உபயோகிக்கப்படுவதுடன் வயல் விழாவின் போது காட்சிப்படுத்தப்பட்டது.

விவசாயி திருமதி.தே.இரஞ்சிதராணி அவர்கள் சேதன பீடைநாசினிகள் மற்றும் சேதனப் பசளை ஆகியவற்றினை உற்பத்தி செய்யும் முறை மற்றும் பயன்படுத்தும் முறை பற்றி வயல் விழாவிற்கு வருகை தந்தோருக்கு விளக்கமளித்தார். அத்துடன் அவர் மிளகாயினைப் பொதிகளில் பயிரிட்டு அறுவடையினைப் பெறுகின்றார். அவருடைய அனுபவப் பகிர்வாகப் பொதி நாற்றுக்களைப் பிரத்தியேக கவனத்துடன் பராமரிப்பது அவசியமெனவும் தினந்தோறும் நீர்ப்பாசனம் செய்வது அவசியம் எனவும் கூறினார்.

அசோலாவானது நீர்த் தொட்டியில் பயிரிடப்பட்டிருந்தது. அசோலா பயிரிடப்பட்ட நீரானது இலை மரக்கறிகளிற்கு பசளையாகத் தெளிக்கப்பட்டது. அவ் வயல் விழாவிற்கு வருகை தந்த மாட்டுப் பண்ணையாளர் ஒருவர் அசோலாவினை மாடுகளிற்கு தீவனமாக வழங்குவதாகவும் இதன் மூலம் பாலுற்பத்தி குறிப்பிடக்கூடிய அதிகரிப்பை காட்டுவதாகவும் தெரிவித்தார். அசோலாச் செய்கையின் போது மாட்டுச் சாணகம் நீருடன் கலக்கப்படுவதனால் மாட்டுத் தீவனமாக அசோலாவினை வழங்குவதற்கு முன்பாக அதனை குறைந்தது 4-5 தடவைகளாவது நீரினால் நன்கு கழுவி வழங்கினால் மட்டுமே மாடுகள் உட்கொள்ளும் எனவும் கூறினார்.
கள விஜயத்தைத் தொடர்ந்து அவதானிப்புகளின் அடிப்படையில் கலந்துரையாடல் இடம்பெற்றது. பிரதம விருந்தினர் மற்றும் சிறப்பு விருந்தினர்களால் நிகழ்காலத்தில் சேதன விவசாயத்தினை முதன்மைப்படுத்த வேண்டியதன் அவசியத்தைப் பற்றி எடுத்துக்கூறினர். அசேதனப் பீடைநாசினிகள் மற்றும் அசேதனப் பசளைகளின் பாவனையால் ஏற்படும் சிறுநீரகக் கோளாறுகள், புற்றுநோய்கள் போன்ற தொற்றா நோய்களின் தாக்கம் தற்காலத்தில் அதிகரித்துச் செல்வது சுட்டிக்காட்டப்பட்டது.

வட மாகாண விவசாயப் பணிப்பாளர் திரு.சி.சிவகுமார் அவர்கள் பல்வகைப்பட்ட நோக்கு அணுகுமுறைக் கோட்பாடுகளை சந்தைப்படுத்தல் செயற்பாடுகளில் பின்பற்றி சேதன மரக்கறிகள் மற்றும் பழங்களின் விற்பனையை ஊக்குவிக்குமாறு கூறினார். ‘கொவி பொல செயலி’ போன்ற தற்கால நவீன தொடர்பாடல் தொழில்நுட்ப வசதிகளை உபயோகித்து அவற்றில் சேதன உற்பத்தியாளர்களின் விபரத்தினை பதிவடுவதன் மூலம் விவசாயிகளையும் கொள்வனவாளர்களையும் நேரடியாகத் தொடர்புபடுத்தி உரிய சந்தை விலையைப் பெறுவதுடன் சந்தை வாய்ப்பினை அதிகரிக்கலாம் எனவும் கூறினார். அத்துடன் சேதன உற்பத்திகளிற்கான நியாயமான சந்தை விலையினைப் பெற்றுக் கொள்வதற்காக, சேதன விவசாய உற்பத்திகளிற்கான அத்தாட்சிப்படுத்தலின் பொருட்டு பங்கேற்பு உத்தரவாத முறைமையினை அறிமுகம் செய்ய வேண்டியதன் அவசியம் பற்றி விளக்கிக் கூறினார்.

அத்துடன் விவசாய விளைபொருட்களின் தரத்தினை உறுதிப்படுத்துவதற்கான சிறந்த விவசாய நடைமுறைகள் மற்றும் அதற்கான அத்தாட்சிப்படுத்தல் பற்றியும் விளக்கமளித்தார்.
உருத்திரபுரம் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் விவசாயப் போதனாசிரியர் அவர்களின் தலைமை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் விவசாயப் பெண்கள் அமைப்பினால் காணி ஒன்று குத்தகைக்கு பெறப்பட்டு பல்வேறு பயிர்ச் செய்கைத் துண்டங்களாகப் பிரிக்கப்பட்டு விவசாயப் பெண்கள் அமைப்பின் அங்கத்தவர்களால் வேலைகள் பங்கிடப்பட்டு கூட்டு முயற்சியாகச் சேதனப் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படுகின்றது. இவ் வகையான செயற்பாடானது விவசாயப் பெண்கள் அமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் விவசாயிகளிற்கு சேதன விவசாய நடைமுறைகள் பற்றிய பயிற்சியினை வழங்கி தத்தமது பண்ணையில் சேதன விவசாயத்தை இலகுவாக மேற்கொள்வதை நோக்கமாகக் கொண்டு மேற்கொள்ளப்படுகிறது. அத்துடன் ஓர் மாதிரி சேதன விவசாயப் பண்ணையினை உருவாக்கிப் பேணுவதன் மூலம் மேலும் மேலும் அதிகளவிலான விவசாயிகளை சேதன விவசாயிகளாக மாற்றி அக் கிராமத்தில் சேதன விவசாயச் செய்கையில் ஈடுபடுபவர்கன் எண்ணிக்கைகையை அதிகரிப்பதும் இதன் நோக்கமாகும்.