ஊழல் புரியும் உயரதிகாரிகளும் தண்டிக்கப்படுவர் – ஆளுநர்

இலஞ்ச ஊழல் புரியும் அனைத்து உயரதிகாரிகளும் தண்டிக்கப்படுவார்கள் என்று கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தெரிவித்தார்.

வடமாகாண அரச சேவையில் இலஞ்ச ஊழலை ஒழிக்கும் முகமாகவும் இது தொடர்பான விழிப்புணர்வினை அரச அதிகாரிகள் , ஊழியர்களுக்கு ஏற்படுத்தும் கௌரவ ஆளுநரின் எண்ணக்கருவிற்கு அமைவாக, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சரத்துக்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் வடமாகாண கல்வித்துறையின் அதிகாரிகள் பாடசாலை அதிபர்கள் மற்றும் மாணவர்களுக்கான இலஞ்ச ஊழல் ஒழிப்பு தொடர்பான ஆரம்ப விழிப்புணர்வு செயற்திட்டம் இன்று (20) முற்பகல் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றபோது நிகழ்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே கௌரவ ஆளுநர் அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இலஞ்ச ஊழலற்ற முன்மாதிரியான மாகாணமாக வடமாகணத்தை மாற்றுவதற்கு அரச அதிகாரிகள் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்று ஆளுநர் அவர்கள் இதன்போது கேட்டுக்கொண்டார். வடமாகாணத்தின் கல்வித்துறை அதிகாரிகளுக்கு முதலில் இந்த இலஞ்ச ஊழலை ஒழிப்பது தொடர்பான செயற்திட்டம் இடம்பெறுவதுடன் வடமாகாணத்தினது ஏனைய துறைகளின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

– வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு