உள்நாட்டு உற்பத்தி கைத்தொழில்களை முன்னேற்றுவதற்கான அபிவிருத்திக்குழு கூட்டம்.

கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான தேசிய நிகழ்ச்சி திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதன் பொருட்டு ஸ்தாபிக்கப்பட்ட உள்நாட்டு உற்பத்தி கைத்தொழில்களை முன்னேற்றுவதற்கான, வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான அபிவிருத்தி குழு கூட்டம் 18 மார்ச் 2021 அன்று மாலை 2.00 மணிக்கு வவுனியா மாவட்ட மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது.
இக் கலந்துரையாடலில் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் கௌரவ ரமேஸ் பத்திரன, கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும் கடற்தொழில் நீரியல் வளத்துறை அமைச்சருமான கௌரவ திரு கே. என். டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பீ .எஸ் .எம் சார்ள்ஸ், கௌரவ வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ காதர் மஸ்தான், கௌரவ கு. திலீபன், பிரதமசெயலாளர், ஆளுநரின் செயலாளர், ஆளுநரின் இணைப்பு செயலாளர், பிரதேச சபை தவிசாளர்கள், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்ட அரச அதிபர்கள், திட்டமிடல் பணிப்பாளர்கள், அமைச்சின் செயலாளர்கள், துறைசார் திணைக்கள தலைவர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் என பல தரப்பட்டோரும் கலந்து கொண்டனர்.
இங்கு கருத்து தெரிவித்த கௌரவ அமைச்சர் அவர்கள் கடற்தொழிலாளர்களுக்கான கட்டளைச் சட்டம் ஒன்று விரைவில் அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அதன் பின்னர் அனைத்து கடற்தொழிலாளர்களின் பிரச்சனைகளும் தீர்க்கப்படுமெனவும் தெரிவித்தார். மேலும் இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி, தடைசெய்யப்பட்ட தொழில்களை கட்டுப்படுத்தல், உள்ளுர் நீர்நிலைகளின் அபிவிருத்தி, இறங்கு துறைமுக புனரமைப்பு, மன்னார் ரின் மீன் தொழிற்சாலையை மீள் இயங்கவைத்தல், மீனவர்களுக்கு போக்குவரத்து பாதைகள் அமைத்தல் என்பன பற்றியும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பெருந்தோட்ட துறைசார் அபிவிருத்தி தொடர்பாக கருத்து தெரிவித்த கௌரவ அமைச்சர் அவர்கள் பனை வளம் அழிந்து போகாது அவற்றை பாதுகாத்து அவற்றின் உற்பத்தி , விற்பனை மற்றும் ஏற்றுமதிகளை அதிகரிப்பதற்கும் , மரமுந்திரிகை செய்கையை அபிவிருத்தி செய்தல், தென்னை கைத்தொழிலை விரிவுபடுத்தும் முகமாக தொழிற்பேட்டைகளை அமைப்பது தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இரத்தினக்கல், தங்க ஆபரண கைத்தொழிற்துறை தொடர்பில் அரசாங்கத்திடம் கடன்வசதிகள் மற்றும் பயிற்சித்திட்டங்கள் உள்ளதாக இவை தொடர்பான கோரிக்கைகள் இருப்பின் அவற்றை உரிய மாவட்டசெயலாளர்களிடம் சமர்ப்பித்து பயனாளிகள் தமது தேவைகளை பெற்றுக்கொள்ள முடியுமென அமைச்சின் செயலாளரினால் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கருத்துதெரிவித்த கௌரவ ஆளுநர் அவர்கள் இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக நடைபெறும் தங்க ஏற்றுமதிகளை நிறுத்தி இலங்கையிலேயே உற்பத்தியாளர்கள்- கொள்வனவாளர்களை தொடர்புபடுத்தி செயற்பாடுகளை முன்னெடுக்க ஆலோசனை வழங்கினார்.