உண்மை, ஒற்றுமை, நல்லிணக்கத்துக்கான சுயாதீன ஆணைக்குழுவின், இடைக்கால செயலகத்தின் செயற்பாடுகள் யாழ்ப்பாணத்தில் முன்னெடுப்பு.

அதிமேதகு ஜனாதிபதியின் பரிந்துரைக்கு அமைய, பாராளுமன்ற சட்டத்தினூடாக ஸ்தாபிக்கப்படவுள்ள உண்மை, ஒற்றுமை, நல்லிணக்கத்துக்கான உத்தேச சுயாதீன ஆணைக்குழுவின், இடைக்கால செயலகத்தின் அங்கத்தவர்கள், வடமாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களை, கொழும்பிலுள்ள வாசஸ்தலத்தில் நேற்று(09.12.2023) மாலை சந்தித்து கலந்துரையாடினர்.  உத்தேச சுயாதீன ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி அசங்க குணவன்ச, இடைக்கால செயலகத்தின் கொள்கை பிரிவு தலைவர் கலாநிதி யுவி தங்கராஜா, இடைக்கால செயலகத்தின் சட்டப்பிரிவு உத்தியோகஸ்தர் நிசாந்தெனி ரத்னம், உத்தேச ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தின் நிறைவேற்று அதிகாரியும்,  சட்டப் பிரிவு பிரதானியுமான அஸ்வினி அப்பங்கம, உள்ளிட்ட குழுவினர் கௌரவ ஆளுநரை சந்தித்து கலந்துரையாடினர்.

யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியில் இலங்கை பிரஜைகளின் முறைப்பாடுகள் தொடர்பில் உண்மையை உறுதி செய்யும் வகையில் நல்லிணக்கம், இழப்பீடுகள் மற்றும் நிலையான அமைதிக்கு தேவையான வசதிகளை வழங்குவதே உத்தேச சுயாதீன ஆணைக்குழுவின் முக்கிய நோக்கமாக உள்ளது.

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்கத்துக்கான சுயாதீன ஆணைக்குழுவிற்கு தேவையான சட்டம் மற்றும் கொள்கை கட்டமைப்பு, செயல்பாட்டு நடைமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களை உருவாக்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ள உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறைக்கான இடைக்கால செயலகத்தின் பணிகளை வட மாகாணத்தில் முன்னெடுப்பது  தொடர்பில் குறித்த குழுவினர் வட மாகாண கௌரவ ஆளுநரை நேற்றுமாலை சந்தித்து கலந்துரையாடினர்.

அதற்கமைய, யாழ்ப்பணத்திற்கு வருகைதந்துள்ள உண்மை, ஒற்றுமை, நல்லிணக்கத்துக்கான சுயாதீன ஆணைக்குழுவிற்கான இடைக்கால செயலகத்தினர், மதத்தலைவர்கள், அரச உத்தியோகஸ்தர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்களை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை சந்தித்து  நல்லிணக்க பொறிமுறைக்கான கருத்துக்களை கேட்டறிதல், ஆணைக்குழு தொடர்பான விளக்கங்களை வழங்குதல் உள்ளிட்ட செயற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளனர்.