கோலாகலமாக ஆரம்பமாகிய யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக கண்காட்சியில் பிரதமவிருந்தினராக கலந்துகொண்ட வடமாகாண ஆளுநர் திருமதி பி எஸ் எம் சார்ள்ஸ் கண்காட்சி சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் அமைய வாழ்த்துகளை தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் நூலகத்தின் கேட்போர்கூடத்தில் 24 ஜனவரி 2020 அன்று இடம்பெற்ற அங்குரார்ப்பண நிகழ்வில் ஆளுநர், இந்திய தூதரகத்தின் துணைத்தூதுவர், யாழ் மாநகர முதல்வர், வெளிநாட்டு விருந்தினர்கள், ஏற்பாட்டாளர்கள், யாழ் வர்த்தக சம்மேளன தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள், பிரபல வர்த்தக நிறுவனங்களின் அதிகாரிகள், ஆளுநரின் இணைப்பு செயலாளர்கள், ஊடக நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இங்கு உரையாற்றிய ஆளுநர் தொடர்ச்சியாக இக் கண்காட்சியை ஏற்பாடு செய்துவரும் அனைவரையும் பாராட்டினார். முதலீட்டாளர்களும் எமது உற்பத்திகளும் சர்வதேச மயப்பட இத்தகைய கண்காட்சிகள் உதவும் என நம்பிக்கை தெரிவித்தார். அன்று கப்பலோட்டிய தமிழர்களை கொண்டிருந்த இப் பிரதேசம் இன்று அகதிகளை வள்ளங்களில் அனுப்பும் அவலநிலை மாறுமெனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
இம் மாகாணத்தை சகல துறைகளிலும் குறிப்பாக வர்த்தகத்துறையிலும் சர்வதேசத்துடன் இன்னும் பலமாக இணைத்து இ அபிவிருத்தி நடவடிக்கைகளை மேம்படுத்தவே இந்த நாட்டின் ஜனாதிபதியும் அரசாங்கமும் என்னை இங்கு அனுப்பிவைத்துள்ளனர் என்றும் இதன் பொருட்டு பிரச்சனைகளுக்கான சுமூகமான தீர்வுகளை முன்னெடுத்து அனைத்துத் துறைகளையும் மேம்படுத்த அனைவரும் தம்முடன் ஒன்றிணைவர்கள் என நம்புவதாகவும் தெரிவித்தார்.