நாங்கள் போர்கண்ட தேசம். நீங்கள் போருக்கு பின்னால் பிறந்த பிள்ளைகள். வரலாறு எமக்கு சொல்லும் பாடத்திலேதான் நம் எதிர்காலம் உருவாகும் என்று நான் நம்புகின்றேன். வரலாறு எவ்வளவு கசப்பாக இருந்தாலும் இனிவருகின்ற எதிர்காலத்தை நாம் நன்மையாக அமைக்கவேண்டும் என்று ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தெரிவித்தார்.
கிளி / வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயத்தின் புதிய வகுப்பறைத்தொகுதி 12 செப்ரெம்பர் 2019 அன்று முற்பகல் ஆளுநர் அவர்களினால் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது. இதன்போது ஆளுநர் அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
2013 ஆம் ஆண்டு 1000 பாடசாலை திட்டத்தின் கீழ் வட்டக்கச்சி மத்திய கல்லூரியிலிருந்து பிரிக்கப்பட்டு இரண்டு தகரக்கொட்டகையில் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலையின் புதிய வகுப்பறைத் தொகுதி கௌரவ ஆளுநர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் 3.6 மில்லியன் ரூபா நிதிப்பங்களிப்பில் இராணுவத்தின் பொறியியற் பிரிவின் மனித வலுவினால் நிர்மாணிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன் , கிளிநொச்சி இராணுவ தலைமையக கட்டளை அதிகாரி, வலய கல்வி பணிப்பாளர் , அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு