மிக பிரமாண்டமாய் நாளை (27)ஆரம்பமாகவுள்ள யாழ் புத்தகக் கண்காட்சியின் ஏற்பாடுகள் நடைபெறும் யாழ் வீரசிங்கம் மண்டபத்திற்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் இன்று (26) மாலை கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார்.
வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் எண்ணக்கருவிற்கு அமைய இலங்கை புத்தக விற்பனையாளர்கள் , இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் ‘யாழ் புத்தகத் திருவிழா 2019’ ஆளுநர் தலைமையில் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் 27 ஆகஸ்ட் 2019 அன்று ஆரம்பமாகவுள்ளது.
யாழில் முதன்முறை மிகப்பிரமாண்டமாய் ஆரம்பமாகவுள்ள இந்த புத்தகக்கண்காட்சி எதிர்வரும் செப்டம்பர் 1ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
30 தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ள குறித்த புத்தக கண்காட்சி மண்டபத்தின் ஒவ்வொரு பிரிவிலும் பாடசாலை மாணவர்களுக்கான புத்தகங்கள், சிறுவர் கதைகள் , வழிகாட்டி நூல்கள் , ஈழத்துப்படைப்புக்கள் உள்ளிட்ட உள்ளுர் மற்றும் இந்திய மூத்த எழுத்தாளர்களின் புத்தகங்களும் காட்சிப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் சிறுவர்களுக்கான ஓவியப்போட்டிகளும் இடம்பெறவுள்ளதுடன் , சிறுவர் இலக்கியம் , சிறுவர் ஊடகம் , சிறுவர் நாடகம், சிறுவர் சினிமா , சிறுவர் கவின்கலை ஆகிய அம்சங்களை உள்ளடக்கியதான சிறுவர்களின் படைப்பாக்கத்திற்கான எதிர்காலம் என்னும் தலைப்பில் சிறுவர்களுக்கான கருத்தரங்கு நாளை மாலை 3.00 மணி முதல் 6.00 மணி வரை நடைபெறவுள்ளமை சிறப்பம்சமாகும்.
– வடக்கு ஆளுநரின் ஊடப்பிரிவு