1958ம் ஆண்டின் 29ம் இலக்க சட்டத்தின் கீழ் சகல விலங்கு பண்ணைகளும் (ஆடு , மாடு, செம்மறி, பன்றி, எருமை, கோழி) பண்ணை அமைந்துள்ள கால்நடை வைத்திய அலுவலகத்தில் பதிவு செய்யப்பட வேண்டும். பண்ணைகளை பதிவு செய்வதற்கும் மாடுகளுக்கு காது அடையாளமிடுவதற்கும் தேவையான விண்ணப்ப படிவங்களை (விலங்கு பண்ணைகளை பதிவு செய்தல், மற்றும் அட்டவணை 7) தங்கள் பிரிவிலுள்ள கால்நடை வைத்திய அலுவலகங்களில் பெற்றுக்கொள்ள முடியும்.
இப்பண்ணைகளை பதிவதன் மூலம்
1. விலங்குகளின் உரித்தை உறுதிப்படுத்தலாம்
2. அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின் திட்டங்களுக்கு உள் வாங்க இலகுவாக இருக்கும்.
3. அனர்த்தம் ஏற்படுமிடத்து (உ-ம் :- வெள்ள அழிவு) நட்ட ஈடு வழங்குவதற்கும் இலகுவாக இருக்கும்.
4. வங்கியில் கடன் பெற்றுக்கொள்வதற்கு உதவும்.
5. விலங்குகளை காப்புறுதி செய்வதற்கு பயன்படும்.
6. சிகிச்சைகளுக்கும் தடுப்பு மருந்துகள் வழங்குவதற்கும் இலகுவாக இருக்கும்.
7. விலங்குகளை விற்பனை செய்வதற்கும், விலங்குகளை கொண்டு செல்வதற்கான அனுமதியை பெற்றுக்கொள்வதற்கும் பயன்படும்.
8. மாடுகள் திருடப்படுவதை தடுப்பதற்கும் கண்டுபிடிப்பதற்கும் பயன்படும்.
9. நாடளாவிய ரீதியில் கால்நடைகளின் புள்ளி விபரங்களை பேணுவதற்கு பயன்படும்.
18 மாத வயதிற்கு மேற்பட்ட மாடுகளுக்கு கட்டாயமாக ஒவ்வொரு வருடமும் ஜனவரி 31 ம் திகதிக்கு முன்னதாக பண்ணையாளர்கள் கால்நடை வைத்திய அலுவலகத்தில் அட்டவணை 07 என்ற படிவத்தை பெற்று பூரணப்படுத்தி கால்நடை வைத்தியரிடம் வழங்குவதன் மூலம் தற்களது மாடுகளுக்கு காது அடையாளமிட்டுக் கொள்வதுடன் ஒவ்வொரு மாட்டுக்குமான உறுதிச்சிட்டையையும் பெற்றுக்கொள்ள முடியும். இதற்குரிய சேவைக்கட்டணமாக ஒரு மாட்டிற்கு ரூபா 20 அரசிற்கு பண்ணையாளர் வழங்க வேண்டும்.
அத்துடன் 1958 ம் ஆண்டின் விலங்குச்சட்டத்தின் கீழ் மாடுகளுக்கு காதடையாளமிட்டு கொள்ளாத பண்ணையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்பதையும் அறியத்தருகின்றேன்.
மாகாணப் பணிப்பாளர்
கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம்
வடக்கு மாகாணம்