கல்வியிலே மேம்படுபவர்கள் தலைமைத்துவம் அற்றவர்களாக இருந்தால் சமூகத்துக்கு எந்தவிதமான பிரயோசனமும் இல்லை. கல்வியிலே உயர்ந்தாலும் நல்ல பண்பு இருக்க வேண்டும்;. சிறந்த தலைமைத்துவத்தைக் கொண்டிருக்க வேண்டும். எனவே, நாங்கள் பிள்ளைகளைத் தலைமைத்துவமிக்கவர்களாகவும் மனிதநேயமிக்கவர்களாகவும் வளர்க்க வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி மொன்போர்ட் சர்வதேச பாடசாலையின் (Montfort International School) 3ஆவது ஆண்டுவிழா நிகழ்வு, பாடசாலை அதிபர் கலாநிதி ஜேம்ஸ் ரொபட் தலைமையில் நேற்று (20.11.2026) வெள்ளிக்கிழமை பிற்பகல் பாடசாலை வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு, திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்குப் பரிசில்கள் வழங்கிக் கௌரவித்த பின்னர் உரையாற்றும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நிகழ்வில் ஆளுநர் மேலும் உரையாற்றுகையில் ‘ஷினோவா 2026’ (Shinova 2026) எனும் உத்வேகமளிக்கும் கருப்பொருளின் கீழ் மூன்றாவது ஆண்டுவிழாவைக் கொண்டாடுவதற்காக, அல்லைப்பிட்டி மொன்போர்ட் சர்வதேச பாடசாலையில் உங்களுடன் இணைந்துகொள்வதில் நான் மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அடைகின்றேன். ஆண்டுவிழா என்பது வெறும் கொண்டாட்டம் மட்டுமல்ல, அது மாணவர்களின் சாதனைகளை அங்கீகரிப்பதற்கும், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் அர்ப்பணிப்பைப் பாராட்டுவதற்கும், எமது இளைய தலைமுறையினரின் திறமைகள் மற்றும் படைப்பாற்றலைக் கொண்டாடுவதற்குமான ஒரு வாய்ப்பாகும்.
‘ஷைன்’ (Shine – ஒளிர்தல்) மற்றும் ‘நோவா’ (Nova – புதிய நட்சத்திரம்) ஆகிய சொற்களை அழகாக இணைத்து உருவாக்கப்பட்டுள்ள ‘ஷினோவா’ எனும் கருப்பொருள், பிரகாசமான ஒரு புதிய நட்சத்திரத்தையும் நம்பிக்கைக்குரிய ஒரு புதிய தலைமுறையையும் அடையாளப்படுத்துகின்றது. இந்தக் கருப்பொருள் வலுவூட்டல், தொடர்பாடல் மற்றும் ஒளிர்தல் ஆகிய மூன்று முக்கிய விழுமியங்களில் கவனம் செலுத்துவது குறித்து நான் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன்.
வலுவூட்டல் என்பது, எமது பிள்ளைகள் எதிர்காலத்தில் பொறுப்புள்ள தலைவர்களாக உருவெடுப்பதற்குத் தங்களது திறன்களைக் கண்டறியத் தேவையான தன்னம்பிக்கை, அறிவு மற்றும் துணிச்சலை வழங்குவதாகும். தொடர்பாடல் என்பது, கருத்துகளைத் தெளிவாக வெளிப்படுத்தும் திறனையும், மற்றவர்களுக்குச் செவிமடுக்கும் பண்பையும், அர்த்தமுள்ள உறவுகளைக் கட்டியெழுப்பும் ஆற்றலையும் வளர்த்துக்கொள்வதாகும். ஒளிர்தல் என்பது, ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானது என்பதையும், அவர்களுக்குள் விசேட திறமைகளும் ஆற்றல்களும் உள்ளன என்பதையும் அங்கீகரிப்பதாகும். ஒவ்வொரு குழந்தைக்கும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தவும், தங்களது கனவுகளை நனவாக்கவும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
மாணவர்களே, நீங்களே எமது சமூகத்தின் மிகப்பெரிய நம்பிக்கையும் எமது மாகாணத்தின் எதிர்காலமும் ஆவீர்கள். உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள், கடினமாக உழையுங்கள், உங்கள் ஆசிரியர்களையும் பெற்றோர்களையும் மதியுங்கள், மேலும் பெரிய கனவுகளைக் காண ஒருபோதும் அஞ்சாதீர்கள். அர்ப்பணிப்பு, ஒழுக்கம் மற்றும் விடாமுயற்சி ஆகியவற்றின் மூலமே வெற்றி கிடைக்கின்றது. உங்கள் ஒவ்வொருவரிடமும் ஒரு விசேட திறமை உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்களை மற்றவர்களுடன் ஒப்பிடாதீர்கள். உங்கள் பலங்களைக் கண்டறியுங்கள், உங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ளுங்கள், எப்போதும் நல்ல மனிதர்களாக உருவாக முயற்சி செய்யுங்கள். உண்மையான வெற்றி என்பது விருதுகளாலும் சாதனைகளாலும் மட்டுமே அளவிடப்படுவதில்லை, மாறாக நீங்கள் சமூகத்துக்கு ஆற்றும் நேர்மறையான பங்களிப்பினாலேயே அளவிடப்படுகின்றது.
மாணவர்கள் தங்களது கல்வி, கலாசார, கலை மற்றும் தனிப்பட்ட திறமைகளை வளர்த்துக்கொள்வதற்கான வாய்ப்புகளை வழங்குவதில் மொன்போர்ட் சர்வதேச பாடசாலை மேற்கொள்ளும் முயற்சிகளை நான் பாராட்டுகின்றேன். தங்களது அர்ப்பணிப்பாலும் வழிகாட்டலாலும் எமது பிள்ளைகளின் எதிர்காலத்தை வடிவமைக்கும் ஆசிரியர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். தொடர்ச்சியான ஊக்கத்தையும் தியாகங்களையும் வழங்கும் பெற்றோர்களையும் நான் பாராட்டுகின்றேன். ஒவ்வொரு குழந்தையின் வெற்றிக்கும் ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் இடையிலான கூட்டுறவு மிகவும் அவசியமானதாகும், எனத் தெரிவித்தார்.
இவ்வாண்டுவிழாவில் மாணவர்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்தும் பல்வேறு கலை, கலாசார நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டன. இந்நிகழ்வில் பாடசாலையின் தலைவர் யாழ். மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் கலாநிதி ஜஸ்டின் பேர்ணாட் ஞானப்பிரகாசம், அருட்தந்தையர்கள், அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள், பாடசாலையின் கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.





