விவசாயிகள் கோரும் வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு நாம் தயாராக இருக்கின்றோம். அதற்குப் பதிலாக அவர்கள் விவசாய உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். அவர்களின் உற்பத்தி மூலம் நாட்டின் இறக்குமதி குறைய வேண்டும். விவசாயிகளின் வருமானமும் வாழ்வாதாரமும் உயர வேண்டும். அதுவே எமது இலக்கு என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்டம், விசுவமடு பகுதியில் 112 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட தொட்டடியடி ஏற்று நீர்ப்பாசனத் திட்டத்தை வடக்கு மாகாண ஆளுநர் இன்று (18.11.2026) புதன்கிழமை திறந்து வைத்து, அதன் வசதிகளை விவசாயிகளிடம் கையளித்தார். வடக்கு மாகாண சபையின் விசேடமாக ஒதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியின் கீழ் இத்திட்டம் புனரமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் தொட்டடியடி ஏற்று நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் 210 விவசாயிகளுக்குச் சொந்தமான 420 ஏக்கர் நிலங்களும், இந்திய வீட்டுத்திட்டத்தின் கீழ் வசிக்கும் 83 விவசாயிகளுக்குச் சொந்தமான 41.5 ஏக்கர் நிலங்களும் பயனடையவுள்ளன. மொத்தமாக 293 விவசாயக் குடும்பங்களின் 461.5 ஏக்கர் நிலங்களுக்கு நம்பகமான நீர்ப்பாசன வசதி கிடைக்கவுள்ளது.
1964ஆம் ஆண்டு பிரமந்தனாறு ஆற்றின் குறுக்கே அணை அமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட விசுவமடு குளத்தை அடிப்படையாகக் கொண்டு, 1972ஆம் ஆண்டு தொட்டடியடி ஏற்று நீர்ப்பாசனத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. பல தசாப்தங்களாக விவசாயிகளுக்குச் சேவையாற்றிய இத்திட்டம், காலப்போக்கில் பம்புகளின் செயற்திறன் குறைவு, எரிபொருள் செலவு அதிகரிப்பு மற்றும் போதியளவு நீரை வெளியேற்ற முடியாமை போன்ற சவால்களை எதிர்கொண்டது. இதனால் விவசாயிகள் உரிய காலத்தில் நீரைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையை மாற்றுவதற்காகப் புதிய மின்சாரப் பம்புகள் பொருத்துதல், மேல்நிலை நீர்த்தேக்க வசதிகளை ஏற்படுத்துதல், பம்பு இல்லங்களைப் புனரமைத்தல், மின் மற்றும் இயந்திரப் பொருத்துதல்களை மேற்கொள்ளுதல், நீர் விநியோகக் குழாய்களை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தொட்டடியடி திட்டத்துக்கு நான்கு ஆறு அங்குல மின்சாரப் பம்புகளும், இந்திய வீட்டுத்திட்டப் பகுதிக்கான நீர்ப்பாசன வசதிக்கு இரண்டு பம்புகளும் பொருத்தப்பட்டுள்ளன.
நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர், 1970 முதல் 1977 வரையான காலப்பகுதி வடக்கு மாகாண விவசாயிகளின் பொற்காலமாக விளங்கியதாகக் குறிப்பிட்டார். அக்காலத்தில் விவசாய உற்பத்தி அதிகரித்து, விவசாயக் குடும்பங்கள் பொருளாதார ரீதியாக முன்னேறியிருந்தன. விவசாயிகளின் உழைப்பின் மூலம் பல குடும்பங்கள் தமது சொந்த வீடுகளைக்கூடக் கட்டிக்கொண்டன. அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் பிரபலமாகப் பேசப்பட்ட ‘வெளிக்கிடடி விசுவமடுக்கு’ என்ற நாடகமும் விசுவமடுவுக்கும் விவசாயத்துக்கும் இடையிலான தொடர்பை நினைவூட்டுவதாக அமைந்திருந்தது என்றார்.
கடந்த காலங்களில் திறந்த பொருளாதாரக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டபோது, உள்ளூர் விவசாயிகளின் உற்பத்திகள் சந்தைக்கு வரும் காலப்பகுதியில் இறக்குமதிகளைக் கட்டுப்படுத்தவோ, இறக்குமதி வரிகளை அதிகரிக்கவோ உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாததால் விவசாயிகளின் சந்தை வாய்ப்புகள் பாதிக்கப்பட்டதாக ஆளுநர் சுட்டிக்காட்டினார்.
தற்போதைய அரசாங்கத்தின் காலத்தில் விவசாயிகளுக்கு மீண்டும் பொருளாதார முன்னேற்றத்துக்கான வாய்ப்புகள் உருவாகும் எனத் தெரிவித்த அவர், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தியில் விசேட அக்கறை செலுத்தி வருவதாகவும், உலக வங்கி உள்ளிட்ட பல்வேறு தரப்புகளின் பங்களிப்பைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தி வருவதாகவும் குறிப்பிட்டார்.
விவசாயிகளுக்கு இலவசமாகப் பல்வேறு உதவிகளை வழங்குவதைவிட, அவர்களின் உழைப்புக்கான சந்தை வாய்ப்பை உறுதிப்படுத்துவதே முக்கியம் எனக் குறிப்பிட்ட ஆளுநர், வடக்கு மாகாணத்தில் எந்தப் பொருட்கள், எவ்வளவு அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன, அவை எப்போது சந்தைக்கு வருகின்றன என்ற விபரங்களை மத்திய விவசாய அமைச்சு கோரியுள்ளதாகத் தெரிவித்தார். இதன் அடிப்படையில், உள்ளூர் உற்பத்திகள் சந்தைக்கு வரும் காலப்பகுதியில் அவற்றுக்குப் பொருத்தமான சந்தைப் பாதுகாப்பை வழங்கும் வகையில் இறக்குமதியைக் கட்டுப்படுத்தவோ, இறக்குமதி வரியை அதிகரிக்கவோ நடவடிக்கைகள் எடுக்கப்படும். இம்முறை வெங்காய உற்பத்தியில் ஈடுபட்ட விவசாயிகள் இத்தகைய நடவடிக்கைகளால் பயனடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
விவசாய அமைப்பின் தலைவர் சூரிய மின்கலங்களைப் பொருத்தித் தருமாறு முன்வைத்த கோரிக்கைக்குப் பதிலளித்த ஆளுநர், அதனை முன்னெடுக்கத் தாம் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டார். எனினும், தற்போது பெருந்தொகை நிதி செலவிட்டு புனரமைக்கப்பட்டுள்ள நீர்ப்பாசனத் திட்டத்தின் ஊடாக விவசாயிகள் சிறந்த உற்பத்தியைப் பெற்றுக்காட்ட வேண்டும். அடுத்த ஆண்டு மீண்டும் இப்பகுதிக்கு வரும்போது அவர்களின் சிறப்பான அறுவடையைக் காண விரும்புவதாகவும், அதன் பின்னர் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.
வடக்கு மாகாணத்தின் தேசிய உற்பத்திக்கான பங்களிப்பை தற்போதைய 4.5 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக உயர்த்துவதை இலக்காகக் கொண்டு செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட ஆளுநர், விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடி உள்ளிட்ட உற்பத்தித் துறைகளை வலுப்படுத்துவதன் மூலம் இதனை அடைய முடியும் என்றார். அனைத்து விவசாயப் போகங்களிலும் நெல் பயிரிடுவதை ஒரே தெரிவாகக் கொள்ளாமல், சந்தைத் தேவை, மண்ணின் தன்மை மற்றும் நீர் கிடைக்கும் தன்மை ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு வெங்காயம், மிளகாய், மரக்கறிகள் உள்ளிட்ட வருமானம் தரக்கூடிய மாற்றுப் பயிர்ச்செய்கைகளையும் முன்னெடுக்க வேண்டும் என்றார். குறிப்பாக, 1970ஆம் ஆண்டுகளில் விசுவமடு செத்தல் மிளகாய் உற்பத்திக்குப் புகழ்பெற்றிருந்தமையையும் நினைவூட்டினார்.
இங்கு உரையாற்றிய விவசாய அமைச்சின் செயலாளர் எஸ்.சிவஸ்ரீ, வடக்கு மாகாணத்தில் தற்போது ஒன்பது ஏற்று நீர்ப்பாசனத் திட்டங்கள் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்தார். ஆளுநர் பதவியேற்ற பின்னர் செயலிழந்த ஏற்று நீர்ப்பாசனத் திட்டங்களை மீள ஆரம்பிப்பதில் விசேட கவனம் செலுத்தி வருவதாகவும், விசுவமடு திட்டத்தை மீளச் செயற்படுத்துவதிலும் அவர் அதிக அக்கறை காட்டியதாகவும் குறிப்பிட்டார்.
நீர்ப்பாசனத் திட்டம் செயலிழந்திருந்த காலத்தில் இப்பகுதி விவசாயிகள் வாழ்வாதாரத்துக்காகத் தென்னைப் பயிர்ச்செய்கைக்கு மாறியிருந்தனர். தற்போது நீர்ப்பாசன வசதிகள் மீளமைக்கப்பட்டுள்ளதால் தென்னை மரங்களுக்குக் கீழ் ஊடுபயிர்களையும் மேற்கொள்ள முடியும். நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த விவசாயிகள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
தூய்மை இலங்கை செயலணியின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் ம.மோகன் உரையாற்றுகையில், கடந்த காலங்களில் வடக்கு மாகாணத்திலிருந்து இலங்கையின் பல்வேறு பகுதிகளுக்கும் விவசாய உற்பத்திப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டதாகவும், அந்த நிலை மீண்டும் உருவாக வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும், கடந்த காலங்களில் வடக்கு மாகாண சபைக்கு ஒதுக்கப்பட்ட நிதி முழுமையாகச் செலவிடப்படாமல் திரும்பிச் செல்லும் நிலை காணப்பட்டதாகவும், தற்போது ஆளுநரின் தலைமையில் நிதி வினைத்திறனாகப் பயன்படுத்தப்படுவது பாராட்டத்தக்கது என்றும் குறிப்பிட்டார்.
முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் அ.உமாமகேஸ்வரன் உரையாற்றுகையில், ஆளுநர் ஏற்கெனவே முல்லைத்தீவு மாவட்டச் செயலாளராகப் பணியாற்றியவர் என்பதால் இப்பகுதி மக்களின் தேவைகளையும் பிரச்சினைகளையும் நன்கு அறிந்தவர் என்றும், அதற்கேற்ப அவர்களின் தேவைகளைத் தீர்ப்பதில் ஆர்வத்துடன் செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
நிகழ்வின்போது ஆளுநர் நினைவுக் கல்லைத் திரைநீக்கம் செய்து வைத்ததுடன், புனரமைக்கப்பட்ட பம்பு அறையையும் திறந்து வைத்தார். தொடர்ந்து, ஏற்று நீர்ப்பாசனத் திட்டத்தை விவசாயிகளிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கும் ஆவணம் கமக்கார அமைப்பிடம் வழங்கப்பட்டது.
வடக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களப் பணிப்பாளர் பொறியியலாளர் சி.விகிர்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வடக்கு மாகாணப் பிரதம செயலாளர், விவசாய அமைச்சின் செயலாளர், முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர், புதுக்குடியிருப்பு மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபைகளின் தவிசாளர்கள், தூய்மை இலங்கை செயலணியின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர், முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் பிரத்தியேகச் செயலாளர், திணைக்கள அதிகாரிகள், விசுவமடு பகுதி விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.





