வடக்கு மாகாணத்தின் தனித்துவமான பண்பாட்டு அடையாளங்கள், மரபுகள் மற்றும் பாரம்பரியச் சிறப்புகளை வெளிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வடக்கு மாகாணப் பண்பாட்டியல் காண்பியக்கூடக் கண்காட்சியை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் இன்று (17.11.2026) செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து வைத்தார்.
வடக்கு மாகாணக் கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கண்காட்சி, தென்மராட்சிக் கலாசார மண்டபத்தில் ஆரம்பமானது.
வடக்கு மாகாணத்தின் பண்பாட்டுச் செழுமையையும் தனித்துவமான அடையாளங்களையும் வெளிப்படுத்துவதுடன், அவற்றைப் பாதுகாத்து அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டுசெல்லும் நோக்கில் இக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கண்காட்சியில் ஓவியங்கள், சிற்பங்கள், கடந்த காலங்களில் மக்கள் தமது அன்றாட வாழ்வியலில் பயன்படுத்திய பாரம்பரியப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. வடக்கு மாகாணத்தின் பண்பாட்டு மரபுகளையும் முன்னோர்களின் வாழ்வியல் முறைகளையும் பிரதிபலிக்கும் இக்காட்சிப்பொருட்களைப் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பார்வையாளர்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.
இன்றைய ஆரம்ப நிகழ்வில் வடக்கு மாகாணப் பிரதம செயலாளர், கல்வி அமைச்சின் செயலாளர், பண்பாட்டலுவல்கள் அலகின் பணிப்பாளர் மற்றும் சிரேஷ;ட கலாசார உத்தியோகத்தர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இக்கண்காட்சி இன்று மற்றும் நாளை (18.11.2026) ஆகிய இரு நாட்களும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்களின் பார்வைக்காகத் திறந்திருக்கும். வடக்கு மாகாணத்தின் பண்பாட்டு மரபுகளையும் அடையாளங்களையும் அறிந்துகொள்ள விரும்பும் பொதுமக்கள் அனைவரும் இக்கண்காட்சியைப் பார்வையிடுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.




