வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படும் வீட்டுத் திட்டத்தின் கீழ், வவுனியா தெற்கு சிங்களப் பிரதேச சபைப் பகுதியில் அமைக்கப்பட்ட வீட்டை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று (28.10.2026) புதன்கிழமை திறந்து வைத்ததுடன், அப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் ஏனைய அபிவிருத்திப் பணிகளையும் நேரில் பார்வையிட்டார்.
குறித்த பிரதேச சபைக்கு இத்திட்டத்தின் முதலாம் கட்டத்தின் கீழ் இரண்டு வீடுகளும், இரண்டாம் கட்டத்தின் கீழ் ஒரு வீடும் வழங்கப்பட்டுள்ளன. முதலாம் கட்டத்தின் கீழ் 18 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் மதுராநகரில் அமைக்கப்பட்ட வீட்டையே ஆளுநர் இன்று திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, சலலிகினிஹம பகுதியில் அமைக்கப்பட்டுவரும் வீடுகளையும், அக்கிராமத்தில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக அமைக்கப்பட்டுவரும் பொதுக் கிணற்றையும் ஆளுநர் பார்வையிட்டார். அபிவிருத்திப் பணிகளின் முன்னேற்றம் தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டது.
மேலும், பிரதேச சபைக்குச் சொந்தமான போகஸ்வௌ வீதியைப் பராமரிப்பதில் நிலவும் சிரமங்கள் தொடர்பிலும் ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. குறித்த வீதி பிரதேச சபையின் ஆதனமாக இருந்தபோதிலும், அதனை முறையாகப் பராமரிப்பதில் சபைக்கு உள்ள சிரமங்களைத் தவிசாளர் சுட்டிக்காட்டினார். இதற்குத் தீர்வாக, குறித்த வீதியை உரிய நடைமுறைகளுக்கு அமைவாக வடக்கு மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களத்திடம் கையளிப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பிலும் ஆளுநர் ஆராய்ந்தார்.
மண்குடிசை வீடுகளில் வசித்த தங்களுக்கு வடக்கு மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டின் ஊடாக கல் வீட்டில் வசிப்பதற்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தந்தமைக்காக நன்றிகளைக் கூறுவதாக மதுராநகர் மற்றும் சலலிகினிஹம மக்கள் தெரிவித்தனர்.
ஆளுநரின் இப்பயணத்தின்போது வவுனியா தெற்கு சிங்களப் பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் அமித் மற்றும் சபையின் செயலாளர் ஆகியோர் பங்கேற்றனர்.



