மக்களின் தேவைகளை அறிந்து, அந்தத் தேவைகளுக்கு அமைவாகத் திட்டங்களை வடிவமைத்து, அரச அதிகாரிகள் மற்றும் திணைக்களங்களுடன் பரஸ்பர மரியாதையுடன் இணைந்து பணியாற்றியதுடன், பயனாளிகளைத் தெரிவு செய்வதிலும் வெளிப்படைத்தன்மையைப் பேணியமையே சுவிற்சர்லாந்து மேம்பாடு மற்றும் ஒத்துழைப்புக்கான சுவிஸ் முகவர் நிலையத்தின் திட்டங்கள் வெற்றியடைவதற்கான முக்கிய காரணங்களாகும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
இலங்கை மற்றும் சுவிற்சர்லாந்துக்கு இடையேயான 70 ஆண்டு கால இராஜதந்திரப் பயணத்தை நினைவுகூரும் வகையில் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார பண்பாட்டு மையத்தில் இன்று (03.10.2026) சனிக்கிழமை மாலை விசேட நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில், சுவிற்சர்லாந்து மேம்பாடு மற்றும் ஒத்துழைப்புக்கான சுவிஸ் முகவர் நிலையத்தின் இலங்கைக்கான நீண்டகாலப் பங்களிப்பை நினைவுகூரும் வகையில் ‘பயணம்’ எனும் ஆவணப்படம் திரையிடப்பட்டதைத் தொடர்ந்து இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார்.
கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த ஆளுநர் நா.வேதநாயகன், தாம் கடந்த காலங்களில் பல்வேறு மாவட்டங்களில் மாவட்டச் செயலராகப் பணியாற்றிய காலப்பகுதியில் சுவிற்சர்லாந்து மேம்பாடு மற்றும் ஒத்துழைப்புக்கான சுவிஸ் முகவர் நிலையத்தின் பல்வேறு திட்டங்களுடன் தொடர்புபட்டு பணியாற்றிய அனுபவத்தை நினைவுகூர்ந்தார். சுவிஸ் முகவர் நிலையம் தமது திட்டங்களை முன்னெடுத்தபோது அரச அதிகாரிகள் மற்றும் அரச திணைக்களங்களுடன் நெருக்கமாக இணைந்து, பரஸ்பர மரியாதையுடன் பணியாற்றியமை தமக்கு நினைவில் இருப்பதாக ஆளுநர் குறிப்பிட்டார்.
மேலும், திட்டங்களுக்கான பயனாளிகளைத் தெரிவு செய்யும் போது வெளிப்படைத்தன்மைக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டதாகவும், திட்டங்களின் பயன்கள் உண்மையில் தேவையுடைய மக்களைச் சென்றடைவதை உறுதிப்படுத்தும் வகையில் செயற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
பின்தங்கிய ஒரு கிராமத்தைத் தெரிவு செய்த பின்னர், அந்தக் கிராமத்தின் தனிப்பட்ட தேவைகளைப் பிரித்து அணுகாமல், அங்குள்ள மக்களின் பல்வேறு தேவைகளையும் ஒருங்கிணைத்து நிறைவேற்றும் வகையில் திட்டங்களை வடிவமைத்தமை சுவிஸ் ஒத்துழைப்பின் முக்கியமான தனித்துவமாக இருந்ததாக ஆளுநர் சுட்டிக்காட்டினார்.
‘மக்களுக்கு எது தேவை என்பதைத் தீர்மானித்துவிட்டு திட்டங்களை அவர்கள் மீது திணிக்கவில்லை. மாறாக, மக்களிடம் சென்று அவர்களின் உண்மையான தேவைகளை அறிந்து, அதற்கு அமைவாகத் திட்டங்களை உருவாக்கினர். பல்வேறு துறைகளையும் ஒருங்கிணைத்து ஒரே நோக்கில் திட்டங்களை முன்னெடுத்தனர். அதுவே அவர்களின் வெற்றிக்கான முக்கிய காரணமாக நான் கருதுகின்றேன்’ என ஆளுநர் தெரிவித்தார்.
மக்களின் தேவைகளை மையமாகக் கொண்ட அணுகுமுறை, அரச நிறுவனங்களுடனான ஒருங்கிணைப்பு மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவை அபிவிருத்தித் திட்டங்களின் நிலைத்தன்மைக்கும் அதன் பயன்கள் மக்களைச் சென்றடைவதற்கும் முக்கியமானவை எனவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கையில் சுவிற்சர்லாந்தின் 70 ஆண்டுகாலப் பயணம், கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி மற்றும் மனிதாபிமானப் பணிகள், குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களை நினைவுகூரும் வகையில் இந்நிகழ்வு அமைந்திருந்தது. ’70 ஆண்டுகள்; 70 முகங்கள்’ எனும் கருப்பொருளில் ஒளிப்படக் கண்காட்சியும் இதன் ஒரு பகுதியாக இடம்பெற்றது. இந்தக் கண்காட்சியை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் சுவிற்சர்லாந்து தூதுவர் இணைந்து ஆரம்பித்து வைத்தனர்.
இந்நிகழ்வில் சுவிற்சர்லாந்து தூதரக அதிகாரிகள், சுவிஸ் ஒத்துழைப்பு நிறுவனங்களின் முன்னாள் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள், சமூகப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.





