முல்லைத்தீவு மாணவர்கள், முல்லைத்தீவு அரச பதவிகளை அலங்கரிக்க வேண்டும் – ஆளுநர்.

ஒரு பரிசு ஒருவரை உயர்த்தாது, ஒரு தோல்வியும் ஒருவரைத் தாழ்த்தாது. நீங்கள் எதைச் சாதிக்க முடிவு செய்கிறீர்கள் என்பதே உங்கள் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும். இன்று பரிசு பெறும் மாணவர்களிடம் மட்டுமன்றி, பரிசு கிடைக்காத மாணவர்களிடமும் அதே அளவு நம்பிக்கை எனக்கு உள்ளது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா இன்று (02.10.2026) வெள்ளிக்கிழமை காலை கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றபோது, பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கி வைத்து உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்தார். நிகழ்வில் மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

நீண்ட வரலாற்றையும் தனித்துவமான கல்விப் பாரம்பரியத்தையும் கொண்ட புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி, கல்வி, விளையாட்டு, மொழித் திறன், கலைத்துறை மற்றும் அறிவியல் சார்ந்த செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மாணவர்களை முன்னிறுத்தி வருவதாகக் குறிப்பிட்ட ஆளுநர், கடந்த ஆண்டு க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் 82 சதவீதமான மாணவர்கள் உயர்கல்விக்குத் தகுதி பெற்றிருந்தமை கல்லூரியின் கல்வித் தரத்தை வெளிப்படுத்துவதாகவும் தெரிவித்தார். பல்வேறு இணைப்பாடவிதானச் செயற்பாடுகளிலும் மாணவர்கள் வலய, மாவட்ட, மாகாண மற்றும் தேசிய மட்டங்களில் சாதனைகளைப் பெற்றுள்ளதாகவும் அவர் பாராட்டினார்.

எனினும், பாடப்புத்தகங்களைப் படித்து பரீட்சையில் அதிக மதிப்பெண்களைப் பெறுவது மட்டுமே ஒரு மாணவனை சமூகத்துக்குத் தேவையான முழுமையான மனிதராக மாற்றாது எனத் தெரிவித்த ஆளுநர், மாணவர்கள் விளையாட்டிலும், கலைகளிலும் ஈடுபட வேண்டும், விவாதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும், மற்றவர்களுடன் இணைந்து பணியாற்றக் கற்றுக்கொள்ள வேண்டும், தோல்வியையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். இத்தகைய அனுபவங்களில்தான் தலைமைத்துவப் பண்பு உருவாகும் எனவும் குறிப்பிட்டார்.

எதிர்காலத்தில் மருத்துவர், பொறியியலாளர், ஆசிரியர், அரச அலுவலர் அல்லது தொழிலதிபர் என எந்தத் துறைக்குச் சென்றாலும் அறிவு மட்டுமன்றி, மனிதர்களை வழிநடத்தும் திறன், துணிச்சலுடன் முடிவெடுக்கும் ஆற்றல் மற்றும் பிறருக்காக சிந்திக்கும் மனப்பாங்கு அவசியம் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.

‘நீங்கள் எந்த உயரத்துக்குச் சென்றாலும், உங்களால் இன்னொருவருக்கு உதவ முடியாவிட்டால் அந்த உயரத்தின் அர்த்தம் குறைந்து விடும். உங்களை உருவாக்கிய ஆசிரியர்களையும், உங்களை வளர்த்த பெற்றோர்களையும், உங்களுக்கு வாய்ப்புகளை வழங்கிய இந்த சமூகத்தையும் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. நீங்கள் வளர்ந்த இந்த மண்ணுக்குத் திரும்பக் கொடுக்க வேண்டும்’ எனவும் ஆளுநர் வலியுறுத்தினார்.

அத்துடன், தற்போதைய கல்விச் சீர்திருத்தங்கள் பரீட்சைக்கான கல்வியை மட்டுமன்றி, அறிவு, திறன், விழுமியங்கள், சிந்திக்கும் ஆற்றல் மற்றும் வாழ்க்கைக்குத் தேவையான பல்வேறு ஆளுமைத் திறன்களை ஒருங்கிணைத்த கல்வியை நோக்கமாகக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்ட ஆளுநர், ‘பரீட்சைக்காக மட்டும் படிக்க வேண்டாம்; வாழ்க்கைக்காகக் கற்றுக்கொள்ளுங்கள்’ என மாணவர்களிடம் கேட்டுக்கொண்டார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு கட்டடங்களும் நிதியும் மாத்திரம் போதாது எனக் குறிப்பிட்ட ஆளுநர், அந்த மாவட்டத்துக்குச் சொந்தமான அறிவாளிகள், திறமையாளர்கள், தலைவர்கள் மற்றும் பொறுப்பேற்கக்கூடிய புதிய தலைமுறை உருவாக வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் பல அரச நிறுவனங்களிலும் பல்வேறு துறைகளிலும் பணியாற்றுபவர்களில் கணிசமானோர் வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், இதை யாரையும் குற்றம்சாட்டுவதற்காகக் கூறவில்லை எனவும், எதிர்காலத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களே தமது மாவட்டத்தின் அரச நிறுவனங்களில் அதிகளவில் பொறுப்பேற்கும் நிலை உருவாக வேண்டும் என்பதே தமது எதிர்பார்ப்பு எனவும் தெரிவித்தார்.

அதேவேளை, யாழ்ப்பாணத்திலிருந்து வடக்கு மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களுக்கு ஆசிரியர்களை அனுப்ப வேண்டிய நிர்வாகத் தேவை காணப்படுவதையும் குறிப்பிட்ட ஆளுநர், இத்தகைய நிலைமைகளுக்கு மாறாக ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தேவையான மனிதவளத்தை அந்தந்த மாவட்டத்திலேயே உருவாக்குவது அவசியம் எனக் குறிப்பிட்டார்.

‘இன்று இங்கு கல்வி கற்கும் நீங்கள் நாளை இந்த மாவட்டத்தின் ஆசிரியர்களாகவும், மருத்துவர்களாகவும், பொறியியலாளர்களாகவும், நிர்வாகிகளாகவும், அதிகாரிகளாகவும் திரும்பி வர வேண்டும். ‘நான் ஏன் மீண்டும் இங்கே வர வேண்டும்?’ என்பதற்குப் பதிலாக, ‘நான் வராவிட்டால் யார் வருவார்கள்?’ என்று நீங்கள் உங்களையே கேட்க வேண்டும்’ என மாணவர்களுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார்.

முல்லைத்தீவு வளமற்ற மாவட்டம் அல்ல எனக் குறிப்பிட்ட ஆளுநர், நிலவளம், கடல்வளம், விவசாய வளம், இயற்கை வளம் ஆகியவற்றுடன், அதைவிட முக்கியமாக மனிதவளத்தை உருவாக்குவதற்கான ஆற்றலும் மாவட்டத்துக்கு இருப்பதாகத் தெரிவித்தார். இம்மாவட்டத்தின் எதிர்காலம் இன்று நிகழ்வில் அமர்ந்துள்ள மாணவர்களின் கைகளிலேயே இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பரிசு பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்த ஆளுநர், பரிசு பெறாத மாணவர்களும் அதே நம்பிக்கையுடன் முன்னேற வேண்டும் எனக் குறிப்பிட்டார். மேடையில் பெயர் அழைக்கப்படாதது வாழ்க்கையின் முடிவு அல்ல என்றும், ஒரு பரிசு ஒருவரை உயர்த்துவதுமில்லை, ஒரு தோல்வி ஒருவரைத் தாழ்த்துவதுமில்லை என்றும் வலியுறுத்தினார்.

இந்தப் பள்ளி உங்களுக்குக் கல்வியை வழங்கட்டும்; ஆசிரியர்கள் உங்களுக்கு வழிகாட்டட்டும்; பெற்றோர் உங்களுக்கு ஆதரவாக இருக்கட்டும். ஆனால் உங்கள் பயணத்தை நீங்கள் தான் உருவாக்க வேண்டும்’ என மாணவர்களிடம் தெரிவித்த ஆளுநர், எதிர்காலத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தின் அரச நிறுவனங்கள், மருத்துவமனைகள், பாடசாலைகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்களில் இந்த மண்ணின் பிள்ளைகள் முக்கியப் பொறுப்புகளை ஏற்றுக்கொள்வதே இத்தகைய பரிசளிப்பு விழாவின் உண்மையான வெற்றியாக அமையும் எனத் தெரிவித்தார்.

நிகழ்வின் ஒரு பகுதியாக சிறந்து விளங்கிய மாணவர்களுக்கான பரிசளிப்பு இடம்பெற்றதுடன், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கினார். இதனைத் தொடர்ந்து மாணவர்களின் கலைத்திறன்களை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

பாடசாலையின் அதிபர் நேவிற் ஜீவராசா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், வலயக் கல்விப் பணிப்பாளர் தமிழ்மாறன், பாடசாலையின் பழைய மாணவனும் யாழ். பல்கலைக்கழக வணிகபீட பேராசிரியருமான ராஜ் உமேஸ், புதுக்குடியிருப்பு பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலர் திருவாட்டி டென்சியா கிரிதரன், பிரதிக் கல்விப் பணிப்பாளர் பாலராஜ், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், ஓய்வுபெற்ற பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், ஓய்வுபெற்ற அதிபர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.