வடக்கு மாகாண சபை வரலாற்றில் முதல் தடவையாக ஒரே தடவையில் 74 சாரதிகள் ஆட்சேர்ப்புக்கு அனுமதி

வடக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களில் நிலவும் சாரதி பற்றாக்குறையை நிவர்த்தி செய்து, மக்களுக்கான அத்தியாவசிய உள்ளூராட்சி சேவைகளை மேலும் வினைத்திறனுடன் முன்னெடுக்கும் வகையில் 74 சாரதி பதவிகளை ஆட்சேர்ப்பு மூலம் நிரப்புவதற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முகாமைத்துவ சேவைகள் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது. வடக்கு மாகாண சபையின் வரலாற்றில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஒரே கட்டமாக இவ்வளவு பெருந்தொகையான சாரதிகளை ஆட்சேர்ப்பு மூலம் உள்ளீர்ப்பதற்கான அனுமதி கிடைத்திருப்பது முதன்முறையாகும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தின் உள்ளூராட்சி மன்றங்களில் நிலவும் சாரதி ஆளணி வெற்றிடங்களை நிரப்புவதற்கான நீண்டகால தேவைக்கு தீர்வு காணும் வகையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கிடைத்துள்ள அனுமதிக்கமைய 27 உள்ளூராட்சி நிறுவனங்களில் மொத்தம் 204 சாரதி பதவிகளுக்கான அங்கீகரிக்கப்பட்ட ஆளணி காணப்படுகின்ற நிலையில், அதில் 85 வெற்றிடங்கள் காணப்பட்டுள்ளன. அவற்றில் 74 வெற்றிடங்களை நிரப்புவதற்கு தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த அனுமதி தொடர்பில் கருத்து தெரிவித்த வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன், ‘வடக்கு மாகாணத்தின் உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஒரே தடவையில் இவ்வளவு பெருந்தொகையான சாரதி பதவிகளை ஆட்சேர்ப்பு மூலம் நிரப்புவதற்கான வாய்ப்பு கிடைத்திருப்பது வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாகும். இதன் மூலம் நீண்டகாலமாக நிலவி வந்த ஆளணி பற்றாக்குறைக்கு நடைமுறை ரீதியான தீர்வொன்றை நோக்கி நகர முடியும்’ எனத் தெரிவித்தார்.

மேலும், இந்த முக்கியமான அனுமதியை வழங்கியமைக்காக மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்துக்கு வடக்கு மாகாண மக்களின் சார்பிலும், வடக்கு மாகாண சபையின் சார்பிலும் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக ஆளுநர் குறிப்பிட்டார்.

அத்துடன், இந்த அனுமதியைப் பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளில் ஒத்துழைப்பு வழங்கிய கௌரவ போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் கௌரவ கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர், பொதுநிருவாக, மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி கௌரவ அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன ஆகியோருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்ட ஆளுநர், மக்களுக்கு நேரடியாகப் பயனளிக்கும் இத்தகைய ஆளணி தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கி தொடர்ந்தும் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

சாரதி ஆளணி நிரப்பப்படுவதன் மூலம் உள்ளூராட்சி மன்றங்களின் வாகனப் பயன்பாடு மேலும் ஒழுங்குபடுத்தப்பட்டு, மக்களின் அன்றாடத் தேவைகளுடன் தொடர்புடைய சேவைகளை உரிய நேரத்தில் வழங்குவதற்கும், உள்ளூராட்சி மன்றங்கள் தங்கள் வாகனங்கள் ஊடாக வருமானத்தைப் பெருக்கிக் கொள்வதற்கும் வாய்ப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.