இந்து சமயத்தைச் சேர்ந்த பிள்ளைகளுக்கான அறநெறிக் கல்வியை மேலும் வலுப்படுத்துவதற்கு தேவையான சட்டரீதியான மற்றும் நிர்வாகரீதியான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து, அதனை கல்வி அமைப்புடன் பொருத்தமாக இணைத்து பரந்தளவில் முன்னெடுக்க வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார்.
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பெருந்திருவிழாவை முன்னிட்டு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘தெய்வீக திருக்கூட்டம் – 2026’ நிகழ்வு இன்று (09.09.2026) புதன்கிழமை நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனக் கலை மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இன்றைய இளைய தலைமுறை பல்வேறு தகவல்களின் மத்தியில் வாழ்ந்து வருவதால், எது சரி, எது தவறு என்பதைத் தீர்மானிக்க வேண்டிய சூழல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன எனக் குறிப்பிட்ட ஆளுநர், இத்தகைய நிலையில் ஆன்மிகமும் அறநெறியும் அவர்களுக்கு வலுவான வழிகாட்டியாக அமைய முடியும் என்றார். அறிவு ஒருவரை உயர்த்தக்கூடும்; ஆனால் அறமே அவரைச் சரியான பாதையில் வழிநடத்தும் எனவும் அவர் தெரிவித்தார்.
ஆன்மிகம் என்பது கோவிலுக்குச் சென்று வழிபடுவதில் மட்டும் அடங்கியதல்ல, நேர்மை, அன்பு, தன்னடக்கம், பிறரை மதித்தல், பெற்றோரைப் போற்றுதல், சமூகப் பொறுப்பு மற்றும் தவறிலிருந்து விலகி வாழ்தல் ஆகியவை அதன் முக்கிய வெளிப்பாடுகளாகும் என ஆளுநர் குறிப்பிட்டார்.
அறநெறி வலுவாகப் பதிந்த ஒரு குழந்தை எதிர்காலத்தில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டாலும் திசைதவறுவதற்கான வாய்ப்பு குறையும் எனத் தெரிவித்த ஆளுநர், மாணவர்களின் கல்வியில் அறநெறிக் கல்விக்கு மேலும் முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்றார்.
இதனுடன், அறநெறிப் பாடசாலைகள் வாரத்தின் சில மணிநேரங்களில் பாடம் கற்பிக்கும் இடங்களாக மட்டும் இல்லாமல், குழந்தைகளின் குணநலனையும் ஆளுமையையும் கட்டியெழுப்பும் மையங்களாக மாற்றப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். இந்தப் பணியில் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் புதிய அணுகுமுறைகளை முன்னெடுக்க வேண்டிய தேவை இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
மேலும், இந்து சமயத்தைச் சேர்ந்த பிள்ளைகளுக்கான அறநெறிக் கல்வியை மேலும் வலுப்படுத்துவதற்காக சட்டரீதியாகவும் நடைமுறைரீதியாகவும் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் குறித்து திணைக்களம் விரிவாக ஆராய வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட ஆளுநர், அறநெறிக் கல்வியை பொதுக் கல்வி அமைப்புடன் எவ்வாறு பொருத்தமாக இணைக்கலாம் என்பதையும் ஆராய வேண்டும் என்றார்.
நல்லூர் என்பது ஒரு ஆலயமாக மட்டும் இல்லாமல், வடக்கு மக்களின் ஆன்மிகத்துக்கும் பண்பாட்டுக்கும் அடையாளமாகவும், தலைமுறைகளை இணைத்து நிற்கும் பெரும் பாரம்பரியச் சின்னமாகவும் திகழ்கின்றது எனக் குறிப்பிட்ட ஆளுநர், நல்லூர் பெருந்திருவிழா உலகின் பல பகுதிகளில் வாழும் மக்களை மீண்டும் தாயக மண்ணுடன் இணைக்கும் ஆன்மிக மற்றும் பண்பாட்டு ஒன்றுகூடலாக விளங்குவதாகத் தெரிவித்தார்.
நிகழ்வில் பண்ணிசை, மங்கள விளக்கேற்றல், இறைவணக்கம், வரவேற்பு நடனம், உரைகள், இந்து சமய அறநெறிப் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் சிறப்புக் கலை நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றன.
தலைமையுரையையும் ஆசியுரையையும் சிவஸ்ரீ கைலாச வாசதேவக் குருக்கள் வழங்கினர். தமிழகத்தின் தருமையாதீன தென்மண்டல வணக்கத்துக்குரிய ஸ்ரீமத் மாணிகவாசக தம்பிரான் சுவாமிகளின் திருமுன்னிலையில் நிகழ்வுகள் அரங்கேறின.




