வடக்கு மாகாணப் பாடசாலைகளுக்கு கல்வி அமைச்சின் ஊடாக வழங்கப்படும் மின்சாரக் கட்டண ஒதுக்கீடு போதுமானதாக இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாடசாலைகளின் தேவைகளைக் கருத்திற்கொண்டு அத்தொகையை அடுத்த ஆண்டிலிருந்து அதிகரிப்பது தொடர்பில் சாதகமாகப் பரிசீலிக்கப்படும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
கிளிநொச்சி மாவட்டத்தின் 2026ஆம் ஆண்டுக்கான மூன்றாம் காலாண்டு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (04.09.2026) வெள்ளிக்கிழமை காலை கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் இ.சந்திரசேகர் மற்றும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோரின் இணைத் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்டத்தின் அபிவிருத்தி மற்றும் நிர்வாக முன்னேற்றங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.
கூட்டத்தின் ஆரம்பத்தில் கிளிநொச்சி மாவட்டச் செயலர் சு.முரளிதரன் வரவேற்புரையாற்றியதுடன், தொடர்ந்து ஆளுநர் இணைத்தலைமையுரையாற்றினார். இவ்வாண்டுக்கான அபிவிருத்தித் திட்டங்களை மழைக்காலம் ஆரம்பிப்பதற்கு முன்னரே இயன்றளவு நிறைவு செய்ய அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும் என ஆளுநர் கேட்டுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து இணைத்தலைவர் அமைச்சர் இ.சந்திரசேகர், மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திப் பணிகளின் முன்னேற்றத்தைப் பாராட்டியதுடன் அதிகாரிகளுக்கும் நன்றியையும் தெரிவித்தார்.
இதன்பின்னர் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதிக்காக முன்வைக்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது. பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கௌதாரிமுனைப் பகுதியில் சுற்றுலா அபிவிருத்திக்காக அடையாளப்படுத்தப்பட்டுள்ள 300 ஏக்கர் காணியில், முதல் கட்டமாக 113 ஏக்கர் முதலீட்டாளர்களுக்கு வழங்குவது தொடர்பில் பரிசீலிக்கப்பட்டது. இதுதொடர்பில் சம்பந்தப்பட்ட பிரதேச செயலகத்தில் அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
நிரல் அமைச்சின் விளையாட்டுத்துறை ஊடாக மைதானங்களை அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்கள் மற்றும் ‘நீர்ப்பாசன மகத்துவம் – எமது பாரம்பரியம்’ திட்டத்தின் கீழ் சிறுகுளங்களைப் புனரமைப்பதற்கான திட்டங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது.
எல்லை நிர்ணயம் தொடர்பில், சில கிராம அலுவலர் பிரிவுகளை இணைப்பதற்கு எல்லை நிர்ணய ஆணைக்குழு முன்வைத்த பரிந்துரைகள் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவில் நிராகரிக்கப்பட்டமை தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. இதுதொடர்பில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவிலும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானத்தையே கருத்திற்கொள்வதற்கு இணக்கம் காணப்பட்டது.
கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் வருடாந்த அபிவிருத்திப் பணிகளுக்கும், கிராமிய வீதிகள் அபிவிருத்தித் திட்டம் – 3 இற்கும் அனுமதி வழங்கப்பட்டது.
போக்குவரத்து அமைச்சால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ள இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியின் கீழ், கிளிநொச்சி டிப்போ சந்தியிலிருந்து பரந்தன் சந்தி வரையிலான ஏ–9 வீதியில் கண்காணிப்புக் கமராக்களைப் பொருத்துவது உள்ளிட்ட பல்வேறு முன்மொழிவுகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டது.
மேலும், கல்மடுவில் அமைந்துள்ள சேரன் அரிசி ஆலையை முழுத் திறனுடன் இயக்குவதற்கு பொருத்தமான முதலீட்டாளரிடம் ஒப்படைப்பது தொடர்பிலும், கிளிநொச்சியைச் சேர்ந்த முதலீட்டாளர் ஒருவரால் உணவு உற்பத்தித் தொழிற்சாலை அமைப்பதற்காகக் கோரப்பட்டுள்ள காணியை வழங்குவது தொடர்பிலும் சாதகமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
இக்கூட்டத்துக்கு விசேடமாக காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் தவிசாளர் அழைக்கப்பட்டிருந்தார். பளை மற்றும் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுகளில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணிகள் தொடர்பில் நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நடவடிக்கைகள் ஆராயப்பட்டன. குறிப்பாக, கடந்தகாலப் போர்ச் சூழ்நிலையை கருத்திற்கொண்டு குறித்த காணிகளில் நீண்டகாலமாக வசித்து வரும் மக்களுக்கு உரிய ஆவணங்களை வழங்கும் நடைமுறை தொடர்பிலும், உரிய அனுமதியின்றி காணிகள் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் சந்தர்ப்பங்களில் அவற்றை மீளாய்வு செய்வது தொடர்பிலும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
இதன்பின்னர் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் துறைவாரியாக மீளாய்வு செய்யப்பட்டது. வீதி அபிவிருத்தி, சமூகசக்தி வேலைத்திட்டம், பன்முகப்படுத்தப்பட்ட வரவு–செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடுகள், டித்வா பேரிடருக்குப் பின்னரான மீள்கட்டுமான நடவடிக்கைகள், வன்னேரிக்குளம் சுற்றுலா அபிவிருத்தி மற்றும் காணி ஆவணங்கள் வழங்கல் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் முன்னேற்றங்கள் இதன்போது ஆராயப்பட்டன.
வடக்கு மாகாண மக்களின் கட்டுமானத் தேவைகளுக்கான மணல் விநியோகம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. மணல் விநியோகத்துக்கான அனுமதிச் செயன்முறைகளில் தேவையற்ற காலதாமதங்கள் ஏற்படாத வகையில் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
வனவளத் திணைக்களத்தின் செயற்பாடுகள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டது. குறிப்பாக, மேய்ச்சல் தரைக்கான கோரிக்கைகளுக்கு சாதகமான நிலைப்பாடு வழங்கப்படாமை மற்றும் குளங்களின் புனரமைப்புப் பணிகளில் வனவளத் திணைக்களத்துடன் தொடர்புடைய இடையூறுகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. இவ்விடயங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சர் மற்றும் வனவளத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகியோரை அழைத்து களப்பயணம் மேற்கொண்டு நிலைமைகளை நேரில் எடுத்துரைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் இ.சந்திரசேகர் தெரிவித்தார்.
மாகாணத் திணைக்களங்களால் கிளிநொச்சி மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் திட்டங்களின் முன்னேற்றமும் இதன்போது மீளாய்வு செய்யப்பட்டது. கல்வி மறுசீரமைப்புச் செயற்பாடுகளில் கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் கிராமிய சுகாதார சேவைகளை வலுப்படுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.
கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள வடக்கு மாகாணத்தின் பெண்கள் சிறப்பு மருத்துவமனைக்குரிய உபகரணங்கள் வேறு மாவட்டங்களுக்கு மாற்றப்படவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களுக்கு எவ்விதத்திலும் இடமளிக்கப்படமாட்டாது என அமைச்சர் இ.சந்திரசேகரும் ஆளுநர் நா.வேதநாயகனும் கூட்டாகத் தெரிவித்தனர்.
பாடசாலைகளுக்கான மாதாந்த மின்சாரக் கட்டண ஒதுக்கீடு போதுமானதாக இல்லையென பிரதேச சபைகளின் கௌரவ தவிசாளர்கள் சுட்டிக்காட்டிய நிலையில், பாடசாலைகளின் தற்போதைய தேவைகளை கருத்திற்கொண்டு அடுத்த ஆண்டிலிருந்து அதனை அதிகரிப்பது தொடர்பில் சாதகமாக நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் தெரிவித்தார்.
இன்றைய மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர் – திட்டமிடல், மாகாணப் பணிப்பாளர்கள், மாவட்ட மற்றும் பிரதேச மட்ட அரச அதிகாரிகள், பொலிஸார், முப்படையினர், பொதுஅமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


