யாழ். மாவட்டக் குளங்களைத் தூர்வாரும் நடவடிக்கைகளில் நிலவும் சவால்களுக்கு தீர்வு காண நடவடிக்கை – ஆளுநர் பணிப்பு

யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள குளங்களைத் தூர்வாரி அவற்றின் நீர்ப்பிடிப்பு மற்றும் நீர்வளப் பயன்பாட்டை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள நடைமுறைச் சவால்களைத் துரிதமாகத் தீர்த்து, உள்ளூராட்சி மன்றங்களின் ஒத்துழைப்புடன் இப்பணிகளை முன்னெடுப்பதற்குத் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் பணிப்புரை வழங்கினார்.

யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள குளங்களைத் தூர்வாரும் நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள சவால்களைத் தீர்ப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று (31.08.2026) திங்கட்கிழமை மாலை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

குறிப்பாக கந்தரோடைக்குளத்தைத் தூர்வாரும் நடவடிக்கை தொடர்பில் முன்னர் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்கள் மற்றும் அதனை நடைமுறைப்படுத்துவதில் தற்போது எதிர்நோக்கப்படும் சவால்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. குறித்த பணியை தாமதமின்றி முன்னெடுப்பதற்குத் தேவையான பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஆளுநர் அறிவுறுத்தினார்.

குளங்களைத் தூர்வாரும் பணிகளை உள்ளூராட்சி மன்றங்களின் உதவியுடன் முன்னெடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பிலும் இக்கலந்துரையாடலில் ஆராயப்பட்டது. குறிப்பாக, ஒவ்வொரு தரப்பினரின் பொறுப்புகளைத் தெளிவுபடுத்தி, நடைமுறைச் சிக்கல்கள் ஏற்படாத வகையில் ஒருங்கிணைந்த செயற்பாட்டு முறையொன்றை உருவாக்குவது தொடர்பில் ஆளுநர் பணிப்புரை வழங்கினார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் நீர்வளத்தைப் பாதுகாத்து, குளங்களின் முழுத் திறனையும் பயன்படுத்துவதற்கு அவற்றின் பராமரிப்பு மற்றும் தூர்வாரும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியமும் கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது.

இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், விவசாய அமைச்சின் செயலாளர், யாழ்ப்பாண மாவட்ட மேலதிக மாவட்டச் செயலாளர், உள்ளூராட்சி ஆணையாளர், உள்ளூராட்சி உதவி ஆணையாளர், மருத்துவபீட பீடாதிபதி, யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளர், யாழ்ப்பாண மாவட்ட நீர்ப்பாசனப் பொறியியலாளர் மற்றும் குளங்களைத் தூர்வாரும் செயற்பாடுகளை ஒருங்கிணைத்து வரும் தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.