ஒரு சிறந்த நூலைப் படைப்பதற்கு அறிவு மாத்திரம் போதாது, யதார்த்தத்தை ஆழமாகப் புரிந்துகொள்ள அனுபவமும் அவசியம். அனுபவமும் அறிவும் ஒன்றிணையும் போதுதான் ஒரு நூல் சமூகத்துக்குப் பயனளிக்கும் வகையில் சிறப்புறும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
‘குழந்தைமைக் கல்வியும் ஆரம்பக் கல்வியின் செயற்பாடுகளும்’ மற்றும் ‘புலம்பெயர் நாடுகளில் இலங்கைத் தமிழ்’ ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு நிகழ்வு இன்று (26.08.2026) புதன்கிழமை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சபாலிங்கம் அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய ஆளுநர், முன்பள்ளிக் கல்வியின் முக்கியத்துவம் இலங்கையில் அண்மைக்காலத்திலேயே பரவலாக உணரத் தொடங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். ஆரம்பக்காலக் கல்வியே ஒரு குழந்தையின் அறிவு, நடத்தை மற்றும் எதிர்காலக் கற்றலுக்கான அடித்தளத்தை உருவாக்குகின்ற நிலையில், தற்போதைய அரசாங்கமும் முன்பள்ளிக் கல்விக்கு முன்னுரிமை வழங்கி அதனை ஒழுங்குமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார்.
‘புலம்பெயர் நாடுகளில் இலங்கைத் தமிழ்’ என்ற நூலின் உள்ளடக்கத்துடன் தொடர்புபடுத்தி கருத்துத் தெரிவித்த ஆளுநர், புலம்பெயர் தமிழர்கள் குடும்பங்களுடன் தாயகத்துக்கு வருகை தரும் சந்தர்ப்பங்களில், அவர்களின் பிள்ளைகள் தமிழ் மொழியைப் பேசாத நிலை காணப்படுவது கவலைக்குரிய விடயம் எனத் தெரிவித்தார். தாய்மொழியைப் பேணுவது ஒரு சமூகத்தின் அடையாளத்தையும் பண்பாட்டு தொடர்ச்சியையும் பாதுகாப்பதுடன் தொடர்புடையது என்றும் அவர் வலியுறுத்தினார்.
வேற்றின சமூகங்கள் தங்களுக்குள் உரையாடும்போது தமது தாய்மொழியைப் பயன்படுத்துவதைப் பொதுவாகக் காண முடியும்; ஆனால் தமிழ்ச் சமூகத்தில் அந்தப் பழக்கம் பல இடங்களில் குறைந்து வருவது குறித்து சிந்திக்க வேண்டியுள்ளது என்றும் ஆளுநர் குறிப்பிட்டார். வெளிநாடுகளில் சில அமைப்புகள் புலம்பெயர் தமிழ்ப் பிள்ளைகளுக்குத் தமிழ் கற்பிப்பதற்காக மேற்கொள்ளும் முயற்சிகளைப் பாராட்டிய அவர், அவ்வாறான முயற்சிகளுக்கு ஒத்துழைப்பதற்கு பதிலாக அவற்றைக் குறைகூறுவதும் குழப்புவதும் தமிழ்ச் சமூகத்துக்குள் இடம்பெறுவது வருத்தத்திற்குரியது என்றும் தெரிவித்தார்.
இதேவேளை, நிகழ்வில் உரையாற்றிய மருத்துவ நிபுணர் பேராசிரியர் பாலகோபி முன்வைத்த நடைமுறைப் பிரச்சினைகள் தொடர்பிலும் ஆளுநர் கவனம் செலுத்தினார். அவ்விடயங்களுக்கு தீர்வு காண வேண்டியது அவசியம் என்றும், ஆனால் சமூகத்தில் நீண்டகாலமாக உருவாகியுள்ள சில எதிர்மறையான சிந்தனைப் போக்குகளைக் கடந்து மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு காலமும் பொறுமையும் தேவைப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
‘ஒன்றைச் செய்யுங்கள் என்றால் செய்யாதிருப்பதும், செய்ய வேண்டாம் என்றால் செய்வதும் போன்ற எதிர்மறையான சிந்தனைப் பழக்கத்திலிருந்து எமது சமூகத்தை மெல்லமெல்ல விடுவித்து, நேர்மறையான செயற்பாட்டு மனப்பாங்கை உருவாக்க வேண்டும்’ என ஆளுநர் தெரிவித்தார். சமூக முன்னேற்றத்துக்கு தேவையான மாற்றங்களை நடைமுறையில் ஏற்படுத்துவதற்கு மனப்பாங்கு மாற்றமும் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்நூல்களின் ஆசிரியர் தணிகாசலம்பிள்ளை அவர்கள் அண்மையில் சட்டமானி கற்கையை நிறைவு செய்துள்ளதாகத் தமக்குத் தெரிவிக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட ஆளுநர், கல்வி கற்பதற்கு வயது ஒருபோதும் தடையல்ல என்பதற்கான சிறந்த வாழும் எடுத்துக்காட்டாக அவர் விளங்குகின்றார் எனப் பாராட்டினார். தொடர்ந்து கற்றுக்கொள்வதற்கான ஆர்வமும் முயற்சியும் எந்த வயதிலும் ஒருவரை புதிய அறிவின் உயரங்களுக்கு அழைத்துச் செல்ல முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் மருத்துவ நிபுணர்களின் கௌரவிப்பும் நடைபெற்றது. யாழ். மாவட்டச் செயலர், வடக்கு மாகாண சபையின் முன்னாள் பிரதம செயலர், கல்வியாளர்கள், மருத்துவத்துறை சார்ந்தோர், எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நூல் வெளியீடு மற்றும் அறிமுக உரைகளுடன், நூல்களின் உள்ளடக்கம் தொடர்பான கருத்துரைகளும் இடம்பெற்றன.



