வடக்கு மாகாண சுகாதாரம், சுதேச மருத்துவம், நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சின் 2026ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் செயற்திட்டங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்யும் மாதாந்தக் கூட்டம், வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் இன்று (04.08.2026) செவ்வாய்க்கிழமை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம், சுதேச மருத்துவத் திணைக்களம் மற்றும் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் ஆகியவற்றின் 2026ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தித் திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகளின் பயன்பாடு, கட்டுமானப் பணிகளின் முன்னேற்றம், புதிய திட்டங்களின் நடைமுறைப்படுத்தல், மனிதவள முகாமைத்துவம் மற்றும் எதிர்நோக்கும் சவால்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் கீழ் 306 அபிவிருத்தித் திட்டங்கள் 2,117 மில்லியன் ரூபா மொத்த ஒதுக்கீட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும், தொடர்ச்சியான மற்றும் புதிய கட்டுமானப் பணிகளின் முன்னேற்றம், பராமரிப்புப் பணிகள் மற்றும் சுகாதார கட்டமைப்பு மேம்பாட்டு நடவடிக்கைகள் குறித்து விரிவாக மீளாய்வு செய்யப்பட்டது.
சுதேச மருத்துவத் திணைக்களத்தின் கீழ் மருத்துவமனை உள்கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவ உபகரண வசதிகள், மனிதவள மேம்பாடு மற்றும் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட செயற்திட்டங்களின் முன்னேற்றம் ஆராயப்பட்டதுடன், 78 அபிவிருத்தித் திட்டங்கள் 290.5 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் கீழ் சிறுவர் பாதுகாப்பு, கல்வி அணுகல், சிறுவர் இல்லங்களின் வசதி மேம்பாடு, புதிய கட்டட நிர்மாணங்கள் மற்றும் நிர்வாக திறன் மேம்பாட்டு நடவடிக்கைகளின் முன்னேற்றமும் ஆராயப்பட்டது. இதற்காக 36 அபிவிருத்தித் திட்டங்கள் 310 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
திட்டங்களை காலக்கெடுவுக்குள் நிறைவு செய்வதற்கும், நிதி ஒதுக்கீடுகளை முழுமையாகவும் பயனுள்ள வகையிலும் பயன்படுத்துவதற்கும், மக்களுக்கு நேரடியாகப் பயனளிக்கும் சேவைகளை மேலும் வலுப்படுத்துவதற்கும் தேவையான நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு ஆளுநர் அதிகாரிகளுக்கு ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கினார்.
மேலும், திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் காணப்படும் தடைகளை உடனடியாக அடையாளம் கண்டு தீர்வு காண்பதுடன், திணைக்களங்களுக்கிடையேயான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி, சேவை வழங்கலின் தரத்தையும் செயல்திறனையும் உயர்த்துவதற்கு முன்னுரிமை வழங்குமாறும் அவர் வலியுறுத்தினார்.
இக்கூட்டத்தில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், சுகாதார அமைச்சின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர்கள் (நிர்வாகம், திட்டமிடல், நிதி மற்றும் பொறியியல்) மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், சுதேச மருத்துவத் திணைக்கள ஆணையாளர், நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்கள ஆணையாளர், கட்டடங்கள் திணைக்களப் பணிப்பாளர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.



