இடைக்காடு மகா வித்தியாலயம் போர் சூழ்நிலைகளுக்குள் சிக்கியிருந்தபோதும் தனது தனித்துவத்தை இழக்காமல் இன்றும் ஒரு பெரிய விருட்சமாக உயர்ந்து நிற்கிறது – கௌரவ ஆளுநர்

ஒரு பாடசாலையானது ஒரு நூற்றாண்டைக் கடந்து பல தலைமுறைகளுக்குக் கல்விப் பணியாற்றி வருவது மிகவும் சிறப்பு வாய்ந்ததொரு மைல்கல்லாகும் எனத் தெரிவித்த வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் போர்ச் சூழ்நிலை மற்றும் இடப்பெயர்வு காரணங்களால் எமது பல பாடசாலைகள் தமது தனித்துவத்தை இழந்துவிட்டபோதும் இடைக்காடு மகா வித்தியாலயம் போர் சூழ்நிலைகளுக்குள் சிக்கியிருந்தபோதும் தனது தனித்துவத்தை இழக்காமல் இன்றும் ஒரு பெரிய விருட்சமாக உயர்ந்துநிற்பதாக தெரிவித்தார்.

‘அறிவு புகட்டிய அன்னைக்கு ஓர் ஆராதனை’ எனும் தொனிப்பொருளில் அமைந்த இடைக்காடு மகா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவின் (1926 – 2026) மூன்றாம் நாள் விருது வழங்கல் மற்றும் கௌரவிப்பு நிகழ்வுகள் இன்று (26.07.2026) ஞாயிற்றுக்கிழமை பாடசாலை வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றன. இந்த நிகழ்வில் சிறப்பு அதிதியாகப் பங்கேற்று உரையாற்றும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நிகழ்வில் ஆளுநர் மேலும் உரையாற்றுகையில்,

இடைக்காடு மகா வித்தியாலயம் தனது தனித்துவத்தை இழக்காமல் இன்றும் ஒரு பெரிய விருட்சமாக உயர்ந்த இடத்தில் இருப்பதற்குப் பழைய அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பே முக்கிய காரணமாகும்.

நான் அடிக்கடி குறிப்பிடுவது போன்று, ஒரு பாடசாலையின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் அதன் தலைமைத்துவத்தில்தான் தங்கியுள்ளது. சிறந்த தலைமைத்துவம் இல்லாத நிலையில் ஒரு நல்ல பாடசாலை வீழ்ச்சியடையலாம்; அதேபோன்று, சிறந்த தலைமைத்துவம் கிடைக்கும்போது கீழ் நிலையில் உள்ள ஒரு பாடசாலையை மேல் நிலைக்குக் கொண்டுவர முடியும். இன்று பலரிடம் தலைமைத்துவப் பண்புகளோ, மனிதநேயமோ இல்லை. மற்றவர்களுக்கு உதவி செய்யத் தயங்கும் மனப்பான்மை சமூகத்தில் காணப்படுவது வேதனைக்குரியது.

எனவே, மாணவர்களாகிய உங்களைச் சிறந்த தலைமைத்துவப் பண்புகளும் நற்பண்புகளும் கொண்டவர்களாக உயர் நிலைக்குக் கொண்டுவர வேண்டிய பொறுப்பு எம் அனைவருக்கும் உள்ளது. இந்தப் பாடசாலை தொடர்ச்சியான வளர்ச்சிக்குப் பழைய மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகளின் ஆதரவும் ஒத்துழைப்பும் மிகவும் அவசியமானதாகும். இந்தப் பாடசாலை தனது நூற்றாண்டோடு நின்றுவிடாமல், மென்மேலும் பல நூற்றாண்டுகள் தனித்துவமாகச் செயற்பட்டுச் சிறந்த இடத்தை அடைய வேண்டும்’ எனத் தெரிவித்தார்.

சிரேஷ;ட ஆசிரியர் ம.ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வடக்கு மாகாணக் கல்வி, அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன், யாழ் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி மா.முகுந்தன், காங்கேசன்துறை சிரேஷ;ட பொலிஸ் அத்தியட்சகர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் கல்வியியல் துறைத் தலைவரும் பழைய மாணவருமான பேராசிரியர் க.சின்னத்தம்பி, முன்னாள் மக்கள் வங்கி முகாமையாளரும் பழைய மாணவருமான சி.கந்தசாமி மற்றும் புலம்பெயர் பழைய மாணவ அமைப்புகளின் தலைவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பெருமளவானோர் கலந்துகொண்டனர்.