கூட்டுறவுச் சங்கங்களில் மிகச் சிறப்பாகச் செயற்படும் பனை, தென்னை வளக் கூட்டுறவுச் சங்கங்கள், தங்கள் அங்கத்தவர்களின் நலனிலும் அதீத கரிசனை எடுத்துச் செயற்படுகின்றனர் – கௌரவ ஆளுநர்

பனை, தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் அங்கத்தவர்களுக்குச் சில துறைகளிலுள்ள நேர்மையீனமான அதிகாரிகள் மற்றும் அலுவலர்களால் ஏற்படுத்தப்படும் பாதிப்புகளைக் களைவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனவும், மிக விரைவில் அவர்களுக்குரிய தீர்வைப் பெற்றுக்கொடுப்போம் எனவும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.

‘பனை வளம் நிலையான வாழ்வின் பலம்’ எனும் தொனிப்பொருளில், வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் வடக்கு மாகாண பனை, தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவு நிறுவனங்கள் ஆகியன இணைந்து நடாத்திய பனைசார் உற்பத்திப் பொருட்களின் கண்காட்சியும் விற்பனையும் கடந்த 22.07.2026 முதல் ‘தால வாரம் – 2026’ என்ற பெயரில் யாழ்ப்பாணம், நல்லூர் சங்கிலியன் பூங்காவில் நடைபெற்று வந்தது. இதன் இறுதி நாள் நிகழ்வுகள் இன்று (26.07.2026) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றன.

இந்நிகழ்வில் தலைமையுரையாற்றிய வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் செல்வி அகல்யா செகராஜா, இந்தக் கண்காட்சியின் விற்பனையூடாக 2.4 மில்லியன் ரூபா வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டார். அத்துடன், பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்தக் கண்காட்சியைப் பார்வையிட்டுள்ளதுடன், குறிப்பாக வெளி மாகாணங்களைச் சேர்ந்தவர்களும் அதிகளவில் வருகை தந்து தமது ஆதரவை வழங்கியுள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய ஆளுநர் மேலும் தெரிவித்ததாவது:

நாம் தண்ணீர் ஊற்றிப் பராமரிக்காமலேயே எமது பிரதேசங்களில் தன்னிச்சையாக வளரும் இயல்பு பனை மரத்துக்கே உரிய தனிச் சிறப்பம்சமாகும். அந்தப் பனை மரத்தின் வளங்களை நாங்கள் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். தற்போது பல வளங்களை உச்ச அளவில் பயன்படுத்துகின்ற நிலைக்கு நாம் உயர்ந்திருக்கின்றோம்.

கண்காட்சியைப் பார்வையிட்டபோது, தற்போதைய காலத்துக்கும் சந்தைப்படுத்தலுக்கும் ஏற்ற வகையில் புத்தாக்கமாகச் சிந்தித்து, பல புதிய உற்பத்திப் பொருட்களை உருவாக்கியுள்ளதுடன், அவற்றைக் கவரும் விதமாகக் காட்சிப்படுத்தியுமுள்ளனர். இது மிகவும் பாராட்டப்பட வேண்டிய விடயமாகும்.

எமது பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் பனை மரங்கள் பல்வேறு காரணிகளால் தற்போது குறைவடைந்து வருகின்றன. எனவே, நாம் பனம் விதைகள் நடுகை செய்யும் வீதத்தை வெகுவாக அதிகரிக்க வேண்டும். வெளிநாடுகளை நோக்கிய எமது பனம்பொருள் உற்பத்திகளின் ஏற்றுமதி அதிகரித்துச் செல்கின்றது. இங்குள்ள ஏற்றுமதியாளர்கள் ஊடாகப் பல பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. நாட்டுக்குள் டொலரைக் கொண்டு வருவதில் இந்தக் கூட்டுறவுச் சங்கங்கள்தான் கூடுதல் பங்களிப்பைச் செய்கின்றன.

கூட்டுறவுச் சங்கங்களில் மிகச் சிறப்பாகச் செயற்படும் சங்கங்களாகப் பனை, தென்னை வளக் கூட்டுறவுச் சங்கங்களையே நான் குறிப்பிடுவது வழமை. அவர்கள் தங்கள் அங்கத்தவர்களின் நலனிலும் அதீத கரிசனை எடுத்துச் சிறப்பாகச் செயற்படுகின்றனர். எனவே, உங்களுக்கு ஏற்படுத்தப்படும் இடையூறுகளைக் களைவதற்காக மதுவரித் திணைக்களத்தின் ஆணையாளரை மிக விரைவில் அழைத்துக் கலந்துரையாடவுள்ளேன், என்று ஆளுநர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) சி.ஜெயகாந்தன், வடக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்களப் பணிப்பாளர் ச.கிருஸ்ணேந்திரன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் சந்தைப்படுத்தல் துறைத் தலைவர் சிவேசன் சிவானந்தமூர்த்தி ஆகியோர் விசேட விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.

மேலும், கூட்டுறவு உதவி ஆணையாளர்கள், கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சங்கங்கள் மற்றும் சமாசங்களின் தலைவர்கள், பொது முகாமையாளர்கள், பணியாளர்கள், அங்கத்தவர்கள் மற்றும் போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.