இசையால் எல்லைகளைத் தாண்டி மனித மனங்களை இணைத்த ஒரு மாபெரும் கலைஞனுக்கு, அவரது பெயரில் வீதியொன்றைத் திறந்து வைத்துக் கௌரவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். – கௌரவ ஆளுநர்

இன்று திறக்கப்பட்டுள்ள இந்த வீதி வெறுமனே ஒரு போக்குவரத்துப் பாதையாக அமையாது, எதிர்காலச் சந்ததியினருக்கு ஒரு மாபெரும் கலைஞனின் அர்ப்பணிப்பையும், இந்திய – இலங்கை நாடுகளுக்கிடையிலான ஆழமான கலாசாரப் பிணைப்பையும் நினைவூட்டும் வரலாற்றுச் சுவடாகவே நிலைத்திருக்கும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.

இசையால் எல்லைகளைத் தாண்டி மனித மனங்களை இணைத்த ஒரு மாபெரும் கலைஞனுக்கு, அவர் வாழ்ந்து சேவையாற்றிய மண்ணில், அவரது பெயரில் வீதியொன்றைத் திறந்து வைத்துக் கௌரவிப்பதில் தான் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைவதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார்.

அமரர் வயலின் வித்துவான் பேராசிரியர் வி.லக்சுமிநாராயணா அவர்களது நினைவாக வீதிக்குப் பெயர் சூட்டுதலும் நினைவுரை நிகழ்வும் இன்று வியாழக்கிழமை (23.07.2026) காலை சுன்னாகம், மருதனார்மடத்தில் அமைந்துள்ள வட இலங்கை சங்கீத சபைக்கு முன்னால் நடைபெற்றது. வீதி திறப்பு நிகழ்வைத் தொடர்ந்து வட இலங்கை சங்கீத சபை மண்டபத்தில் ஏனைய நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய ஆளுநர் மேலும் தெரிவித்ததாவது,

இந்த நன்னாள் சாத்தியமாவதற்குப் பிரதான காரணகர்த்தாவாக விளங்கியவர் கௌரவ கலாசார அமைச்சர் அவர்களாவார். இசை மேதையின் குடும்பத்தால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையைச் சாதாரண விண்ணப்பமாகப் பார்க்காமல், யாழ்ப்பாணத்தின் கலை வளர்ச்சிக்கு வித்திட்ட மாபெரும் கலைஞனுக்குச் செலுத்த வேண்டிய தார்மீகக் கடமையாக உணர்ந்து அவர் எனது கவனத்துக்குக் கொண்டு வந்தார். கலைகளையும் கலைஞர்களையும் போற்றும் அமைச்சரின் இந்த உயர்ந்த பண்புக்கும் தொடர்ச்சியான முயற்சிகளுக்கும் வடக்கு மாகாண மக்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். பேராசிரியர் வி.இலட்சுமி நாராயணா அவர்கள் பிறந்த கேரளாவில் அவரது பெயரில் அந்த மாநில அரசு ஏற்கனவே வீதியைத் திறந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

பேராசிரியர் வி.லக்சுமிநாராயணா அவர்கள் இந்தியாவில் பிறந்திருந்தாலும், அவரது கலைப் பயணத்தின் பொன்னான காலங்கள் இந்த யாழ்ப்பாண மண்ணில்தான் கழிந்தன. அவர் வெறும் ஒரு இசைக்கலைஞராக மட்டும் வாழவில்லை, பல நூறு மாணவர்களின் வாழ்வை இசையால் செதுக்கிய ஒரு நடமாடும் பல்கலைக்கழகமாகவே வாழ்ந்தார். வட இலங்கை சங்கீத சபையில் அவர் ஆசிரியராகவும் வழிகாட்டியாகவும் பணியாற்றிய காலப்பகுதியில், யாழ்ப்பாணத்தில் கர்நாடக இசை புதிய பரிமாணத்தை அடைந்ததுடன், இந்தியாவுக்கு நிகரான இசைப் புலமையை இங்கு உருவாக்குவதற்கு அவர் ஒரு பாலமாகச் செயற்பட்டார்.

அன்னாரின் புதல்வரும், அகிலம் போற்றும் வயலின் வித்துவானுமான பத்மபூசண் கலாநிதி எல்.சுப்பிரமணியம் அவர்கள் நம்மிடையே வீற்றிருப்பது எமக்குக் கிடைத்த மாபெரும் கௌரவமாகும். உலகளாவிய ரீதியில் பல சர்வதேசக் கலைஞர்களுடன் இணைந்து உலக இசைக்கு அவர் ஆற்றிவரும் தொண்டு அளப்பரியது. அவரது இசைப் பயணம் யாழ்ப்பாணத்தில்தான் தொடங்கியது என்பதுடன், அவரது சிறுவயது நினைவுகள், முதல் இசைப் பயிற்சி, முதல் பொதுநிகழ்ச்சி ஆகிய அனைத்துக்கும் யாழ்ப்பாணமே சாட்சியாக இருந்துள்ளது. இத்தனை புகழின் உச்சிக்குச் சென்றாலும், தனது தந்தையார் இசைத் தொண்டாற்றிய இந்த மண்ணுக்கு அவர் நேரில் வருகை தந்துள்ளமையானது அவரது வேர்களையும், எளிமையையும் எமக்குக் காட்டுகின்றது.

உண்மையான கலைஞர்களுக்கும் என்றுமே மரணமில்லை. பேராசிரியர் வி.லட்சுமி நாராயணா அவர்கள் எமது மண்ணில் விதைத்த இசை விதைகள், இன்று பல பெரும் விருட்சங்களாக வளர்ந்து நிற்கின்றன என்று ஆளுநர் தனது உரையில் மேலும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் இராமநாதன் கல்லூரி மாணவர்களின் வரவேற்பு நடனத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில், வடக்கு மாகாண பண்பாட்டுத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் திருமதி. தர்சினி வரவேற்புரையை நிகழ்த்தினார். உடுவில் பிரதேச செயலாளர் திருமதி. பொ.பிறேமினி அறிமுக உரை நிகழ்த்தினார். இந்நிகழ்வில், இராமநாதன் நுண்கலைப்பீட மாணவிகளின் சிறப்பு நடனமும் இடம்பெற்றது. கௌரவ கலாசார அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி, யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரல் ஸ்ரீ சாய் முரளி, மற்றும் வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் உப தவிசாளர் ஆகியோர் உரைகளை ஆற்றினர். நிகழ்வின் நிறைவாக, விசேட அதிதியாகக் கலந்துகொண்ட அன்னாரின் புதல்வரும் உலகப் புகழ்பெற்ற இசை மேதையுமான சுப்பிரமணியம் அவர்கள் ஏற்புரையை வழங்கினார்.