ஜேர்மன் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைச்சகத்தின் நிதியுதவியின் கீழ், ஜேர்மனியின் ஆசிய-பசிபிக் வர்த்தக சங்கம் உள்ளூர் பங்காளர்களுடன் இணைந்து, இலங்கையின் வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் மற்றும் புதிய முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பில் ஆராயும் விசேட சந்திப்பொன்று வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் ஜேர்மன் நிபுணர் குழுவுக்கும் இடையில் இன்று (22.07.2026) புதன்கிழமை ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.
இச்சந்திப்பில் ஜேர்மனியின் sequa gGmbH நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் கலாநிதி. ரோலண்ட் ஸ்ட்ரோஹ்மேயர், Kasoma Consulting நிறுவனத்தின் சர்வதேச நிபுணர் கத்ரின் சீலிகே மற்றும் உள்ளூர் பங்காளர்களான வடக்கு மாகாண கைத்தொழில் மன்றத்தின் பிரதிநிதிகள், மகளிர் கைத்தொழில் மற்றும் வர்த்தக சம்மேளன பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது, வடக்கு மாகாண கைத்தொழில் மன்றம் உள்ளிட்ட உள்ளூர் பங்காளர்களுடன் இணைந்து, ஜேர்மன் அரசாங்கத்தின் ஆதரவுடன் நடைமுறைப்படுத்தப்படும் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் வழிகாட்டுதல் செயற்பாடுகளின் தற்போதைய நிலை மற்றும் அதன் மதிப்பீடுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
இச்சந்திப்பில் கருத்துத் தெரிவித்த ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், ‘போருக்கு முன்னர் வடக்கில் இயங்கிய பல தொழிற்சாலைகள் பல்லாயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கி வந்தன. எனினும், அவை போரால் முற்றாக அழிவடைந்துள்ள நிலையில், அந்தத் தொழிற்சாலைகள் இன்று இல்லை. எமது மாகாணத்தின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் புதிய முதலீடுகளை நாங்கள் பெரிதும் வரவேற்கின்றோம்,’ எனத் தெரிவித்தார்.
மேலும், வடக்கு மாகாணத்தின் மீதான அரசாங்கத்தின் விசேட கரிசனை குறித்துப் பிரஸ்தாபித்த ஆளுநர், ‘வடக்கின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அரசாங்கம் புதிய முதலீட்டு வலயங்களை இங்கு உருவாக்கவுள்ளது. அத்துடன், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களை ஊக்குவிப்பதிலும், அவர்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதிலும் அரசாங்கம் மிகவும் உறுதியாக உள்ளது,’ எனவும் சுட்டிக்காட்டினார்.
ஜேர்மன் பிரதிநிதிகள், வடக்கின் தற்போதைய முதலீட்டுச் சூழல், அதற்கான வாய்ப்புகள் மற்றும் உள்ளூர் கைத்தொழிலாளர்களின் தேவைகள் குறித்து ஆளுநரிடம் கேட்டறிந்துகொண்டதுடன், எதிர்காலப் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்குத் தமது தொடர்ச்சியான ஒத்துழைப்பை வழங்குவது குறித்தும் கலந்துரையாடினர்.



