ஒரு கிராமத்தின் வளர்ச்சிக்குக் கல்வி மிகவும் இன்றியமையாததாகும். பலர் கல்வியைப் பணம் சம்பாதிப்பதற்கான வழியாகவே பார்க்கின்றனர். இந்நிலை மாற்றப்பட வேண்டும். – ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

கல்வியானது பணம் சம்பாதிப்பதற்கோ அல்லது பதவிகளை அடைவதற்கோ மட்டுமன்றி, மக்களுக்குச் சேவை செய்வதற்கே பயன்பட வேண்டும் எனவும், கல்வி கற்பதன் மிக உயர்ந்த நிலையே மக்களுக்குச் சேவை செய்யும் ஒருவராக உருவாவதுதான் எனவும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.

அளவெட்டி ஞானோதயா நம்பிக்கை நிதியத்தின் ஆண்டு விழாவும், அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வும் நேற்று (25.06.2026) வியாழக்கிழமை மாலை பன்னாலை வரத்தலம் பிள்ளையார் கோவில் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகப் பங்கேற்று உரையாற்றும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நிகழ்வில் ஆளுநர் மேலும் உரையாற்றுகையில்,

ஒரு கிராமத்தின் முழுமையான வளர்ச்சிக்குக் கல்வி மிகவும் இன்றியமையாததாகும். ஆனால், இன்றைய காலகட்டத்தில் கல்வி இயந்திரமயமான ஒரு நிலைக்கு மாறிவிட்டதை நாம் காண்கிறோம். பலர் கல்வியைப் பணம் சம்பாதிப்பதற்கான ஒரு வழியாகவே பார்க்கின்றனர். இந்நிலை மாற்றப்பட வேண்டும். எந்தவொரு துறையில் இருந்தாலும் சேவை செய்யும் மனப்பான்மை வளர வேண்டும். இதற்குச் சிறந்த உதாரணமாக எங்கள் கிராமத்தில் பிறந்து படித்து, இன்று பலருக்கும் சேவை செய்யும் மருத்துவர் நாடாளுமன்ற உறுப்பினர் பவானந்தராஜா அவர்களைக் குறிப்பிடலாம். நாம் எவ்வளவு உயர்ந்த பதவியில் இருக்கிறோம் என்பதல்ல, அந்தப் பதவியைப் பயன்படுத்தி மக்களுக்கு எவ்வாறு சேவை செய்கிறோம் என்பதே மிக முக்கியமானது.

மேலும், ஒரு பாடசாலை அல்லது நிறுவனத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் அதன் தலைமைத்துவத்திலேயே தங்கியுள்ளது. சிறந்த தலைமைத்துவம் உள்ளவர்களே நிறுவனங்களை உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்வார்கள். எனவே, மாணவர்களாகிய நீங்களும் சிறந்த தலைமைத்துவப் பண்புகளை வளர்த்துக்கொள்ள வேண்டும், என வலியுறுத்தினார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர், பல உயர்ந்த பதவிகளில் இருப்பவர்கள் தங்களுக்குரிய பொறுப்புகளைத் தட்டிக்கழிக்கும் வகையில் சும்மா இருப்பதில் எந்தப் பயனும் இல்லை. மக்களுக்காக நாம் அர்ப்பணிப்புடன் வேலை செய்ய வேண்டும். அந்த வகையில், கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பிள்ளைகளை நல்ல நிலைக்குக் கொண்டுவர வேண்டும் என்ற உயர்ந்த நோக்கோடு செயற்பட்டு வரும் அளவெட்டி ஞானோதயா நம்பிக்கை நிதியத்தின் பணி அளப்பரியது. சிறுவயதில் நான் மூன்றாம் வகுப்பு வரை கல்வி கற்ற பாடசாலை பின்னரான காலப்பகுதியில் மூடப்பட்டுவிட்டது. இந்த நிதியத்தின் ஊடாகக் கிராமத்துப் பிள்ளைகளின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுவது பாராட்டுக்குரியது. இந்த நிதியத்தின் ஊடாக மாணவர்கள் சிறந்த ஆளுமையுள்ளவர்களாகவும் தலைமைத்துவப் பண்பு கொண்டவர்களாகவும் உருவாக வேண்டும்’ எனத் தெரிவித்தார்.

அளவெட்டி ஞானோதயா நம்பிக்கை நிதியத்தின் தலைவர் மங்களம் மணிசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ஸ்ரீ பவானந்தராஜா, வலி. வடக்கு பிரதேச சபைத் தவிசாளர் கௌரவ சோமசுந்தரம் சுகிர்தன், நிதியத்தின் சர்வதேச இணைப்பாளர் அ.ஆனந்தகுமாரன் உள்ளிட்ட பலருடன் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.