கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் முயற்சிகள் மற்றும் வலியுறுத்தல்களின் பலனாக, முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தால் கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனைக்குப் புதிதாக 58 ஆளணி இடங்கள் உருவாக்கம்

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தொடர்ச்சியான முயற்சிகள் மற்றும் வலியுறுத்தல்களின் பலனாக, கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனைக்குப் புதிதாக 58 ஆளணி இடங்களை உருவாக்கி முகாமைத்துவ சேவைகள் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அனுமதியளித்துள்ளது.

வடக்கு மாகாணத்துக்கான ஆளணி வெற்றிடங்கள் மற்றும் தேவைகள் குறித்து கௌரவ ஆளுநரால் விடுக்கப்பட்ட தொடர்ச்சியான கோரிக்கைகளையடுத்து, அது தொடர்பில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளால் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதன் பயனாக, சுமார் 13 ஆண்டுகளின் பின்னர் முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் வடக்கு மாகாணத்துக்கு நேரடியாகப் பயணம் செய்து கள ஆளணி மீளாய்வுகளை மேற்கொண்டிருந்தனர்.

கடந்த 2026 ஜனவரி 19ஆம் திகதி தொடக்கம் 23ஆம் திகதி வரை இந்த விசேட கள மீளாய்வுப் பணிகள் இடம்பெற்றன. இந்தக் களப் பயணத்தின்போது அவதானிக்கப்பட்ட விடயங்கள் மற்றும் அத்தியாவசிய சேவைத் தேவைகளைக் கருத்திற்கொண்டே இந்தப் புதிய ஆளணி அதிகரிப்புக்கான அனுமதி தற்போது வழங்கப்பட்டுள்ளது.

நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியுடன் வடக்கு மாகாணத்தில் சுகாதார சேவைகளை வலுப்படுத்துதல் திட்டம் முன்னெடுக்கப்பட்டபோது, கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனையில் ‘பெண்கள் சுகாதாரப் பராமரிப்பு மற்றும் மகப்பேறு சிறப்பு சிகிச்சை நிலையம்’ புதிதாக நிர்மாணிக்கப்பட்டது. எனினும், கடுமையான ஆளணிப் பற்றாக்குறை காரணமாக இது இதுவரை முழுமையாகச் செயற்பட முடியாமல் மிகப் பெரிய சவால்களை எதிர்கொண்டு வந்தது.

ஆளுநர் அவர்களின் தீவிர முயற்சியால் தற்போது கிடைக்கப்பெற்றுள்ள இந்தப் புதிய ஆளணி அனுமதியின் ஊடாக, குறித்த பெண்கள் சிறப்பு மருத்துவமனையை முழுமையாக இயங்கச் செய்து, மக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டுவருவதற்கான நிரந்தரத் தீர்வு எட்டப்பட்டுள்ளது.

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பொதுத் திறைசேரியின் கீழ் இயங்கும் முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அவர்களினால் 18.06.2026 அன்று இது தொடர்பான உத்தியோகபூர்வ அனுமதி கடிதம் வடக்கு மாகாண பிரதம செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக, கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனையின் மொத்த அங்கீகரிக்கப்பட்ட ஆளணி எண்ணிக்கை 325 இலிருந்து 383 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட சேவைப் பிரமாணக் குறிப்புகளுக்கு அமைவாக இந்தப் புதிய பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்குமாறும் முகாமைத்துவ சேவைகள் திணைக்களம் தனது கடிதத்தில் அறிவுறுத்தியுள்ளது.