யாழ். பல்கலைக்கழக வணிகத்துறை பேராசிரியர் க.தேவராஜா அவர்களின் பவளவிழாவில் ஆளுநர் வாழ்த்துரை வழங்கினார்

பேராசிரியர் க.தேவராஜா அவர்கள் உண்மையிலேயே மிகவும் பண்பான மற்றும் மனிதநேயம் மிக்க ஒரு மனிதர். சிறியவர்கள், பெரியவர்கள் என எவ்வித வேறுபாடும் இன்றி அனைவரையும் ஒரு சிறு சிரிப்போடு சமமாக மதிக்கும் அவரது குணமே அவரைச் சமூகத்தில் உயர்ந்த இடத்தில் வைத்துள்ளது, என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வணிகத்துறையின் முதலாவது பேராசிரியர் க.தேவராஜா அவர்களின் 75ஆவது அகவையைக் குறிக்கும் பவளவிழா நிகழ்வு இன்று (24.05.2026) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு இணுவில் பரராஜசேகரப்பிள்ளையார் கோவில் வீதியில் அமைந்துள்ள ‘கந்தையா அன்னம்மா, இராசையா இராசம்மா அரங்கத்தில்’ சிறப்பாக நடைபெற்றது. தேவா பவளவிழாச் சபையின் தலைவர் க.கனகராசா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் வாழ்த்துரை வழங்கும்போதே கௌரவ ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய ஆளுநர் குறிப்பிடுகையில், பேராசிரியர் தேவராஜா அவர்களை எவரும் மிக எளிமையாக அணுக முடியும். எவர் சென்று உதவி கேட்டாலும், முகம் சுளிக்காமல் சிரித்த முகத்துடன் உதவிகளைச் செய்பவர். அறிமுகம் இல்லாதவர்களாக இருந்தாலும்கூட, சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு அவர்களை நேரில் அழைத்துச் சென்று உதவக்கூடிய பரந்த மனப்பான்மை கொண்டவர். அவர் எந்த நிலையிலும் கோபப்படுவதையோ அல்லது எவரையும் வஞ்சிப்பதையோ நான் கண்டதில்லை.

அவரிடம் உள்ள இறைபக்தி, சமூகத்தின் மீதான அதீத அக்கறை மற்றும் மனிதநேயம் ஆகிய நற்பண்புகள் பல பரிமாணங்களைக் கொண்டவை. ஒவ்வொரு பரிமாணத்திலும் அவர் ஒரு சிறந்த உதாரண புருஷராகவும், நாம் முன்மாதிரியாகக் கொள்ளக்கூடிய பெருந்தகையாகவும் திகழ்கின்றார். இவ்வாறான நற்பண்புகள் கொண்ட ஒருவரைக் காண்பது மிகவும் அரிதாகும். அவர் இந்த பவள விழாவோடு நில்லாமல், அவரது சமூக அக்கறைக்காகவும் நற்குணத்துக்காகவும் அவர் இன்னும் நூறாண்டு காலம் வாழ வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்து வாழ்த்துகின்றேன்’ எனத் தெரிவித்தார்.

இந்த பவளவிழா நிகழ்வில் ‘தேவாமிர்தம் – 4’ நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது. மேலும், சிவசிறி சோமாஸ்கந்த பிரசன்னாக் குருக்கள் ஆசியுரைகளை வழங்கினார். யாழ். பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வாழ்நாள் பேராசிரியர் பொன்.பாலசுந்தரம்பிள்ளை, பேராசிரியர் க.சிவானந்தமூர்த்தி உள்ளிட்ட பல கல்வியியலாளர்கள், சமயப் பெரியோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு வாழ்த்துரைகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.