யாழ்ப்பாணத்தில் உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன் ‘Study In’ நிறுவனத்தின் புதிய கிளை இன்று (08.05.2026) வெள்ளிக்கிழமை காலை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு, நாடாவை வெட்டி நிறுவனத்தின் புதிய அலுவலகத்தைத் திறந்து வைத்தார்.
நிகழ்வில் கௌரவ ஆளுநர் அவர்கள் ஆற்றிய வாழ்த்துரையில் குறிப்பிட்டதாவது:
‘எமது மாகாண மக்களைப் பொறுத்தவரையில் கல்விதான் மிகப்பெரிய மூலதனமாகும். கல்வியில் எப்போதும் உயர் நிலையை அடைய வேண்டும் என்பதற்காகவே எமது மக்கள் பெரிதும் பாடுபடுகின்றனர். இவ்வாறானதொரு சூழலில், ‘Study In’ நிறுவனம் யாழ்ப்பாணத்தில் தனது சேவைகளை ஆரம்பிப்பது மிகவும் சிறப்பானதொரு விடயமாகும்.
இன்று உயர்கல்வி என்பது காலத்தின் கட்டாயத் தேவையாக மாறி வருகின்றது. எமது பகுதியில் பல கல்வி நிறுவனங்கள் இயங்கி வந்தாலும், நம்பிக்கையான உயர்கல்வி வழிகாட்டலுக்காக மாணவர்கள் மிகவும் எளிதில் அணுகக்கூடிய ஒரு நிறுவனமாக இது திகழ வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு. எமது மண்ணின் மாணவர்கள் தங்களது மேற்படிப்பைத் தடையின்றித் தொடர இவ்வாறான நிறுவனங்களின் வரவு ஆரோக்கியமானது, என ஆளுநர் தனது உரையில் தெரிவித்தார்.
நிகழ்வின் ஆரம்பத்தில் ‘Study In’ நிறுவனத்தின் செயல்பாட்டுத் தலைவர் (வடக்கு மற்றும் கிழக்கு) கஜமுகன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தியதுடன், நிறுவனத்தின் நோக்கங்கள் மற்றும் மாணவர்களுக்கான விசேட சேவைகள் குறித்து விளக்கமளித்தார். வடபகுதி மாணவர்களின் சர்வதேச உயர்கல்விக் கனவை நனவாக்கும் வகையில் அவர்களை சர்வதேசப் பல்கலைக்கழகங்களுடன் நேரடியாக இணைக்கும் வகையில் தமது நிறுவனம் பணியாற்றும் எனவும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து இடம்பெற்ற மேடை நிகழ்வுகள் அருட்தந்தையின் ஆசியுரையுடன் ஆரம்பமானது. கலாநிதி ஆறு திருமுருகன், யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் ம.பிரதீபன், யாழ். மாநகர சபையின் மேயர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு உரையாற்றினர்.
இவ்விழாவில் கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலை அதிபர் சந்திரமௌலி லலீசன், ‘Study In’ நிறுவனத்தின் பணிப்பாளர்கள் றிஸ்மி மொஹமட், றிஸ்வான் மற்றும் நிறுவனத்தின் முக்கிய உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.




