எமது மாகாணத்தில் ‘பின்தங்கிய கிராமம்’ என்ற ஒன்று இருக்கவே கூடாது. இவ் இலக்கினை அடைய பல தரப்புக்களின் ஒத்துழைப்புக்களும் தேவை – கௌரவ ஆளுநர்

வடக்கு மாகாண நிர்வாகம் மற்றும் மாகாணத்தின் திட்டமிட்ட அபிவிருத்திச் செயற்பாடுகளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தின் பங்களிப்பை எவ்வாறு பெற்றுக்கொள்ளலாம் என்பது தொடர்பான ஆரம்பக் கட்டக் கலந்துரையாடல், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று (05.05.2026) செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

கலைப்பீடாதிபதி பேராசிரியர் நா.பிரதீபராஜா தனது தொடக்கவுரையில், வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு முழுமையான பங்களிப்பை வழங்குவதற்கு யாழ். பல்கலைக்கழகக் கலைப்பீடம் தயாராகவே இருப்பதாகக் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து உரையாற்றிய வடக்கு மாகாண கௌரவ ஆளுநர், வடக்கு மாகாணத்தில் திட்டமிடப்பட்ட மற்றும் கட்டமைக்கப்பட்ட அபிவிருத்திக்குப் பல்கலைக்கழகங்களின் பங்களிப்பு மிகவும் அவசியமானதாகும். வவுனியாப் பல்கலைக்கழகத்துடன் மாகாண நிர்வாகம் ஏற்கனவே பல்வேறு வழிகளில் இணைந்து செயலாற்றி வருகின்றது. அதேபோல, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விவசாயப் பீடம், பொறியியல் பீடம் மற்றும் தொழில்நுட்பப் பீடம் ஆகியனவற்றுடன் இவ்வாறான சந்திப்புக்கள் ஏற்கனவே நடைபெற்று, அவர்களின் சிறப்பான பங்களிப்புக்களும் மாகாண நிர்வாகத்துக்குக் கிடைத்து வருகின்றன. தற்போது கலைப்பீடத்தினதும் பங்களிப்பைப் பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே இந்தக் கலந்துரையாடல் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

எமது மாகாணத்தில் ‘பின்தங்கிய கிராமம்’ என்ற ஒன்று இருக்கவே கூடாது என்பதை இலக்காக நிர்ணயித்துத்தான் நாம் பணியாற்றி வருகின்றோம். இந்த இலக்கை மாகாண நிர்வாகத்தால் மாத்திரம் தனித்து அடைந்துவிட முடியாது. பல தரப்புக்களின் ஒத்துழைப்புக்களும் தேவை. எங்களுக்கு முன்னால் உடனடிச் சவால்கள், தீர்க்க முடியாத கடந்த காலப் பிரச்சினைகள், மற்றும் அதன் விளைவாக உருவான புதிய பிரச்சினைகள் எனப் பல தடைகள் உள்ளன. அவற்றை எல்லாம் படிப்படியாகத் தீர்ப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த அரசாங்கத்தின் காலத்தில்தான் இவற்றில் பலவற்றைச் செய்து முடிக்க முடியும் என நான் உறுதியாக நம்புகின்றேன். எமது மாகாண நிர்வாகத்துக்கு உங்களிடமிருந்து ஒத்துழைப்புக்கள் கிடைப்பதன் ஊடாக, வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தியை முழுமையாகச் சாத்தியமாக்கலாம்’ எனத் தெரிவித்தார்.

இதன் பின்னர், கலைப்பீடத்தின் ஒவ்வொரு துறைத் தலைவர்களும் மற்றும் கல்வியாளர்களும் தமது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் முன்வைத்தனர்:

கடந்த காலங்களில் அபிவிருத்தித் திட்டங்களின் ஆரம்பக் கட்டங்களில் மாத்திரமே கல்வியாளர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டன. தொடர்ந்தும் அதற்கு இடமளிக்கப்படவில்லை. இனிவரும் காலங்களில் அவ்வாறில்லாமல், தொடர்ச்சியாகக் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் கேட்பதற்குரிய முறையான பொறிமுறையொன்று உருவாக்கப்பட வேண்டும்.

பண்பாட்டு ரீதியான அபிவிருத்தி மிகவும் அவசியமானது. எமது மண்ணின் மரபுரிமை மாறாத அபிவிருத்தித் திட்டங்களே தயாரிக்கப்பட வேண்டும். வெளியிலிருந்து கொண்டுவரப்படும் இறக்குமதித் திட்டங்களாக அவை இருக்கக் கூடாது.

சில துறைகளுக்கான கொள்கைகளைக் கல்வியாளர்கள் உருவாக்கிக் கொடுத்தபோதும், அவற்றின் நடைமுறைப்படுத்தலில் தொடர்ச்சித்தன்மை பேணப்படவில்லை. எந்தவொரு விடயத்திலும் அரச திணைக்களங்கள் தொடர்ச்சித் தன்மையைப் பேண வேண்டும். மாகாணத்துக்கான கொள்கை உருவாக்கத்தில் கல்வியாளர்களின் பங்களிப்பு உள்வாங்கப்பட வேண்டும்.

கலைப்பீடத்தைச் சேர்ந்த மாணவர்களை மாகாண நிர்வாகத்துக்குள் உள்ளகப் பயிற்சிக்கு உள்வாங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். புதிதாக உருவாக்கப்பட்ட சில கற்கைநெறிகளைப் பயிலும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்வதில் உள்ள தடைகள் நீக்கப்பட வேண்டும்.

பல்வேறு விடயங்களில் மாகாணத் தேவைகளுக்கு ஏற்ப மாணவர்களால் ஆராய்ச்சிகளைச் செய்து தர முடியும். இது தொடர்பில் மாகாண நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து செயற்படத் தயாராக உள்ளோம்.

இங்கு கருத்து முன்வைத்த வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன், முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பில் பதிலளித்தார்.

உள்ளகப் பயிற்சி தொடர்பில், பல்கலைக்கழகமும் மாகாண நிர்வாகமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டு அதனைச் செயற்படுத்த முடியும்.

புதிய கற்கை நெறிகளைப் பயின்ற மாணவர்களுக்கான வேலைவாய்ப்புத் தடைகளை நீக்கும் பொருட்டு, புதிய கற்கை நெறிகள் தொடர்பில் தேசிய மற்றும் மாகாணப் பொதுச்சேவை ஆணைக்குழுக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். இதன் ஊடாக சேவைப் பிரமாணக் குறிப்பில் மாற்றங்களைச் செய்து வேலைவாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

எதிர்காலத்தில் மாகாணத்தின் அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள், தத்தமது துறைசார்ந்த கல்வியாளர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் திட்டமிடும், எனக் குறிப்பிட்டார்.

இக்கலந்துரையாடலில் ஆளுநரின் ஆலோசனைக்குழுவின் ஒருங்கிணைப்பாளரும், மூத்த விரிவுரையாளருமான கலாநிதி அகிலன் கதிர்காமர், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், மகளிர் விவகார அமைச்சின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர் (ஆளணியும் பயிற்சியும்), மாகாணத் திணைக்களத் தலைவர்கள், கலைப்பீடத்தின் துறைத் தலைவர்கள், துறைத் தலைவர்களின் பிரதிநிதிகள், பேராசிரியர்கள், மூத்த விரிவுரையாளர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் எனப் பலரும் பங்கேற்றனர்.