வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், வடக்கு மாகாண கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழு மற்றும் வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று (04.05.2026) திங்கட்கிழமை மாலை நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் கூட்டுறவுப் பணியாளர்கள் எதிர்நோக்கும் பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. குறிப்பாக, பணியாளர்களுடன் தொடர்புடைய நிர்வாக விடயங்கள் மற்றும் கோரிக்கைகளை எவ்வித தாமதமுமின்றி விரைவுபடுத்துதல் தொடர்பில் ஆளுநரால் அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
அத்துடன், பணிகளை மேலும் வினைத்திறனாக முன்னெடுக்கும் நோக்கில் வடக்கு மாகாண கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழு மற்றும் மாகாண கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம் ஆகியவற்றுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவது குறித்தும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.
இக்கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர், கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவின் தலைவர், ஆணைக்குழுவின் உறுப்பினர், மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர், கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவின் செயலாளர் மற்றும் மாவட்ட கூட்டுறவு உதவி ஆணையாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.



