மணல் மாபியாவைப் போலவே நெல் சந்தையிலும் மாபியாக்கள் இயங்கி வருகின்றனர். இந்தச் சுரண்டலைத் தடுக்க இடைத்தரகர்களற்ற ஒரு பொறிமுறை அவசியமாகும். – கௌரவ ஆளுநர் தெரிவித்தார்.

விவசாயிகளிடமிருந்து நெல்லை நியாயமான விலைக்குக் கொள்வனவு செய்யவும், மக்களுக்கு மலிவு விலையில் அரிசியை வழங்கவும் கூட்டுறவுச் சங்கங்களாலேயே முடியும். எமது இந்த மக்கள் நல முயற்சிக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் செயற்படும் மாபியாக்களைத் தாண்டி, இத்திட்டத்தை நாம் நிச்சயம் வெற்றிகரமாகச் செய்து முடிப்போம் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தில் கூட்டுறவு இயக்கத்தின் ஊடாக விவசாயத் துறையில் நவீன மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்கில், துணுக்காய் பலநோக்கு கூட்டுறவுச் சங்கம் மற்றும் வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி வங்கி ஆகியன இணைந்து முன்னெடுக்கும் நெல் நடுகை இயந்திரத் தொடக்க விழா இன்று (24.04.2026) முற்பகல் துணுக்காய், கோட்டைகட்டிய குளத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட கௌரவ ஆளுநர் அவர்கள், நெல் நடுகை இயந்திரத்தை உத்தியோகபூர்வமாகத் தொடங்கி வைத்ததுடன், இயந்திரம் மூலமான நடுகைச் செயற்பாடுகளையும் நேரில் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து, மல்லாவியில் ‘சியாப்’ திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட விதை நெல் தூய்மையாக்கல் இயந்திரத்தைப் பொருத்துவதற்கான அடிக்கல்லை நாட்டியதுடன், தூய விதை நெல் உற்பத்தித் திட்டத்தின் கீழ் பயிரிடப்பட்டுள்ள வயல் நிலங்களையும் பார்வையிட்டார்.

விவசாயிகளுடனான கலந்துரையாடலின் போது ஆளுநர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

வளங்கள் நிறைந்த முல்லைத்தீவு மாவட்டம் வறுமையில் முதலிடத்தில் இருப்பது கவலைக்குரியது. இதனை எம்மால் மாற்ற முடியும். எமது இயற்கை வளங்களை முழுமையாகவும் அறிவியல் ரீதியாகவும் பயன்படுத்துவதன் ஊடாகவே மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த முடியும். கடந்த காலங்களில் எமது மாகாணத்திற்குக் கிடைத்த பல உபகரணங்கள் பயன்படுத்தப்படாமல் முடங்கிக் கிடந்தன. அவற்றை மீள இயக்க நாம் எடுத்து வரும் முயற்சியின் ஒரு பலனாகவே, தற்போது இந்த சங்கத்தின் அரிசி ஆலை பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

மணல் மாபியாவைப் போலவே நெல் சந்தையிலும் மாபியாக்கள் இயங்கி வருகின்றனர். இவர்கள் விவசாயிகளிடமிருந்து மிகக் குறைந்த விலைக்கு நெல்லைக் கொள்வனவு செய்து, அதனைப் பதுக்கி வைத்து, மக்களுக்கு அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்கின்றனர். இந்தச் சுரண்டலைத் தடுக்க இடைத்தரகர்களற்ற ஒரு பொறிமுறை அவசியமாகும். கூட்டுறவுச் சங்கங்கள் பலமாகும் போது இந்த மாபியாக்களைக் கட்டுப்படுத்த முடியும். கடந்த காலங்களில் மாபியாக்களுக்குப் பின்னால் அரசியல்வாதிகள் இருந்தனர்;. ஆனால் இன்று மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் மாபியாக்களை ஒடுக்குவதற்கு முழுமையான ஆதரவை வழங்கி வருகின்றது.

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கு மத்திய அமைச்சர்கள் அனைவரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்குகின்றனர். இந்தச் சாதகமான அரசியல் சூழலை விவசாயிகள் மற்றும் கூட்டுறவுத்துறையினர் சரியாகப் பயன்படுத்தி மாகாணத்தை மேம்படுத்த முன்வர வேண்டும், என்றார் ஆளுநர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி வங்கியின் தலைவர் கலாநிதி அகிலன் கதிர்காமர் தெரிவிக்கையில், ஏனைய மாகாணங்களில் பயன்படுத்தப்படாது முடங்கிக்கிடந்த 24 நெல் நடுகை இயந்திரங்களை ஆளுநரின் விசேட கோரிக்கைக்கு அமைய விவசாய அமைச்சர் கௌரவ லால் காந்த அவர்கள் எமது மாகாணத்துக்கு வழங்கியுள்ளார். சர்வதேச ரீதியாக உர விநியோகத்தில் சிக்கல்கள் எழுந்துள்ள நிலையில், இந்த இயந்திர நடுகை முறைமை மிகக் குறைந்த உரப் பாவனையுடன் அதிக விளைச்சலைத் தரக்கூடியது. இது நவீன விவசாயத்தை ஊக்குவிப்பதுடன் மாகாணத்தின் உணவுப் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும், என்றார்.

இந்நிகழ்வில் வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர், துணுக்காய் உதவிப் பிரதேச செயலாளர், மாகாண மற்றும் மாவட்ட விவசாயப் பணிப்பாளர்கள், வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள், துணுக்காய் பலநோக்குக் கூட்டுறவுச் சங்க உறுப்பினர்கள் மற்றும் பெருமளவான விவசாயிகள் கலந்துகொண்டனர்.