வடக்கு மாகாண விவசாய மற்றும் கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன, மீன்பிடி, நீர் விநியோகம் மற்றும் சுற்றாடல் அமைச்சு ஆகியவற்றின் கீழ் 2026ஆம் ஆண்டு முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்த விசேட துறைசார் மீளாய்வுக் கூட்டம், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் இன்று (23.04.2026) மாலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தின் ஊடாக சுமார் 1,875 மில்லியன் ரூபா மதிப்பீட்டில் பாரிய உட்கட்டமைப்புப் பணிகள் திட்டமிடப்பட்டுள்ளன. குறிப்பாக, ‘டித்வா’ பேரிடர் மற்றும் பருவகால வெள்ளத்தால் பாதிக்கப்படும் பல்வேறு பகுதிகளில் வடிகால்களைத் தூர்வாரிப் புனரமைக்கும் பணிகள் தற்போது துரிதப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன், மாகாணத்திலுள்ள பிரதான மற்றும் நடுத்தரக் குளங்களின் நீர் முகாமைத்துவத்தை மேம்படுத்தி, எதிர்வரும் சிறுபோகச் (யால – 2026) செய்கைக்குத் தேவையான நீரைத் தடையின்றி வழங்குவதற்கான அனைத்து ஒழுங்குகளும் உறுதி செய்யப்பட்டுள்ளன.
விவசாயத் திணைக்களத்தின் ஊடாக 692 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் பல்வேறு உற்பத்தி மேம்பாட்டுத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. நடப்புச் சிறுபோகத்தில் (யால – 2026) சுமார் 49,814 ஹெக்டேயர் நிலப்பரப்பில் உப உணவுப்பயிர்களைச் செய்கை முன்னெடுக்க இலக்கிடப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக நிலக்கடலை (13,000 ஹெக்.), பயறு (2,000 ஹெக்.) மற்றும் உழுந்துச் செய்கைகளில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அத்துடன், திராட்சைச் செய்கைக்கான விசேட திட்டங்களுக்காக 16 மில்லியன் ரூபாவும், நவீன விவசாய தொழில்நுட்ப விரிவாக்கத்திற்காக 215 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் ஊடாக 377 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் 97 அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. ‘டித்வா’ வெள்ளப் பெருக்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட கால்நடை விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. யாழ்ப்பாணத்தில் 110 மில்லியன் ரூபாவும், கிளிநொச்சியில் 79 மில்லியன் ரூபாவும் இதுவரை இழப்பீடாக வழங்க அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், நடமாடும் மருத்துவ முகாம்கள் ஊடாக சுமார் 1,600 விவசாயிகளுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
மீன்பிடி அலகின் ஊடாக 33 மில்லியன் ரூபா செலவில் மாகாணத்திலுள்ள குளங்களில் நன்னீர் மீன் மற்றும் இறால் குஞ்சுகளை இருப்புச் செய்யும் பணிகள் ஐந்து மாவட்டங்களிலும் பரவலாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அபிவிருத்திப் பணிகளின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்த கௌரவ ஆளுநர் அவர்கள், அனைத்துத் திட்டங்களையும் உரிய காலப்பகுதிக்குள் விரைவாக நிறைவு செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். குறிப்பாக, கடந்த காலங்களில் ஆரம்பிக்கப்பட்டு இடைநடுவில் உள்ள அலுவலகக் கட்டுமானங்களை விரைந்து முழுமைப்படுத்தி, அவற்றை உடனடியாக பயன்பாட்டுக்கு (இயங்குநிலைக்கு) கொண்டு வருமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். அத்துடன் நிர்வாக ரீதியான சவால்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை ஆராய்ந்த ஆளுநர், அவற்றுக்கான தீர்வுகள் மற்றும் மேலதிக அறிவுறுத்தல்களையும் இதன்போது வழங்கினார்.
இந்தத் துறைசார் மீளாய்வுக் கூட்டத்தில் வடக்கு மாகாணப் பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், விவசாய அமைச்சின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர்கள், மாகாணப் பணிப்பாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.



