கிராமப்புறங்களில் அடிப்படை வசதிகள் இல்லை என மக்கள் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து செல்லாத வகையில், அவர்களது சொந்தக் கிராமங்கள் மேம்படுத்தப்பட வேண்டும். – கௌரவ ஆளுநர்

“எந்தவொரு பின்தங்கிய கிராமமாக இருந்தாலும், அங்குள்ள மக்களுக்குக் கல்வியும் மருத்துவ சேவைகளும் எவ்விதத் தடங்கலுமின்றிச் சென்றடைவதில் தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் அதீத அக்கறை காட்டி வருகின்றது. அந்த வகையில், இரணை இலுப்பைக்குளம் ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையமும் எதிர்வரும் காலங்களில் மேம்பட்ட வசதிகளுடன் தரமுயர்த்தப்படுவதை பரிசீலிக்க முடியும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தின் இரணை இலுப்பைக்குளம் ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையத்தின் புதிய பற்சிகிச்சைப் பிரிவின் செயற்பாடுகள் இன்று (26.03.2026) வியாழக்கிழமை முற்பகல் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டன. மருத்துவமனையின் பொறுப்பு மருத்துவ அதிகாரி மருத்துவர் அ.கி.திவ்யா தலைமையில் இச் செயற்பாட்டை ஆரம்பித்துவைத்து உரையாற்றும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஆளுநர்,

“நான் 2011 ஆம் ஆண்டு மன்னாரில் பதினொரு மாதங்கள் மாவட்டச் செயலாளராகக் கடமையாற்றியிருந்தேன். அப்போதிருந்தே இங்குள்ள பின்தங்கிய கிராமங்களை மேம்படுத்துவதில் விசேட கவனம் செலுத்தி வந்தேன். கடந்த வருடம் இரணை இலுப்பைக்குளத்தில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு களப் பயணம் மேற்கொண்டிருந்த போது, அருகிலுள்ள இந்த மருத்துவமனையின் குறைபாடுகளை நேரடியாகப் பார்வையிட்டிருந்தேன். அதன் அடிப்படையிலேயே, விசேட நிதி ஒதுக்கீட்டின் ஊடாக இங்கு சில வசதிகள் தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளன.

கிராமப்புறங்களில் அடிப்படை வசதிகள் இல்லை எனக் கூறி மக்கள் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து செல்லாத வகையில், அவர்களது சொந்தக் கிராமங்கள் மேம்படுத்தப்பட வேண்டும். அதற்கு எம்மாலான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். நாம் முன்வைக்கின்ற எந்தவொரு நியாயமான கோரிக்கையையும் மான்புமிகு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான இந்த அரசாங்கம் மிகுந்த அக்கறையுடன் செவிமடுத்து, சாதகமாகப் பரிசீலித்து வருகின்றது.

இது எமக்குக் கிடைத்துள்ள ஒரு சிறந்த வாய்ப்பாகும். இந்த வாய்ப்பை சரிவரப் பயன்படுத்தி, எமது கிராமங்களின் கல்வி, சுகாதார வசதிகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படைத் தேவைகளையும் பூர்த்தி செய்து, அவற்றை வளர்ச்சியடைந்த கிராமங்களாக மாற்றியமைக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும்” எனக் குறிப்பிட்டார்.

இவ் ஆரம்பித்துவைப்புச் செயற்பாட்டில் மன்னார் மாவட்ட மாவட்டச் செயலாளர், மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், மடு பிரதேச செயலாளர், மடு பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரி, மன்னார் பிராந்திய பல் மருத்துவ அதிகாரி மற்றும் மன்னார் மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் உள்ளிட்ட அரச உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.