2026ஆம் ஆண்டுக்குரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை எவ்வளவு விரைவாக நிறைவு செய்ய முடியுமோ அவ்வளவு துரிதமாக நிறைவு செய்யுமாறும், அதற்காகத் தேவைப்படும் தொழில்நுட்ப ஆளணியின் ஒத்துழைப்புகளைப் பெற்றுத் தருவதற்கு உரிய நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளதாகவும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.
வடக்கு மாகாண நிதி மற்றும் திட்டமிடல், சட்டம் ஒழுங்கு, காணி, மின்சக்தி, வீடமைப்பு மற்றும் நிர்மாணம், சுற்றுலா, உள்ளூராட்சி, மாகாண நிர்வாகம், கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, மோட்டார் போக்குவரத்து மற்றும் போக்குவரத்து ஆகிய அமைச்சுக்களின் இந்த ஆண்டுக்கான செயற்றிட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், ஆளுநர் செயலகத்தில் இன்று புதன்கிழமை (04.03.2026) காலை ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், இந்த ஆண்டுக்குரிய முதலாவது அமைச்சுசார் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டமாக இது அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டதுடன், கடந்த ஆண்டுக்குரிய அபிவிருத்தித் திட்டங்களைச் சிறப்பாக நடைமுறைப்படுத்தியமைக்காக அதிகாரிகளுக்குத் தனது பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய ஆளுநர், மாகாண சபையின் வழமையான நிதி, ‘டித்வா’ பேரிடர் பாதிப்புக்கான நிதி, மத்திய நிரல் அமைச்சுக்களின் நிதி, மாவட்டச் செயலகங்களின் நிதி, உள்ளூராட்சி மன்றங்களின் சபை நிதி மற்றும் முத்திரைத் தீர்வை நிதி எனப் பல்வேறு நிதி மூலங்களினூடான வேலைத் திட்டங்களை நாம் இந்த ஆண்டு முன்னெடுக்க வேண்டியுள்ளது. இதற்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்புகளும் வழங்கப்படும். எமக்கு இப்போதுள்ள சாதகமான காலநிலையைப் பயன்படுத்திப் பணிகளை விரைவாக ஆரம்பிப்பது இலகுவானது. எனவே, திட்டங்களை உரிய காலவரையறைக்குள் நிறைவு செய்வதுடன், அவற்றின் உயர்தரத்தையும் அதிகாரிகள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்,’ என வலியுறுத்தினார்.
குடிபுகுச் சான்றிதழ் இன்றி இயங்கும் வர்த்தக நிறுவனங்களால் உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஏற்படும் வருமான இழப்புகள் தொடர்பில் ஆளுநர் விசேட கவனம் செலுத்தினார். ‘குடிபுகுச் சான்றிதழ் இல்லையென்பதைக் காரணங்காட்டி உரிய வரி அறவீடுகள் செய்யப்படாமையால், சபைகளுக்குப் பெரும் நிதி இழப்பு ஏற்படுகின்றது. இதனை மறுசீரமைக்குமாறு பல தடவைகள் அறிவுறுத்தியுள்ளேன். இதற்கு விரைந்து தீர்வு காணப்பட வேண்டும். ஆகக் குறைந்தது 2010ஆம் ஆண்டுக்குப் பின்னர் அமைக்கப்பட்ட கட்டடங்களுக்காவது இதனை இறுக்கமாக நடைமுறைப்படுத்துங்கள், என ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.
மேலும், கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்ட தெருநாய்களைக் கட்டுப்படுத்தும் செயற்றிட்டத்தை இந்த ஆண்டும் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்துமாறும், லஞ்சீட் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் விடயத்தில் உள்ளூராட்சி மன்றங்கள் சிறப்பாகச் செயற்படுகின்றமைக்குப் பாராட்டுத் தெரிவித்த அவர், அதனைத் தொடர்ந்தும் இறுக்கமாகப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொண்டார். நகரப் பகுதிகளில் இடம்பெறும் ஒலிபெருக்கி விளம்பரச் சேவைகள் தொடர்பில் உள்ளூராட்சி ஆணையாளரால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களைச் சகல உள்ளூராட்சி மன்றங்களும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும், மரம் நடுகைத் திட்டங்களைத் தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து, அமைச்சு மற்றும் அமைச்சின் கீழான ஒவ்வொரு திணைக்களங்களினதும் துறைசார் முன்னேற்ற மீளாய்வுகள் நடைபெற்றன. 2026ஆம் ஆண்டுக்குரிய வேலைத் திட்டங்களுக்கான கேள்விப்பத்திரங்கள் தற்போது கோரப்பட்டு வருவதாக இதன்போது அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் நடைபெற்ற திறந்த கலந்துரையாடலின்போது, உள்ளூராட்சி மன்றங்களுக்குச் சொந்தமான வீதிகளைப் புனரமைப்பதற்கு மாவட்டச் செயலகங்கள் தெரிவு செய்யும்போது, உள்ளூராட்சி மன்றங்களிடம் எவ்வித ஆலோசனைகளும் பெறப்படுவதில்லை எனச் சுட்டிக்காட்டப்பட்டது. உள்ளூராட்சி மன்றங்கள் தமது சொந்த நிதியிலோ அல்லது வேறு திட்டங்களின் கீழோ வீதிகளைப் புனரமைக்கத் தீர்மானித்திருக்கும் நிலையில், அதே வீதிகளை வேறொரு திட்டத்தின் கீழ் புனரமைப்பதற்கு மாவட்டச் செயலகங்கள் தன்னிச்சையாகத் தீர்மானங்கள் மேற்கொள்வதால் ஏற்படும் முரண்பாடுகள் தொடர்பில் ஆளுநரின் கவனம் ஈர்க்கப்பட்டது. அத்துடன், மாவட்டச் செயலகங்களால் வழங்கப்படும் வேலைகளை முன்னெடுக்கும்போது, ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு விதமான நிர்வாகச் செலவீனங்கள் வழங்கப்படுகின்றமை தொடர்பிலும் சுட்டிக்காட்டப்பட்டது. இவ்விடயங்கள் தொடர்பில் மாவட்டச் செயலாளர்களுடன் விசேடமாகக் கலந்துரையாடி உரிய தீர்வு பெற்றுத்தரப்படும் என ஆளுநர் இதன்போது உறுதியளித்தார்.
முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர்கள், மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், மாகாணப் பணிப்பாளர்கள், மாநகர சபைகளின் ஆணையாளர்கள், உள்ளூராட்சி உதவி ஆணையாளர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் மற்றும் பொறியியலாளர்கள் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர்.







