‘பசுமை யாழ்ப்பாணம்’ எனும் விசேட செயற்றிட்டத்தை முன்னெடுப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல், கௌரவ ஆளுநர் தலைமையில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணக் குடாநாட்டைப் பசுமையான மற்றும் காலநிலை மாற்றங்களை எதிர்கொள்ளும் திறன்மிக்க ஒரு நகரமாக மாற்றியமைக்கும் உயரிய நோக்கோடு, ‘இம்பக்ட்’ அணியினரால் ‘பசுமை யாழ்ப்பாணம்’ எனும் விசேட செயற்றிட்டமொன்று முன்மொழியப்பட்டுள்ளது. இதன் மாதிரிச் செயற்றிட்டத்தை முன்னெடுப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (03.03.2026) காலை இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலின்போது, இச்செயற்றிட்டம் தொடர்பில் இம்பக்ட் அணியினரால் ஆளுநருக்கு விரிவாக விளக்கமளிக்கப்பட்டது. இது வெறுமனே ஒரு மரநடுகைத் திட்டமாக மட்டுமன்றி, முழுமையானதொரு ‘காலநிலைத் தாங்குதிறன் இயக்கமாக’ வடிவமைக்கப்பட்டுள்ளமை இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

இத்திட்டத்தின் முதற்கட்டமாக 1,000 மரங்களை நடுகை செய்தல், நகர்ப்புறப் பகுதிகளில் ஒரு குறுங்காட்டை உருவாக்குதல், பாடசாலைகள் மற்றும் அரச, தனியார் நிறுவன வளாகங்களைச் சூழப் பசுமையாக்குதல், நகரத் தூய்மையைப் பேணுதல் மற்றும் 2 முதல் 3 சேதனப் பசளை அலகுகளை உருவாக்குதல் போன்ற முக்கிய செயன்முறைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

தற்போதைய சூழலில் மரநடுகை மற்றும் காடாக்கலானது ஒரு ‘காலநிலைத் தேவையாக’ மாறியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் நிலப்பரப்பின் வெப்பநிலையைக் குறைத்தல், நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரித்தல், மண்ணரிப்பைத் தடுத்தல், பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்துதல் மற்றும் பொதுமக்களின் சுகாதாரத்தை மேம்படுத்துதல் போன்ற பல நன்மைகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

நடுகை செய்யப்படும் மரங்களில் குறைந்தது 80 சதவீதமானவற்றை உயிருடன் பேணுவது இத்திட்டத்தின் முக்கிய இலக்காகும். இதனை உறுதிப்படுத்துவதற்காகப் புவியியல் தகவல் முறைமை, மாதாந்தக் கண்காணிப்புகள் மற்றும் காலாண்டு அறிக்கைகள் என்பன பயன்படுத்தப்படவுள்ளன. அத்துடன், இத்திட்டத்தின் நிலைப்பேறான தன்மையை உறுதிசெய்யும் பொருட்டு, மரங்களைத் தத்தெடுக்கும் வேலைத்திட்டம், தொண்டர் வலையமைப்புகளை உருவாக்குதல் மற்றும் நிறுவனங்களுடனான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போன்ற நீண்டகாலச் செயன்முறைகளும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

செயற்றிட்டம் தொடர்பான விளக்கமளிக்கப்பட்ட பின்னர், இதனை நடைமுறைப்படுத்தும்போது எழக்கூடிய சவால்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. இத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்குப் பல்வேறு பங்குதாரர்களின் பங்களிப்பு அவசியமென வலியுறுத்தப்பட்டது. அதற்கமைவாக, சம்பந்தப்பட்ட அனைத்துப் பங்குதாரர்களுடனான விசேட கலந்துரையாடலொன்றை ஒழுங்கு செய்து, முன்மாதிரிச் செயற்றிட்டத்திற்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ள இடங்கள் தொடர்பில் ஆராய்ந்து இறுதித் தீர்மானம் எடுப்பதற்கும் இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. மேலும், தற்போதைய அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் ‘தூய இலங்கை’ செயற்றிட்டத்தின் கீழ், இத்திட்டத்தை எவ்வாறு ஒன்றிணைத்து முன்கொண்டு செல்லலாம் என்பது தொடர்பிலும் இதன்போது விவாதிக்கப்பட்டது.

இவ்விசேட கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், யாழ். மாநகர சபையின் கௌரவ பிரதி மேயர், யாழ். மாநகர சபை ஆணையாளர் மற்றும் பொறியியலாளர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பீடாதிபதி, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அதிகாரிகள், இலங்கை மின்சார சபையின் அதிகாரிகள் மற்றும் இம்பக்ட் அணியின் பிரதிநிதிகள் எனப் பலரும் பங்கேற்றனர்.