கிளிநொச்சி அறிவியல் நகரத்தில் அமைந்துள்ள கார்கில்ஸ் நிறுவனத்தின் ‘கிஸ்ட்’ (KIST) தொழிற்சாலைக்கு, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று புதன்கிழமை (25.02.2026) களப் பயணமொன்றை மேற்கொண்டார். தொழிற்சாலைக்குச் சென்ற ஆளுநரை, கார்கில்ஸ் நிறுவனத்தின் வட பிராந்திய வியாபார அபிவிருத்தி முகாமையாளர் ஆர்.பாலகுமார் வரவேற்றார்.
இந்தக் களப் பயணத்தின்போது, வடக்கு மாகாணத்திலுள்ள விவசாயிகளிடமிருந்து மரக்கறிகள் மற்றும் பழங்களை நேரடியாகக் கொள்வனவு செய்யும் செயன்முறை, மற்றும் பண்ணையாளர்களிடமிருந்து பாலைக் கொள்வனவு செய்யும் செயன்முறை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆளுநருக்கு விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.
அத்துடன், தமது நிறுவனத்துக்கு உள்ளூர் உற்பத்திகளை தொடர்ச்சியாக வழங்கும் விவசாயிகளுக்கும் பண்ணையாளர்களுக்கும் வழங்கப்படும் விசேட ஊக்குவிப்புகள், நன்மைகள் மற்றும் நிறுவனத்தால் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் சமூகப் பொறுப்புப் பணிகள் தொடர்பிலும் அதிகாரிகளால் ஆளுநருக்கு எடுத்துரைக்கப்பட்டது.
உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வகையிலான ஆளுநரின் இந்த விசேட களப் பயணத்தின்போது, ஆளுநரின் ஆலோசனைக் குழு உறுப்பினர் கலாநிதி அகிலன் கதிர்காமர் தலைமையிலான குழுவினரும் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




