வடக்கு மாகாண சபையின் விளையாட்டு உத்தியோகத்தர் 11 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன

அரச சேவை ஒரு வரப்பிரசாதம். அர்ப்பணிப்புடன் செயலாற்றி முன்மாதிரியாகத் திகழுங்கள். வடக்கு மாகாணத்தின் விளையாட்டுத்துறையை இன்னமும் மேம்படுத்தும் வகையில் உங்களின் சேவைகள் அமையவேண்டும் என புதிதாக நியமனம் பெற்ற விளையாட்டு உத்தியோகத்தர்களிடம் வலியுறுத்திய வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் மக்களும் மேலதிகாரிகளும் தங்கள் பிரதேசங்களுக்கு இந்த அதிகாரிகள்தான் வேண்டும் எனக் கேட்கும் நிலையை நீங்கள் உருவாக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

வடக்கு மாகாண சபையின் விளையாட்டு உத்தியோகத்தர் (தரம் III) சேவைக்கு புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட 11 பேருக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு இன்று (24.02.2026) செவ்வாய்க்கிழமை பிற்பகல் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு நியமனக் கடிதங்களை வழங்கி வைத்து உரையாற்றும் போதே ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஆளுநர் மேலும் தெரிவிக்கையில்,

ஆளணிப் பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பில் மத்திய அரசாங்கத்திடம் நாம் தொடர்ச்சியாகக் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றோம். எமது கோரிக்கைகளுக்கு அமைய அனைத்து வெற்றிடங்களையும் நிரப்புவதற்கு முழுமையான அனுமதிகள் கிடைக்காவிடினும், விளையாட்டுத் திணைக்களத்தில் நிலவிய 11 உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கு அனுமதி கிடைத்துள்ளமை பெரும் வரப்பிரசாதமாகும். தற்போதைய சூழ்நிலையில் அரச நியமனம் பெறுவது என்பது மிகவும் கடினமானதொரு காரியமாகும். உங்களுக்குக் கிடைத்துள்ள இந்த அரிய வாய்ப்பை நீங்கள் சரிவரப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

அரச கடமைகளை ஏற்றதன் பின்னர், உங்களது பொறுப்புக்களை மிகுந்த ஈடுபாட்டுடனும் திறமையாகவும் முன்னெடுக்க வேண்டும். பலர் நியமனம் கிடைக்கும் வரை நாட்டின் எந்தப் பாகத்திலும் பணியாற்றத் தயார் எனக் கூறுகின்ற போதிலும், நியமனம் கிடைத்தவுடன் தங்களது வீடுகளுக்கு அருகாமையில் கடமையாற்ற விரும்புவதைக் காண முடிகின்றது. சிலர் இடமாற்றங்கள் கிடைக்காத பட்சத்தில் சேவையிலிருந்து விலகிச் சென்ற சம்பவங்களும் உண்டு. எனவே, இவ்வாறான நிலைமைகளைத் தவிர்த்து, நீங்கள் ஏனையோருக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாகச் செயற்பட வேண்டும்.

தற்போது வடக்கு மாகாணத்தில் விளையாட்டுத்துறை பெரும் முன்னேற்றகரமான பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்றது. புதிதாக நியமனம் பெற்றுள்ள நீங்கள் பதினொரு பேரும் ஒன்றிணைந்து விளையாட்டுத்துறையை மேலும் பலப்படுத்தி முன்னகர்த்த வேண்டும்’ எனவும் ஆளுநர் கேட்டுக்கொண்டார்.

வடக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவால் விளையாட்டு உத்தியோகத்தர்கள் (தரம் III) சேவைக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டதற்கு அமைவாக, தகுதியான 125 பேர் போட்டிப் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர். பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் 20 பேர் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்பட்டு, அவர்களில் தகுதி பெற்ற 11 பேருக்கே இன்றைய தினம் நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், கல்வி அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர், விளையாட்டுத் திணைக்களப் பணிப்பாளர் மற்றும் கல்வி அமைச்சின் உதவிச் செயலாளர்கள், புதிதாக நியமனம் பெற்றோர் என பலரும் கலந்துகொண்டனர்.