மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியம் – 2025 இன் நிதிப் பங்களிப்புடன் பிரதி விவசாயப் பணிப்பாளர் அலுவலகம், கிளிநொச்சியின் உருத்திரபுரம் விவசாயப் போதனாசிரியர் பிரிவிற்கு உட்பட்ட கு.விநாயகமூர்த்தி அவர்களால் ஸ்தாபிக்கப்பட்ட பொறிக்கடவை அம்மன் கோவிலடி, குஞ்சுப்பரந்தன் எனும் முகவரியில் அமைந்துள்ள வயற்துண்டத்தில் “களைநெல் முகாமைத்துவத்துடன் அதிக விளைச்சல் தரும் பரசூட் முறையினை ஊக்குவித்தல்” எனும் தொனிப்பொருளினாலான வயல் விழா 09.02.2026 அன்று காலை 10.30 மணியளவில் பிரதேச விவசாயப் போதனாசிரியர் திரு.நா.மகராஜன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக திரு.பா.தேவரதன், கமநல பிரதி ஆணையாளர், கமநல அபிவிருத்தி திணைக்களம், கிளிநொச்சி அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக திரு.இ.சஞ்சீவன், பிரதி விவசாயப் பணிப்பாளர், விதைகள் மற்றும் நடுகைப்பொருள் அபிவிருத்தி நிலையம், கிளிநொச்சி மற்றும் திரு.கை.பிரகாஷ், நீர்ப்பாசன பொறியியலாளர், கிளிநொச்சி கிழக்கு பிரிவு அவர்களுடன் திரு.தெ.யோகேஸ்வரன், மேலதிக மாகாண விவசாயப் பணிப்பாளர், வட மாகாணம் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
குறித்த வயற்துண்டமானது கடந்த இரு போகங்களாக களைநெல்லினால் பாதிக்கப்பட்டு எவ்வித நெல் அறுவடையும் மேற்கொள்ளப்படாத நிலையில் காலபோகம் 2025/26 இல் ஒரு ஏக்கர் விஸ்தீரணத்தில் At – 360 வர்க்க நெல்லானது பரசூட் செய்கை மூலம் ஸ்தாபிக்கப்பட்டு வெற்றிகரமாக களைநெல் முகாமைத்துவத்துடன் மேற்கொள்ளப்பட்டது என்பது சிறப்பம்சமாகும்.
பிரதேச விவசாயப் போதனாசிரியரால் தயாரிக்கப்பட்ட “நெற்செய்கையினை சவாலாக்கும் களைநெல்” எனும் துண்டுப்பிரசுரம் விருந்தினர்களால் வெளியிடப்பட்டு விவசாயிகளிற்கு வழங்கி வைக்கப்பட்டதினை தொடர்ந்து பரசூட் நெற்செய்கை தொடர்பான விளக்கம் பாட விடய உத்தியோகத்தர் (நெல்) அவர்களாலும் களை நெல் முகாமைத்துவம் தொடர்பான விளக்கம் பாட விடய உத்தியோகத்தர் (பயிர் பாதுகாப்பு) அவர்களாலும் மேற்கொள்ளப்பட்டது.
மேலும் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியம் 2026 இன் நிதியூடாக மறுவயற் பயிர்கள் மற்றும் மரக்கறிப் பயிர்களின் உற்பத்தியினை அதிகரிப்பதற்கான விதை உள்ளீடுகள் தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளிற்கு வழங்கி வைக்கப்பட்டன.
கலந்துகொண்ட அதிதிகள் மற்றும் விவசாயிகளினால் பரசூட் செய்கை மேற்கொள்வதனால் ஏற்படும் நன்மைகள் தொடர்பான வெற்றி பற்றி கலந்துரையாடப்பட்டு வயல் விழாவானது சிறப்பாக நடைபெற்றது.
மேலும் இவ் வயல் விழாவில் பாட விடய உத்தியோகத்தர்கள், விவசாயப் போதனாசிரியர்கள், தொழில் நுட்ப உதவியாளர்கள், அரச உத்தியோகத்தர்கள் ஓய்வுநிலை விவசாயப் போதனாசிரியர்கள் மற்றும் விவசாயிகள் பொது மக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.












