வடக்கு மாகாணத்துக்கு நடப்பு ஆண்டில் பல்வேறு மூலங்களிலிருந்தும் பெருமளவிலான நிதி ஒதுக்கீடுகள் கிடைக்கப்பெறவுள்ள நிலையில், அவற்றினூடான மிகப் பெரிய அபிவிருத்தித் திட்டங்களை வினைத்திறனாக முன்னெடுப்பதற்குத் தேவையான மனிதவளத் தேவைகளை எவ்வாறு பூர்த்தி செய்வது என்பது தொடர்பில் ஆராயும் விசேட உயர்மட்டக் கலந்துரையாடல், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் இன்று திங்கட்கிழமை (23.02.2026) மாலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், மாகாணக் குறித்தொதுக்கப்பட்ட நன்கொடை நிதி, டித்வா பேரிடர் மீள்கட்டுமான நிதி, மாவட்டச் செயலகங்கள் மற்றும் மத்திய அமைச்சுக்களின் ஊடான நிதி ஒதுக்கீடுகள், வெளிநாட்டு நிதியுதவிகள் எனப் பல்வேறு மூலங்களிலிருந்தும் வடக்கின் அபிவிருத்திப் பணிகளுக்காக நிதி கிடைக்கப்பெறவுள்ளமை தொடர்பில் தெளிவுபடுத்தினார்.
வழமையான ஒதுக்கீடுகளைத் தாண்டி கிடைக்கப்பெறவுள்ள இந்த மிகப் பெரிய நிதியைக் கொண்டு திட்டங்களை முன்னெடுக்கும்போது, மாகாணத் திணைக்களங்களில் ஏற்கனவே நிலவும் ஆளணிப் பற்றாக்குறையானது பெரும் சவாலாக அமையும் என அவர் சுட்டிக்காட்டினார். எனவே, இந்த நிலைமையைச் சீர்செய்து, குறிப்பாகப் பொறியியலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப அலுவலர்களின் வெற்றிடங்களை நிரப்பி, செயற்றிட்டங்களை எவ்வாறு தடையின்றி முன்னெடுப்பது என்பது குறித்து உடனடியாக ஆராயப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, மனிதவள மற்றும் தொழில்நுட்பத் தேவைகளைப் பூர்த்தி செய்வது தொடர்பான பல்வேறு ஆக்கபூர்வமான யோசனைகளை வடக்கு மாகாணப் பிரதிப் பிரதம செயலாளர் (பொறியியல்) பொறியியலாளர் ந.சுதாகரன் முன்வைத்தார்.
வெற்றிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புதல், மாகாணத் திணைக்களங்களுக்கிடையில் தேவைக்கமைவாக உத்தியோகத்தர்களைப் பரிமாறுதல் மற்றும் பயிலுனர்களை உள்ளீர்த்தல் போன்ற மாற்று வழிகளை அவர் பரிந்துரைத்தார். அத்துடன், தற்போதுள்ள அனுமதிக்கப்பட்ட ஆளணியை முழுமையாக நிரப்பினாலும்கூட, எதிர்வரும் மிகப்பெரிய செயற்றிட்டங்களுக்கு அது போதுமானதாக அமையாது எனவும், தரமான வேலைத்திட்டங்களைக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நிறைவு செய்வதற்கு மேலதிக தொழில்நுட்ப ஆளணியை உள்ளீர்க்க வேண்டியது காலத்தின் கட்டாயம் எனவும் அவர் தெளிவுபடுத்தினார்.
பிரதிப் பிரதம செயலாளரால் முன்வைக்கப்பட்ட யோசனைகளை விரிவாக ஆராய்ந்த ஆளுநர், அவற்றுக்கு அமைவாகத் துரித நடவடிக்கைகளை எடுக்குமாறு உரிய அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார். மேலும், புதிதாக இணைக்கப்படுபவர்களுக்கான கொடுப்பனவுகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டதுடன், ஆளணி நிரப்பல் செயற்பாடுகளை உடனடியாகப் பூர்த்தி செய்து அபிவிருத்தித் திட்டங்களை விரைவாக ஆரம்பிக்குமாறும் ஆளுநர் அறிவுறுத்தினார்.
இவ்விசேட கலந்துரையாடலில் வடக்கு மாகாணப் பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், மாகாணத் திணைக்களப் பணிப்பாளர்கள் மற்றும் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் உள்ளிட்ட பல உயர்மட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.




