கடந்த ஆண்டு இறுதியில் ஆரம்பிக்கப்பட்ட குளங்களைத் தூர்வாரும் செயற்றிட்டம், இவ்வாண்டும் செயற்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. – கௌரவ ஆளுநர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட யாழ். மாவட்டத்திலுள்ள குளங்களைத் தூர்வாரும் செயற்றிட்டத்தை, இவ்வாண்டு மேலும் விரிவாக்கி வினைத்திறனாக நடைமுறைப்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை (20.02.2026) மாலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், கடந்த ஆண்டு இறுதியில் தெல்லிப்பழை மானிடம் அறக்கட்டளையின் கோரிக்கைக்கு அமைவாக உருவாக்கப்பட்ட குளங்களைத் தூர்வாருவதற்கான செயற்றிட்டத்தை, இவ்வாண்டும் தொடர்ச்சியாகச் செயற்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். குளங்களைத் தூர்வாருவதன் ஊடாக வெள்ளப்பெருக்கைக் குறைக்க முடியும் எனவும், இதன்போது பெறப்படும் மண்ணை உள்ளூராட்சி மன்றங்களிடம் கையளிப்பதன் மூலம், அவர்கள் அதனைத் தேவைப்படுபவர்களுக்கு வழங்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மானிடம் அறக்கட்டளை சார்பில் கருத்துத் தெரிவித்த மருத்துவர் பரா.நந்தகுமார், கடந்த ஆண்டு உடுவில் பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட குளங்கள், அப்பகுதி விவசாய அமைப்புக்களின் நிதிப் பங்களிப்புடன் வெற்றிகரமாகத் தூர்வாரப்பட்டதாகவும், அதன்போது எதிர்கொண்ட சவால்களைக் கருத்தில் கொண்டு இம்முறை செயற்றிட்டத்தை மேலும் சிறப்பாக முன்னெடுக்க முடியும் எனவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, கமநல சேவைகள் திணைக்களத்தின் ஆளுகைக்கு உட்பட்ட 116 குளங்கள் தூர்வாருவதற்காக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும், நீர்வளச் சபையின் உதவியுடன் அவை ஒவ்வொன்றும் எவ்வளவு தூரம் ஆழப்படுத்தப்பட வேண்டும் என்ற வரைபடம் தயாரிக்கப்பட்டு, தலைமையகத்தின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் யாழ். மாவட்டக் கமநல சேவைகள் திணைக்களத்தின் உதவி ஆணையாளர் தெரிவித்தார்.

வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தனது கருத்தில், ஏனைய மாகாணங்களில் தனியாரின் ஒத்துழைப்புடன் உள்ளூராட்சி மன்றங்கள் பல்வேறு வேலைத் திட்டங்களைத் திறம்பட முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிட்டார். யாழ். மாவட்டத்தைப் பொறுத்தவரையில், கமநல சேவைகள் மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களங்களுக்குச் சொந்தமில்லாத குளங்களை உள்ளூராட்சி மன்றங்களிடம் கையளிக்க வேண்டும் எனவும், அதன்மூலம் மன்றங்கள் தமது எல்லைக்குள் இயங்கும் வர்த்தக மற்றும் வணிக நிறுவனங்களிடமிருந்து ‘நிறுவன சமூகப் பொறுப்பு’ நிதியைப் பெற்று, அக்குளங்களைப் பராமரிக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், அவற்றைத் சுற்றுலாத் தலங்களாக மாற்றுவதன் ஊடாகச் சபைகளுக்கான வருமானத்தையும் அதிகரித்துக்கொள்ள முடியும் என அவர் யோசனை தெரிவித்தார்.

இந்த ஆலோசனைகளுக்கு அமைவாகத் திட்டங்களைத் தயாரிக்குமாறும், குளங்களில் நீர் வற்றிய பின்னர் எதிர்வரும் மே மாதம் அளவில் தூர்வாரும் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கும் இன்றைய கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.

இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர், யாழ். மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர், யாழ். மாநகர சபையின் கௌரவ பிரதி மேயர், மாநகர சபை ஆணையாளர், கமநல சேவைகள் திணைக்களத்தின் உதவி ஆணையாளர், யாழ். மாவட்ட நீர்ப்பாசனப் பொறியியலாளர், நல்லூர் பிரதேச சபையின் செயலாளர் மற்றும் ஆளுநரின் இணைப்புச் செயலாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.