நிரல் அமைச்சுக்களின் மேற்பார்வைக் குழுக் கூட்டங்கள் ஊடாக மாகாணத்தின் கோரிக்கைகளை வென்றெடுக்கத் திட்டம்.

வடக்கு மாகாண சபையின் கீழ் இயங்கும் அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் பௌதீக, மனிதவளத் தேவைப்பாடுகள் குறித்து, மத்திய அரசின் நிரல் அமைச்சுக்களின் துறைசார் மேற்பார்வைக் குழுக்களில் எடுத்துரைத்துத் தீர்வுகளைப் காண்பதற்கான விசேட கலந்துரையாடல், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் இடம்பெற்றது.

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று சனிக்கிழமை (14.02.2026) மாலை நடைபெற்ற இக்கலந்துரையாடலில், நாடாளுமன்ற உறுப்பினர்களான கௌரவ ம.ஜெகதீஸ்வரன் மற்றும் கௌரவ ஜெ.றஜீவன் ஆகியோர் பங்கேற்றனர்.

இக்கலந்துரையாடலில் கல்வி, விளையாட்டுத்துறை, கூட்டுறவு, சமூக சேவைகள் மற்றும் கைத்தொழில் உள்ளிட்ட துறைகளின் தேவைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

கல்வி அமைச்சின் கீழ் உள்ள திணைக்களங்களின் தேவைகள் குறித்து ஆராயப்பட்டபோது பின்வரும் விடயங்கள் முன்னிலைப்படுத்தப்பட்டன:

கடந்த காலங்களில் பல்வேறு திட்டங்களின் கீழ் ஆரம்பிக்கப்பட்டு, பாதியில் இடைநிறுத்தப்பட்டுள்ள பாடசாலைக் கட்டடப் பணிகளை நிறைவு செய்தல். பாடசாலைகளுக்குத் தேவையான உபகரணக் கொள்வனவு மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கான பற்றாக்குறையை நிவர்த்தி செய்தல். பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் செயற்பாடுகளைப் புத்தாக்கமான முறையில் முன்னெடுப்பதற்குத் தேவையான ஒத்துழைப்புக்களைப் பெற்றுக்கொள்ளல். விளையாட்டுத்துறையின் உட்கட்டமைப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்தல்.

இவை தொடர்பில் கருத்துத் தெரிவித்த கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன், இத்தேவைப்பாடுகள் மற்றும் சவால்கள் குறித்துத் தொடர்புடைய நிரல் அமைச்சின் மேற்பார்வைக் குழுக் கூட்டத்தில் தான் விரிவாக எடுத்துரைப்பதாகத் தெரிவித்தார்.

மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு மற்றும் கைத்தொழில் அமைச்சின் கீழ் உள்ள விடயங்கள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது:

கூட்டுறவுத் திணைக்களம் எதிர்கொள்ளும் தற்போதைய சவால்கள் மற்றும் வளப்பற்றாக்குறைகள். சமூக சேவைகள் திணைக்களத்தின் கீழ் இயங்கும் முதியோர் இல்லங்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்த நிரல் அமைச்சிடமிருந்து உதவிகளைப் பெறுதல். தொழிற்துறை திணைக்களங்களின் செயற்பாடுகளை விரிவுபடுத்தல்.

இவை தொடர்பில் கருத்துத் தெரிவித்த கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ.றஜீவன், இத்துறைகள் சார்ந்த கோரிக்கைகளை உரிய நிரல் அமைச்சுக்களுடன் பேசி, தீர்வுகளைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

இக்கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர், அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாணப் பணிப்பாளர்கள், ஆணையாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.