வடக்கு மாகாண விவசாயம், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் நன்னீர் மீன்பிடித் துறைகள் எதிர்கொள்ளும் சவால்களுக்குத் தீர்வுகாணும் நோக்கில், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை (13.02.2026) மாலை ஆளுநர் செயலகத்தில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.
மாகாண சபைக்குரிய மட்டுப்படுத்தப்பட்ட நிதியைக் கடந்து, மத்திய அரசாங்கத்தின் நிரல் அமைச்சுக்களிடமிருந்து எவ்வகையில் மேலதிக நிதியையும், உதவிகளையும் பெற்றுக்கொள்வது என்பது குறித்தும், மாகாணத் திணைக்களங்கள் எதிர்கொள்ளும் துறைசார் பிரச்சினைகளைத் தீர்ப்பது குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.
குறிப்பாக, வடக்கு மாகாண விவசாயத் திணைக்களம், கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம் ஆகியன தமது அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கும்போது, வனவளத் திணைக்களத்தின் கட்டுப்பாடுகளால் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து அதிகாரிகளால் எடுத்துரைக்கப்பட்டது.
இதன்போது கருத்துத் தெரிவித்த கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் செ.திலகநாதன், ‘எமது மாகாணத் திணைக்களங்கள் எதிர்கொள்ளும் இச்சவால்கள் தொடர்பிலான தரவுகளைக் கொண்டு, சம்பந்தப்பட்ட நிரல் அமைச்சுக்களின் மேற்பார்வைக் குழுக் கூட்டங்களில் தெரியப்படுத்துகின்றேன்’ எனக் குறிப்பிட்டார்.
இக்கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர், மாகாண விவசாய அமைச்சின் செயலாளர், மாகாணத் திணைக்களங்களின் பணிப்பாளர்கள் கலந்துகொண்டனர்.




