மத்திய சுகாதார அமைச்சிலிருந்து மேலதிக நிதியைப் பெற்றுக்கொள்வதற்கான திட்ட முன்மொழிவுகளை உடனடியாகத் தயார் செய்யுமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அதிகாரிகளுக்குப் பணிப்புரை

மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களின் புதிய பணிப்புரைக்கு அமைவாக, மாகாண சபைகளுக்குரிய வழமையான நிதி ஒதுக்கீடுகளுக்கு மேலதிகமாக, மத்திய அரசின் நிரல் அமைச்சுக்கள் ஊடாகவும் நிதியைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு உருவாகியுள்ளது. எனவே, வடக்கு மாகாண சுகாதாரத் துறையின் தேவைகளை நிவர்த்தி செய்ய, மத்திய சுகாதார அமைச்சிலிருந்து மேலதிக நிதியைப் பெற்றுக்கொள்வதற்கான திட்ட முன்மொழிவுகளை உடனடியாகத் தயார் செய்யுமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (10.02.2026) மாலை நடைபெற்ற விசேட கலந்துரையாடலிலேயே ஆளுநர் இந்த அறிவுறுத்தலை வழங்கினார். இக்கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ எஸ்.ஸ்ரீபவானந்தராஜா அவர்களும் கலந்துகொண்டார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த ஆளுநர் மேலும் கூறியதாவது:

ஜனாதிபதி அவர்கள் மாகாண சபைகளுக்கு நிரல் அமைச்சுக்கள் ஊடாகவும் நிதியை ஒதுக்குமாறு பணித்துள்ளார். நிதி ஆணைக்குழுவும் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. எனவே, எமது மாகாணத்தின் மேலதிக தேவைப்பாடுகள் மற்றும் புதிய திட்டங்களை முன்வைப்பதன் ஊடாக, இந்த நிதியைப் பெற்றுக்கொள்ள முடியும்.

நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீபவானந்தராஜா அவர்கள், மத்திய சுகாதார அமைச்சின் நாடாளுமன்ற மேற்பார்வைக் குழு மற்றும் உப குழு ஆகியவற்றில் அங்கம் வகிக்கின்றார். எனவே, நாம் தயாரிக்கும் திட்டங்களையும் கோரிக்கைகளையும் மத்திய அரசிடம் கொண்டு சென்று, அவற்றை நிறைவேற்றுவதற்குரிய தொடர் நடவடிக்கைகளை அவர் முன்னெடுப்பார், எனக் குறிப்பிட்டார்.

இதனையடுத்து, மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள் மற்றும் சுதேச திணைக்கள ஆணையாளர் ஆகியோர் தமது திணைக்களங்களில் நிலவும் வளப்பற்றாக்குறைகள், எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அவசரத் தேவைப்பாடுகள் குறித்துத் தெரியப்படுத்தினர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீபவானந்தராஜா, சுகாதார அமைச்சின் மேற்பார்வைக் குழுக் கூட்டம் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெறும்போது, வடக்கு மாகாண சுகாதார அமைச்சுக்கெனத் தனியானதொரு விசேட கலந்துரையாடலை ஏற்பாடு செய்து தர நடவடிக்கை எடுப்பேன். அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, மாகாணத்தின் சுகாதாரத் துறை சார்ந்த தேவைகளை நிரல் அமைச்சின் உயரதிகாரிகளிடம் நேரடியாக எடுத்துக்கூறித் தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள முடியும், என உறுதியளித்தார்.

இக்கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர், மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்டங்களின் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள், மாகாண சுதேச திணைக்கள ஆணையாளர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.