வடக்கு மாகாணத்துக்கு ஏனைய மாகாணங்களிலிருந்தே சுகாதாரத் துறைக்கான உத்தியோகத்தர்கள் வருகின்றனர். அவர்களுக்குத் தேவையான தங்குமிட வசதிகளை நாம் முறையாகப் பூர்த்தி செய்து கொடுக்கும்போதே, அவர்களிடமிருந்து எமது மக்களுக்கான முழுமையான சேவையை பெற்றுக்கொடுக்க முடியும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்டம், மாங்குளம் ஆதார மருத்துவமனையில் புனரமைக்கப்பட்ட விடுதிகளைப் பாவனைக்குக் கையளிக்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (27.01.2026) மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு விடுதிகளைத் திறந்து வைத்து உரையாற்றும் போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்:
போர் முடிவடைந்த பின்னர் நான் முல்லைத்தீவு மாவட்டச் செயலராகப் பணியாற்றிய காலத்தில், மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதற்கு இலங்கை இராணுவம் பெரும் ஒத்துழைப்பை வழங்கியிருந்தது. அதேபோன்று இப்போதும், வடக்கு மாகாண சபையின் நிதியில் மேற்கொள்ளப்பட்ட இப்புனரமைப்புப் பணிகளுக்கு இராணுவத்தினர் தமது மனிதவலுவை வழங்கியுள்ளனர்.
இராணுவப் பொறியியல் பிரிவினர் இப்பணிகளை உரிய காலத்தில் முடித்துள்ளதுடன், அவர்களின் பங்களிப்பு காரணமாக சுமார் 6 மில்லியன் ரூபா வரையிலான அரச நிதி சேமிக்கப்பட்டுள்ளது. இதற்காக அவர்களுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
வடக்கு மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், மாங்குளம் ஆதார மருத்துவமனையின் மருத்துவர் விடுதி, தாதியர் விடுதி, துணை மருத்துவ ஆளணியினர் விடுதி, சாரதி விடுதி மற்றும் நோயாளர் காவு வண்டித் தரிப்பிடம் என்பன புனரமைக்கப்பட்டு வருகின்றன.
இதில் முதற்கட்டமாக முழுமையாகப் புனரமைக்கப்பட்ட தாதியர் விடுதி, நோயாளர் காவு வண்டித் தரிப்பிடம் மற்றும் சாரதி விடுதி என்பன இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டன. இதில் தாதியர் விடுதியானது 8 அறைகள், சமையலறை மற்றும் உணவு அருந்தும் அறை உள்ளிட்ட வசதிகளைக் கொண்டுள்ளது.
இந்நிகழ்வில் வன்னிப் பிராந்தியக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரதீப் குலதுங்க, வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி ப.ஜெயராணி, வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவக் கலாநிதி சமன் பத்திரன, முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் உமாசங்கர், மருத்துவமனையின் அத்தியட்சகர் மருத்துவர் காயன், மருத்துவமனைப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.










