மலர்கின்ற 2026 ஆம் ஆண்டானது, வடக்கு மாகாண மக்கள் அனைவருக்கும் இருள் நீங்கி, ஒளி பிறக்கும் ஒரு நம்பிக்கை ஆண்டாக அமைய எனது உளமார்ந்த புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
கடந்த காலங்களில் இயற்கைப் பேரிடரால் நாம் இழந்தவை ஏராளம். ஆனால், ‘பாதிக்கப்பட்ட வாழ்க்கையைத் பழைய நிலைக்குத் திருப்புவது மட்டும் எமது இலக்கல்ல் அது முன்னரை விடப் பல மடங்கு சிறந்ததாக, வளமானதாக மாற வேண்டும்’ என்பதே எமது புத்தாண்டின் தாரக மந்திரமாகும். இடிந்து போன சுவர்களை மட்டுமல்ல, மக்களின் உடைந்த மனங்களையும் நம்பிக்கையால் கட்டி எழுப்புவோம். நாம் இழந்ததை விட, இனி அடையப்போகும் உயரம் பெரிதாக இருக்க வேண்டும்.
இந்த இலக்கை அடைவதற்கு, மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களின் தலைமையிலான அரசாங்கம் எமக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருகின்றது. கடந்த 2025ஆம் ஆண்டில் மாகாணத்தின் மீளெழுச்சிக்கு அரசாங்கம் வழங்கிய ஆதரவுக்கு நன்றிகளைத் தெரிவிப்பதுடன், அரசின் கரங்களைப் பற்றி, எமது மக்களின் வாழ்வாதாரத்தை இந்த ஆண்டில் புதிய தளத்துக்குக் கொண்டு செல்வோம்.
நிர்வாக ரீதியாகப் புதியதோர் ஆண்டைத் தொடங்கும் இவ்வேளையில், எமது அரச அதிகாரிகளுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்:
‘உங்கள் மேசையில் தேங்கிக் கிடக்கும் ஒவ்வொரு கோப்பும் வெறும் காகிதக் கட்டுகள் அல்ல. ஒவ்வொன்றும் ஒரு ஏழைத் தாயின் கண்ணீர், ஒரு தந்தையின் பெருமூச்சு, ஒரு இளைஞனின் எதிர்காலம் என்பதை மறவாதீர்கள். நீங்கள் புத்தாண்டில் எடுக்கும் உறுதியுரை வெறும் சடங்கல்ல. அது மக்களின் நம்பிக்கைக்குச் செய்யும் சத்தியம். சட்டதிட்டங்களுக்குள் மனிதாபிமானத்தைப் புகுத்தி, அந்த மக்களின் கண்ணீரைத் துடைக்கும் கரங்களாக நீங்கள் மாற வேண்டும்.’
அரசும், அதிகாரிகளும், மக்களும் ஓரணியில் திரண்டால், எமது வடக்கு மாகாணம் முன்னுதாரணமான வளர்ச்சிப் பாதையில் பயணிக்கும். பிறக்கின்ற 2026, மாற்றங்களுக்கான ஆண்டாக மட்டுமல்ல, ஏற்றங்களுக்கான ஆண்டாகவும் அமைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
நா.வேதநாயகன்,
ஆளுநர், வடக்கு மாகாணம்.
