சவால்களைக் கடந்து மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவோம்” – இணையவழி கற்றல் மீளாய்வுக் கூட்டத்தில் ஆளுநர் வலியுறுத்தல்

வடக்கு மாகாணத்தில் கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் இணையவழி கற்றல் செயற்பாடுகள் தொடர்பான விசேட மீளாய்வுக் கலந்துரையாடல் இன்று செவ்வாய்க்கிழமை (30.12.2025) மாலை, ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் நேரடி மேற்பார்வையில், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் தொழில்நுட்ப மற்றும் வள ஒத்துழைப்புடன் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

கலந்துரையாடலை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய ஆளுநர், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் அதிபர் இ.செந்தில்மாறன் அவர்களின் தன்னார்வ முயற்சியால், ஆரம்பத்தில் தீவக வலயத்தின் ஒரு சில பாடசாலைகளுக்காகத் தொடங்கப்பட்ட இத்திட்டம், பின்னர் அவ்வலயம் முழுவதும் விஸ்தரிக்கப்பட்டு, தற்போது வடக்கு மாகாணம் தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இச்செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டபோது 151 பாடசாலைகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெற்று வந்தனர். எனினும், அண்மையில் ஏற்பட்ட ‘டித்வா’ பேரிடர்ச் சூழலுக்குப் பின்னர் மாணவர்களின் பங்குபற்றல் எண்ணிக்கையில் வீழ்ச்சி அவதானிக்கப்பட்டது. தற்போது அந்த நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், ஆரம்பக்கால எண்ணிக்கையை நாம் மீண்டும் எட்டவேண்டியது அவசியமாகும் எனச் சுட்டிக்காட்டினார்.

இத்திட்டத்தை முன்னெடுப்பதில் ஒவ்வொரு வலயத்திலும் காணப்படும் சவால்கள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது. குறிப்பாக, இணைய வசதிகள் இன்மை மற்றும் தொழில்நுட்பச் சிக்கல்கள் பிரதான தடையாக உள்ளமை ஆளுநரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.

இதற்குப் பதிலளித்த ஆளுநர், இணைய வசதியற்ற பாடசாலைகளின் விவரங்கள் கிடைக்கப்பெற்றதும், அது தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தின் கவனத்துக்குக் கொண்டுசென்று, தீர்வைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதேவேளை, சில பாடசாலைகளின் அதிபர்கள் தமது மாணவர்களுக்குச் சொந்த முயற்சியில் மேலதிக வகுப்புக்களை நடத்துவது பாராட்டுக்குரியது. அத்தகைய பாடசாலைகள் மற்றும் அதிபர்களின் விவரங்களையும் எனக்கு அறிக்கையாகத் தாருங்கள். தீவக வலயம் இச்செயற்றிட்டத்தில் முழுமூச்சாக அர்ப்பணிப்புடன் ஈடுபடுவதைப் போன்று, ஏனைய கல்வி வலயங்களும் தமது செயற்பாடுகளைத் தீவிரப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

இக்கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் அதிபர், இத்திட்டத்தின் புள்ளிவிவரங்களை முன்வைத்ததுடன், தமது கல்லூரிச் சமூகத்தால் முன்னெடுக்கப்பட்ட விசேட நிவாரணப் பணிகள் குறித்தும் தெளிவுபடுத்தினார்.

பேரிடரினால் பாதிக்கப்பட்ட, இவ்வகுப்புக்களில் பங்குபற்றிய 221 மாணவர்களுக்குத் தலா 3,500 ரூபா பெறுமதியான நிவாரணப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளன.

மடிக்கணினி மூலம் இக்கற்றல் செயற்பாட்டை முன்னெடுத்த 3 பாடசாலைகளுக்கு யாழ். இந்துக் கல்லூரியால் பல்லூடக எறிவிகள் (Multimedia Projectors) அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.

இணைய வசதி அறவே இல்லாத பிரதேசங்களில் உள்ள மாணவர்களை, ஒரு மையப் பாடசாலையில் ஒன்றிணைக்க முடியுமாயின், அப்பாடசாலைக்குச் செய்மதி ஊடான இணைய வசதியை ஏற்படுத்திக் கொடுக்கவும் யாழ். இந்துக் கல்லூரித் தரப்பு தயாராக உள்ளதாக உறுதியளிக்கப்பட்டது.

தற்போது கற்பிக்கப்படும் பாடங்களுக்கு மேலதிகமாக, மேலும் பல பாடங்களைக் கற்பிக்கவும் இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

மாணவர்களின் கல்வி இடைவிலகலைத் தடுக்கும் நோக்கில் அறிவுறுத்தலொன்றை ஆளுநர் இதன்போது விடுத்தார். பாடசாலைக்குத் தொடர்ச்சியாகச் சமுகமளிக்காத மாணவர்கள் தொடர்பில், பாடசாலை அதிபர்கள் அல்லது வலயக் கல்விப் பணிமனைகள் ஊடாக அந்தந்தப் பிரதேச செயலகங்களுக்கோ அல்லது பொலிஸ் நிலையங்களுக்கோ அறிவிப்பதற்குரிய பொறிமுறையை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.

பேரிடர் காலத்திலும் மாணவர்களின் நலன் கருதி நிவாரணப் பணிகளை முன்னெடுத்தமைக்காக, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபருக்கு ஆளுநரால் விசேட பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், உதவிச் செயலாளர், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் மற்றும் வடக்கு மாகாணத்தின் 13 கல்வி வலயங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.