மாண்புமிகு ஜனாதிபதி அவர்களின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் ‘தூய்மை இலங்கை’ (Clean Sri Lanka) செயற்றிட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில்இடம்பெற்றது.

மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் ‘தூய்மை இலங்கை’ (Clean Sri Lanka) செயற்றிட்டத்தை, வட மாகாணத்தில் வினைத்திறனாகவும் ஒருங்கிணைந்தும் முன்னெடுப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (24.12.2025) புதன்கிழமை, வட மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் தூய்மை இலங்கை செயற்றிட்டத்தின் மாகாண இணைப்பாளர் சு.கபிலன், மாவட்டச் செயலாளர்கள், மாகாண, மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மற்றும் திணைக்களத் தலைவர்கள் எனப் பலரும் நேரடியாகவும் இணையவழி ஊடாகவும் கலந்துகொண்டனர்.

கலந்துரையாடலைத் தொடங்கி வைத்து உரையாற்றிய கௌரவ ஆளுநர், நடப்பாண்டில் மத்திய மற்றும் மாகாண நிர்வாகங்கள் ஊடாகத் தனித்தனியாகச் செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதனால் ஒரே திட்டத்தை இரு நிர்வாகங்களும் மேற்கொள்ளும் நிலை ஏற்பட்டது. இதனைத் தவிர்க்கும் வகையிலும், வளங்களை வினைத்திறனாகப் பயன்படுத்தும் வகையிலும் எதிர்காலத்தில் இரு நிர்வாகங்களும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும், என வலியுறுத்தினார்.

2026ஆம் ஆண்டுக்கான திட்டங்களை வகுக்கும்போது, மாவட்டச் செயலாளர்கள் தங்கள் மாவட்டத்திலுள்ள அனைத்து அரச திணைக்களங்களிடமிருந்தும் நடைமுறைப்படுத்தக்கூடிய திட்டங்களைப் பெற்று விரைவாகச் சமர்ப்பிக்க வேண்டும் எனவும், இதற்கான நிதியுதவிகளை மாகாண இணைப்பாளர் ஊடாகக் கோர முடியும் எனவும் ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.

எதிர்வரும் ஆண்டில் மாகாணம் முழுவதும் விரிவுபடுத்தப்பட வேண்டிய முக்கிய விடயங்கள் குறித்தும் ஆளுநர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

சமூகத்தைச் சீரழிக்கும் உயிர்கொல்லி போதைப்பொருள் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வுச் செயற்பாடுகளுக்கு முன்னுரிமை அளித்தல். மாணவர்கள் மத்தியில் வீதி விபத்துக்கள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தல் மற்றும் முச்சக்கர வண்டிச் சாரதிகளுக்கானப் பயிற்சிகளை வழங்குதல். மாணவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சிகளைப் பரவலாக்கல். முன்பள்ளிச் சிறுவர்கள் முதல் அனைவருக்கும் கழிவுகளைத் தரம் பிரித்தல் தொடர்பான பழக்கவழக்கங்களை ஊக்குவிக்கும் விழிப்புணர்வுத் திட்டங்களை முன்னெடுத்தல். ஜனாதிபதி நிதியத்தின் சேவைகள் மற்றும் பயன்கள் குறித்துப் பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்தி, அதனை மக்கள் பெற்றுக்கொள்வதை உறுதி செய்தல்.

இதன்போது கருத்துத் தெரிவித்த மாகாண இணைப்பாளர் சு.கபிலன், தூய்மை இலங்கை செயற்றிட்டம் தற்போது நிறுவனமயப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் கிராமிய மட்டம் வரை சென்றடைய வேண்டும் என்பதே எமது நோக்கம். கடந்த கால சவால்களைக் கருத்திற்கொண்டு, அடுத்த ஆண்டில் இச்செயற்றிட்டத்தை ஒருங்கிணைந்த முறையில் வினைத்திறனாக முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளோம், எனக் குறிப்பிட்டார்.

மாவட்ட மற்றும் மாகாண மட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் குறித்து இதன்போது ஆராயப்பட்டதுடன், வடக்கில் 9 பேருந்து நிலையங்களைப் புனரமைக்கும் செயற்பாடுகள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

மேலும், இச்செயற்றிட்டத்தின் பிரதான நோக்கமான பொதுமக்களின் ‘நடத்தை மாற்றம்’ குறித்தும், அதனை ஏற்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் நீண்ட நேரம் ஆராயப்பட்டது. 2026ஆம் ஆண்டுக்கான முழுமையான திட்ட வரைவு தயாரிக்கப்பட்ட பின்னர் மீண்டும் கூடித் தீர்மானங்களை மேற்கொள்ளவும் இதன்போது முடிவெடுக்கப்பட்டது.